
தமிழ் ஆசிரியராய் ஜொலிக்க வேண்டியவர், ஓவிய ஆசிரியராக மாறி தான் கற்ற கலையை மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார் நாற்பத்து ஐந்து வயதான ஏ.மகேந்திரன். நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட நா.புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றும் அவரிடம் பேசியபோது:
'நான் பிறந்து வளர்ந்தது புதன்சந்தை அண்ணா நகர். சிறு வயது முதலே ஆசிரியர் பணி மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. எம்.ஏ., பி.எட். படித்தேன். இலக்கிய, இலக்கணங்களை ஆழ்ந்து படித்தேன்.
தமிழ் ஆசிரியராக வேண்டும் என்ற கனவுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வை மூன்று முறை எழுதியும் தேர்ச்சி பெற முடியவில்லை. 2007-இல் கோவையில் உள்ள லலித் கலாஷேத்ரா அகாதெமியில் ஓவியம் பயின்றேன். 2014- ஆம் ஆண்டுக்குள் ஓவியத்தில் ஆராய்ச்சிப் படிப்பை முடித்தேன்.
பி,எஸ்.ஏ., டி,டி,சி. போன்ற ஓவியப் பணிக்கான கல்வி சான்றிதழ்களைப் பெற்றேன். 2019-இல் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஓவிய ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். தற்போது நா.புதுப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் 6 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன்.
ஓவியக் கலையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற முனைப்புடன் தினமும் பயிற்சி பெற்று வருகிறேன். மாணவர்களுக்கும் இந்தக் கலையை முழுமையாக கற்பித்து வருகிறேன். எனது ஓவியத்தைப் பார்த்து அரசு விழாக்கள், தனியார் விழாக்களில் ஓவியங்களை மக்கள் பார்வையிடும் வகையில், கண்காட்சி அரங்கை தனியாக ஒதுக்கி கொடுக்கின்றனர்.
இதுவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண ஓவியங்களை வரைந்துள்ளேன். அசலுக்கும், நகலுக்கும் வித்தியாசம் தெரியாத வகையிலான ஓவியமே சாதனையாக இருக்க வேண்டும் என கருதுகிறேன். பறவைகள், கடவுள் ஓவியங்கள் மனதுக்கு நிறைவை தருபவை.
என்னுடைய மாணவர்கள் 9 பேர் ஓவியப் போட்டிகளில் பங்கேற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனர். தேசத்துக்குப் பெருமைத் தேடித் தரும் வகையிலான ஓவியங்களை மாணவர்கள் வரைந்து சாதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். அது நிச்சயம் வெல்லும்' என்கிறார் மகேந்திரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.