ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உணவு மாறுபாட்டால் அவதிக்கு வழி என்ன?

என் வயது முப்பத்து ஆறு. வியாபார நிமித்தமாக, பல மாநிலங்களுக்குச் சென்று பேச வேண்டிய சூழ்நிலை.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உணவு மாறுபாட்டால் அவதிக்கு வழி என்ன?
Updated on
2 min read

என் வயது முப்பத்து ஆறு. வியாபார நிமித்தமாக, பல மாநிலங்களுக்குச் சென்று பேச வேண்டிய சூழ்நிலை. உணவு மாறுபாட்டால், நேரம் தவறி உண்பதால் என்றும் வயிற்றில் வாயுவின் சீற்றம், மந்தமான குடல்வலி, பசியின்மை, உள்மூலம், குடல்கிருமிகள், சிறுநீர்த் தொற்று போன்றவை ஏற்பட்டு அவதியுறுகிறேன். ரத்தச் சோகையும் உள்ளது. இவை குணமாக என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்.

விஜயசங்கர், சேலம்.

மோர் அல்லது தயிரின் மேல் நிற்கக் கூடிய தண்ணீர் இவற்றில் கலந்து சாப்பிடக் கூடிய தரமான ஆயுர்வேதச் சூரண மருந்து ஒன்று இருக்கிறது. அது உங்களுக்குப் பயன்படலாம். இந்தச் சூரண மருந்தைத் தயாரிக்கும் முறையை சக்ரதத்தர் எனும் ஆயுர்வேத முனிவர் இவ்வாறு விளக்குகிறார்.

திப்பிலி, திப்பிலிமூலம், தனியா, கருஞ்சீரகம், இந்துப்பு, வாயு விடங்கம், பச்சிலை, நாகப்பூ, துவர்ச்சிலை உப்பு, மிளகு, சீரகம், சுக்கு, லவங்கப்பட்டை, ஏலக்காய், கடல் உப்பு, மாதுளம் பழத்தோல் மற்றும் கொடுக்காய் புளி.

இதில், திப்பிலி முதல் நாகப்பூ வரை 100 கிராம், துவர்ச்சிலை உப்பு 250 கிராம், மிளகு, சீரகம், சுக்கு 50 கிராம் வீதம், லவங்கப்பட்டை மற்றும் ஏலக்காய் வகைக்கு 25 கிராம், 400 கிராம் கடலுப்பு, 200 கிராம் மாதுளம் பழத்தோல், 100 கிராம் கொடுக்காய் புளி. இவை அனைத்தும் ஒன்றுசேர்த்து, மைய இடித்து துணியால் சலித்து, கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்த வேண்டும்.

வயிற்றில் வாயு கபங்களால் ஏற்படும் உபாதைகளைக் கண்டிக்கக் கூடியது. மூன்று அல்லது நான்கு சிட்டிகை எடுத்து, நூறு மில்லி மோருடன் கலந்து அல்லது தயிர்த் தண்ணீருடன் கலந்து காலை, இரவு உணவுக்கு அரை மணி நேரம் முன் சாப்பிடவும்.

நீங்கள் குறிப்பிடும் உபாதைகளுடன் உண்ட உணவு செரிவர செரிக்காமல் அப்படியே மலத்துடன் வெளியேறும் தன்மை, தோல் சார்ந்த அரிப்பு, பௌத்திரம், இதய நோய்கள், மப்பு நிலை, மண்ணீரல் உபாதை, ஆஸ்துமா, இருமல், சிறுநீர்க் குழாய்களில் சிறிய கற்கள் போன்ற உபாதைகளையும் நீக்கும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த சூரணத்தை எப்படி வாங்கிப் பொடித்துத் தயார் செய்வது என்று தங்களுக்கு மலைப்பாக இருந்தால், ஆயுர்வேத மருந்துக் கடைகளில் விற்கப்படும் 'பாஸ்கரலவனம்' அல்லது 'லவனபாஸ்கரம்சூரணம்' என்ற பெயரிலுள்ள மருந்தை வாங்கிச் சாப்பிடவும்.

பல மாநிலங்களில் உணவு மாறுபாடு என்பது இயற்கையானதும், நேரம் தவறி உண்பதால் ஏற்படும் செரிமான உபாதைகளுக்கு நீங்கள் ஆறு மாதத்துக்கு ஒருமுறையாவது ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் தங்கி, மூலிகை நெய்தைலம், வஸை மஜ்ஜை போன்ற நெய்ப்புப் பொருள்களில் ஒன்றிரண்டைக் கலந்து சாப்பிட்டு, நெய்ப்பின் பரிபூரண வரவை, உட்புறத் தாதுக்களால் உணரப்பட்டதும், உடலெங்கும் மூலிகைத் தைலத்தைத் தடவி வியர்வையை நன்கு வரவழைக்கும் நீராவிக் குளியல்,, மூலிகை இலைகளால் செய்யப்படும் ஒத்தடம் போன்றவை செய்துகொண்டு வாந்தி, பேதி, வஸ்தி எனும் குடலைச் சுத்தப்படுத்தும் சிகிச்சை முறைகளைச் செய்துகொள்வது நல்லது.

நெய்ப்புச் சிகிச்சையால் கவரப்படும் உடல் உட்புற அழுக்குகள், வியர்வைச் சிகிச்சையினால் உருக்கப்பட்டு, குடலுக்கு வந்து சேர்ந்தவுடன் அவற்றை வெளியேற்றும் மற்ற குடல் சுத்தி முறைகளால் நீங்கள் வனப்புடனும், வலுவுடனும் வாழ்வதற்கான ஏற்பாட்டைச் செய்துகொள்கிறீர்கள்.

முன்குறிப்பிட்ட சூரண மருந்தால் உங்கள் வாழ்வாதாரமான ஆரோக்கியத்தை நிலைநிறுத்த பெரிதும் உதவுகிறது.

உங்களைப் பொருத்தவரையில் உணவு, செயல்கட்டுப்பாடுகளை விதிப்பது மிகவும் கடினம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com