ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பௌத்திரம் மீண்டும் வருவது ஏன்?

நான் இருமுறை 'பௌத்திரம்' உபாதைக்கு அறுவைச் சிகிச்சை செய்தும் மீண்டும் வந்துள்ளது. இதற்கு ஆயுர்வேத எளிய மருந்து உள்ளதா?
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பௌத்திரம் மீண்டும் வருவது ஏன்?
Updated on
2 min read

நான் இருமுறை 'பௌத்திரம்' உபாதைக்கு அறுவைச் சிகிச்சை செய்தும் மீண்டும் வந்துள்ளது. இதற்கு ஆயுர்வேத எளிய மருந்து உள்ளதா?

-கணேசன், கோவை.

பெரிய உபாதைக்கு அதுவும் இருமுறை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட உபாதைக்கு எளிய ஆயுர்வேத மருந்து உள்ளதா? என்று நீங்கள் கேட்பது வியப்பாக உள்ளது.

'பௌத்திரம்' என்பது தமிழில் 'ஆசனவாய் மூலம்' என்று பொருள்படும் ஒரு மருத்துவ நிலை. இது ஆசனவாய் அல்லது மலக்குடலுக்கு அருகில் ஒரு சுரங்கப்பாதை அல்லது குழாய் போன்ற இணைப்பு உருவாகும்போது ஏற்படுகிறது. இதில் ஆசனவாய் வலி, வீக்கம், சிவத்தல், ஆசன வாயில் இருந்து சீழ், மலம் அல்லது ரத்தம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகளைக் கொண்டது.

நோய்த் தொற்று, காயங்களால் பௌத்திரம் ஏற்படுகிறது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரும் இது தொடர்கிறது என்றால், பெருங்குடல், ஆசனவாய் இடையிலுள்ள எண்ணிலடங்கா சுரப்பிகளில் தொற்று, சீழ் ஏற்படுத்தி கால்வாய் வழியாக ஆசன வாய் நோக்கிச் சென்று அசாதாரண பாதையை உங்களுக்கு திறந்தபடியே விட்டுச் செல்கிறது. சீழ் உற்பத்தி ஏற்படாமலிருக்க நீங்கள் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பால், மாமிச வகை உணவுகள், நெய், தயிர், கீரை, இனிப்பு மற்றும் புளிப்புள்ள பொருள்கள், வெளிச்சாப்பாடு, அசுத்த நீர் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். அகத்திக்கீரை, துளசி, மிளகு, மஞ்சள், சுக்கு, கசப்பு, துவர்ப்புச் சுவை கொண்ட கறிகாய்கள் சாப்பிட உகந்தவை. ஒரே இடத்தில் வெகுநேரம் அமர்ந்திருத்தல், நொறுக்குத் தீனி, பல நிறங்களிலுள்ள குளிர்பானங்கள் போன்றவையும் தவிர்க்கப்பட வேண்டியவையே.

அறுவைச் சிகிச்சை நிபுணர் வெளியில் இருந்து செய்யக் கூடிய சிகிச்சையை உள்ளே சென்று பெருங்குடல்- ஆசனவாய்ப் பகுதியில் அமர்ந்துகொண்டு மருந்தால் செய்ய முடியுமா? என்றால் அதற்கு ஒரு சூரண மருந்தை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.

சுத்த குல்குலு- 5 பங்கு, திப்பிலி- 1 பங்கு, திரிபலை- 1 பங்கு, இலவங்கப்பட்டை- கால் பங்கு, ஏலம்- கால் பங்கு, அனுபானம்- தேன்.

ஐந்து பங்கு (ஒரு தேக்கரண்டி) சூரண மருந்தில் பத்து மில்லி ( 2 தேக்கரண்டி) தேன் குழைத்து, காலை, இரவு உணவுக்கு ஒரு மணி நேரம் முன் நக்கிச் சாப்பிடவும்.

தீரும் நோய்கள்: குஷ்டம், பௌத்திரம், குல்மம், க்ருமி, சுமார் ஒரு மாதம் முதல் நாற்பத்தி எட்டு நாள்கள் வரை சாப்பிடலாம். இந்தச் சூரண மருந்து விற்பனையிலுள்ளது.

மூலநோய், பௌத்திரம், ஆசனவாய் பிளவு, பைலோநிடல் சைனஸ் போன்ற அனோரெக்டல் நிலைமைகளுக்குச் சிகிச்சை அளிக்க 'க்ஷôரசூத்திரம்' என்ற சிகிச்சை முறையையும் ஆயுர்வேதம் சிறந்தது என்று கூறுகிறது.

'க்ஷார' என்பது மருத்துவத் தாவரங்களில் இருந்து பெறப்படும் காரப் பொருளைக் குறிக்கிறது. 'சூத்திரம்' என்றால் நூல் என்று பொருள். எனவே, க்ஷாரசூத்திரம் என்பது பௌத்திர ஓட்டையினுள் செலுத்திக் கட்டும் மருந்து நூல் பிரயோகமாகும். இது ஒரு செலவு குறைந்த நடைமுறையாகும்.

மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய நேரம் குறைவு. குணமடைதல் விரைவானது. மீண்டும் வருவதற்கான வாய்ப்புகளும் குறைக்கப்படுகின்றன. சீழ், கிருமிகளின் உற்பத்திப் பெருக்கத்தை அறவே முறியடிக்கும் சிகிச்சை முறையாகும். இந்தப் பண்டைய ஆயுர்வேத நுட்பம் பௌத்திரத்தை குறைந்தபட்ச சிக்கல்களும் சிகிச்சை அளிப்பதில், அதன் செயல்திறனுக்காகப் பிரபலம் அடைந்துள்ளது.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com