பேல்பூரி

இங்கு அனைத்து மொழிகளிலும் ஜெராக்ஸ் எடுத்துத் தரப்படும்
சித்தரிக்கப்பட்டது
சித்தரிக்கப்பட்டது
Published on
Updated on
2 min read

கண்டது

(திருநெல்வேலி நகரில் உள்ள முக்குத் தெரு ஒன்றின் பெயர்)

'வம்பளந்தான்முக்கு'

(திருநெல்வேலி பாளையத்தில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையின் பலகையில் எழுதியிருந்தது)

'இங்கு அனைத்து மொழிகளிலும் ஜெராக்ஸ் எடுத்துத் தரப்படும்.'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

(திருவள்ளூர் அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)

'சேலை'

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.

(கோவையில் உள்ள பூங்கா ஒன்றின் பெயர்)

'பத்து பைசா பார்க்'

-எம்.சுப்பையா, கோவை.

கேட்டது

(செங்கல்பட்டு விநாயகர் கோயிலில் இருவர்..)

'ஏம்பா.. அவர் போனில் பேசிட்டே கோயில் சுத்துகிறாரே..?'

'நாம மட்டும் என்ன? அவரைப் பார்த்துகிட்டே தானே சுத்துறோம்...?'

-ஜி.அர்ஜூனன், செங்கல்பட்டு.

(ஆவடியில் இனிப்புக் கடை ஒன்றில் கடை உரிமையாளரும், வேலை கேட்டு வந்தவரும்..)

'ஸ்வீட் கடையில் வேலை கேட்கிறாயே? உனக்கு என்ன தகுதி இருக்கு?'

'சார்.. எனக்கு சர்க்கரை வியாதி இருக்கு.. ஸ்வீட் சாப்பிட மாட்டேன். அது போதாதா?'

-ஏ.விக்டர்ஜான், சென்னை- 62.

(கடலூர் நகரில் பாண்டி மெயின் ரோடில் இரு போக்குவரத்துக் காவலர்கள் பேசியது)

'ஹலோ .. கான்ஸ்டபிள்... வர்ற வண்டியை அப்படியே மடக்கி ஓரம்கட்டுய்யா?'

'ஓ.கே. சார்..... சார்.. ஹெல்மெட் போட்டிருந்த அந்த ரெண்டு டூவீலர் காரங்க மட்டும் வண்டியை நிறுத்தாம தப்பிச்சுட்டானுங்க சார்...'

'யோவ்.. ஹெல்மெட் போட்டிருக்கான்னா.. அந்த வண்டியோட ஜாதகத்தையும் சரியா வெச்சிருப்பான்னு அர்த்தம். நீ கையை காட்டியதும் ஓரம்கட்டி நின்னவ ஒருத்தவனாவது ஹெல்மெட் போட்டிருக்கானா பாரு.. இவனுங்க வண்டியோட ஜாதகத்தையும் ஒழுங்கா வச்சிருக்க மாட்டாங்கன்னு அர்த்தம். இது கூட தெரியாமா...?'

-உ.அரசு, புதுச்சேரி.

யோசிக்கிறாங்கப்பா!

அனுமதி இல்லாமல் படுக்கை அறைக்குள் நுழையும் உரிமை

கனவுக்கு உண்டு.

-பர்வதவர்த்தினி, பம்மல்.

மைக்ரோ கதை

அலுவலகம் முடிந்து வீட்டுக்குள் நுழைந்த கையோடு தட்டுடன் எதிர்வீட்டுக்குச் சென்ற ராகவன், 'ஆன்டி.. கொஞ்சம் சோறு கிடைக்குமா?'என்று கேட்டான்.

'இல்லையே தம்பி.. இப்போதான் தண்ணீர் ஊற்றி வைத்தேன். வேணும்னா தோசை மாவு இருக்கு.. தரட்டுமா?'என்று எதிர்வீட்டுக்காரி உஷா கூறினாள்.

'ஆன்டி.. தண்ணீர் ஊற்றிய சோறு இருந்தாலும் பரவாயில்லை. கொஞ்சம் கொடுங்க?'என்று ராகவன் வாங்கி, தண்ணீரை பிழிந்தெடுத்தான். பின்னர், அதில் பாலை ஊற்றி, வெளியே காத்திருந்த தெருநாய்க்குப் போட்டான். அதை சாப்பிட்ட நாய் வாலை ஆட்டிவிட்டு சென்றது.

இதைப் பார்த்தவாறு நின்றிருந்த உஷாவிடம் ராகவன், 'தேங்க்ஸ் ஆன்டி.. தினமும் நாய்க்கு பால்சாதம் போடுவேன். இன்னிக்கு சமைக்கலை. இந்தப் புண்ணியம் உங்களுக்குதான்'என்று வணங்கினான்.

-பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்.

எஸ்.எம்.எஸ்.

விடியல் என்பது கிழக்கில் அல்ல;

நம் உழைப்பில்..!

-முனைவர் உமாதேவி பலராமன், திருவண்ணாமலை.

அப்படீங்களா!

புதிய சேவைகளை வாட்ஸ் ஆஃப் அறிமுகம் செய்துள்ளது. 'ஸ்டேடஸ் லைக்', 'பிரைவேட் மென்ஷன்ஸ்', 'ஸ்டேடஸ் ரீஷேர்'ஆகியவற்றை ஆன்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். ஆகியவற்றில் அறிமுகமாகி வருகின்றன.

ஸ்டேடஸ் லைக்: பிறர் வைக்கும் ஸ்டேடஸ் பிடித்திருந்தால் அவருக்கு நமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம். ஸ்டேடஸ் கீழ் வலது பக்கத்தில் உள்ள இதயம் வடிவிலான பொத்தனை அழுத்தி, விரும்பியதாகத் தெரிவிக்கலாம். யாரெல்லாம் நமது ஸ்டேடஸூக்கு லைக் கொடுத்தார்கள் என்பதையும் குறிப்பிட்ட பயனாளர் மட்டும் காணலாம்.

பிரைவேட் மென்ஷேன்ஸ்: குறிப்பிட்டவர்களின் கவனத்தை ஈர்க்கவே பலர் தங்களது ஸ்டேடஸை அவ்வப்போது மாற்றுவதுண்டு. அப்படி யாருக்காக ஸ்டேட்டஸை மாற்றுகிறமோ அவர்களுக்கு தெரிய வைக்கும் வகையில் அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு சேர்த்தால், அவர்களுக்கு நோட்டிபிகேஷன் தகவல் செல்லும்.

ஸ்டேடஷ் ரீஷேர்: பிறரது ஸ்டேடஸ் பிடித்திருந்தால், அதை அப்படியே பகிர இந்தப் புதிய சேவை உதவுகிறது. இதன் மூலம் நமக்கு தெரிந்தவரின் தனிப்பட்ட தகவல்களைப் பிறருக்கு தெரியாமல் வெறும் ஸ்டேடஸை மட்டும் பகிரலாம்.

ஸ்பேசிஃபிக் தீம்ஸ்: 22 சாட் தீம்களை தேர்வு செய்து கொள்ளவும், இதற்கான 20 வண்ணங்களை மாற்றவும் இந்த புதிய சேவை உதவுகிறது. இந்த சேவையை முதலில் பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு வாட்ஸ் ஆஃப் அறிமுகம் செய்து வருகிறது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com