/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பல நோய்கள்... ஒரே மருந்து!

ஆங்கில மருத்துவத்தில் ஒரு நோய்க்கு ஒரு மருந்து என வழங்கப்படுவதைப் போல அல்லாமல் பல நோய்களுக்கு ஒரு மருந்து என்று ஆயுர்வேதம் வழங்குகிறதா?

News image

நெய்

Updated On :4 ஏப்ரல் 2026, 10:38 pm

ஆங்கில மருத்துவத்தில் ஒரு நோய்க்கு ஒரு மருந்து என வழங்கப்படுவதைப் போல அல்லாமல் பல நோய்களுக்கு ஒரு மருந்து என்று ஆயுர்வேதம் வழங்குகிறதா?

-ராமசுப்பு, தஞ்சாவூர்.

பல மூலிகைகளின் கலவையினால் நீங்கள் குறிப்பிடுவது போல பல நோய்களுக்கு ஒரு மருந்து என்பது சாத்தியமாகும். அந்த வகையில் ஒரு மூலிகை நெய் மருந்தை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.

வேப்பம்பட்டை, சீந்தில் கொடி, ஆடாதோடை வேர், பேய்ப்புடல், கண்டங்கத்திரி வேர் ஆகியவற்றை வகைக்கு பத்து பலம் எடுத்து, ஐந்நூற்று பன்னிரண்டு பலம் தண்ணீர் விட்டுக் காய்ச்சுவார்கள்.

எட்டில் ஒன்றாக நீர் வற்றியதும் கல்கமாக வட்டத்திருப்பிக் கிழங்கு, வாயுவிடங்கம், தேவதாரு, அத்தி திப்பிலி, சவர்காரம், துவர்ச்சிலைகாரம், சுக்கு, மஞ்சள், சதகுப்பை, அத்தி திப்பிலி வேர், சீமக்கொட்டம், செருப்புண்ணயரி, மிளகு, குடகபாலை வேர்த் தோல், ஓமம், கொடுவேலிக் கிழங்கு, கடுக ரோஹிணி, சேராங்கொட்டை, வசம்பு, திப்பிலி வேர், மஞ்சிட்டி, அதிவிடயம், விடயம், குரோசாணி போன்றவை வகைக்கு பன்னிரண்டு பலம், நன்றாகச் சுத்தம் செய்யப்பட்ட ஐந்து பலம் குக்குலுவும் சேர்த்து ஒரு லிட்டர் நெய் காய்ச்சி எடுப்பார்கள்.

இந்த நெய் மருந்தை காலை, மாலை என இரு வேளையாக, வயிற்றிலுள்ள பசி எவ்வாறு உள்ளது என்பதை நன்கு அறிந்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர - மிகவும் பலம் வாய்ந்த எலும்புகளுக்கு இடையே ஏற்படும் கடும் வலியிலும் எலும்புகளிலும் மஜ்ஜையிலும் பரவி கடும் வலியை ஏற்படுத்தும் வாத நோய்களிலும் மிகச் சிறப்பாகச் செயலாற்றும்.

அதுபோலவே, உள்புறத் தாதுக்களில் பரவி நின்று பெரும் உபாதையைத் தரும் குஷ்ட நோயிலும், நாடீவ்ரணம் எனும் சீழுடன் ஓட்டைகளை அமைத்து நிற்கும் குழாய்களிலும், கேன்சர் கட்டிகளிலும், பெளத்திரம் எனும் பெரு வியாதியிலும், கண்ட மாலை எனும் நிணநீர் கிர்ந்தி வீக்கங்களிலும், கழுத்துக்கு மேற்பட்ட அனைத்து உபாதைகளிலும், குல்மம் எனும் வாயு பந்து போல் திரண்டு உருண்டு நிற்கும் உபாதையிலும், உள் மற்றும் வெளி மூலத்திலும் சர்க்கரை உபாதையிலும் இதை மருந்தாகப் பயன்படுத்தலாம்.

மேலும் காச நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ருசியின்மை, மூச்சிரைப்பு உபாதை, மூக்கில் இருந்து நீராக ஒழுகும் ஜலதோஷம், வயிற்றில் ஏற்படும் தசை - குடல் பிடிப்பு, இதயம் சார்ந்த வாயுப் பிடிப்பு, வலி, சோகை உபாதை, மதுபானத்தினால் ஏற்படும் மத்துப் பிடித்த நிலை, சீழ்க்கட்டிகள், வாதரத்தம் எனும் பூட்டுகளில் ஏற்படும் வலியுடன் கூடிய எரிச்சல், வீக்கம் உபாதைகளிலும் இம்மருந்தைப் பயன்படுத்தி குணம் பெறலாம்.

'ஸ்நேக பானம்' எனும் ஒரு வைத்திய முறையில் இந்த நெய் மருந்து சிறப்பான செயல்களைச் செய்யும். முதல் நாள் சிறிய அளவில் இம்மருந்து குடிப்பதற்காக வழங்கப்படும். அடுத்த நாள் முதல் அளவு சிறிது சிறிதாகக் கூட்டி வழங்கப்படும். இந்த நெய்யின் வரவானது முழுமையான அளவை அடைந்தவுடன், உடல் சில அறிகுறிகள் மூலம் தெளிவுபடுத்தும். அத்துடன் இதனை நிறுத்திவிட்டு, குடலைச் சுத்தப்படுத்தும் மருந்துகளைப் பிரயோகிப்பது இன்றும் ஆயுர்வேத மருத்துவமனைகளில் வழக்கத்தில் உள்ளது.

மேற்குறிப்பிட்ட நெய் மருந்து ஓர் உதாரணம் மட்டுமே. எண்ணற்ற ஆயுர்வேத கஷாய - லேஹிய மருந்துகள் இதுபோலவே பல நோய்களுக்கு தனி மருந்தாக அளிக்கப்பட்டு வருகிறது. அவற்றின் பிரயோக விசேஷங்களை ஆயுர்வேத மருத்துவர்களால் மட்டுமே ஊகித்தறிந்து அளிக்க முடியும். முன் குறிப்பிட்ட நெய் மருந்தை பல ஆயுர்வேத மருந்து தயாரிப்பாளர்களும் விற்பனை செய்து வருகின்றனர்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.