சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிறு எரிச்சல் குணமாக...

எனக்கு வயது 41. எச்.பைலோரி பாக்டீரியா தொற்று ஆரம்ப நிலையில் உள்ளது.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 10:43 pm

எனக்கு வயது 41. எச்.பைலோரி பாக்டீரியா தொற்று ஆரம்ப நிலையில் உள்ளது. மேல் வயிறு எரிச்சல், அதிக பசி எடுக்கிறது. இது எதனால் ஏற்படுகிறது? என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்?

கணேஷ், கும்மிடிப்பூண்டி.

மனிதர்களின் இரைப்பையைத் தாக்கும் ஒருவகை பாக்டீரியா எச். பைலோரி (ஹெலிகோபேக்டர் பைலோரி) ஆகும். இது இரைப்பையின் பாதுகாப்புப் படலத்தைச் சிதைத்து, இரைப்பை அழற்சி (கேஸ்ட்ரைட்டிஸ்), குடல் புண்களை (பெப்டிக் அல்சர்) உண்டாக்குகிறது.

பொதுவாக இந்தப் பாக்டீரியா பின்வரும் வழிகளில் பரவுகிறது.

அசுத்தமான உணவு மற்றும் நீர்: தூய்மையற்ற தண்ணீரைக் குடிப்பது அல்லது சரியாகக் கழுவப்படாத தட்டுகள், இலைகளில் உணவுகளை உண்பது.

நேரடித் தொடர்பு: பாதிக்கப்பட்ட நபரின் எச்சில் அல்லது பிறரின் அசுத்தமான கைகள் மூலம் பரவுதல்.

சுற்றுச்சூழல்: அதிக மக்கள் நெருக்கமுள்ள இடங்கள், சுகாதாரமற்ற வாழ்க்கை முறை.

பலருக்கு ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் தெரிவதில்லை.

பாதிப்பு அதிகரிக்கும் போது கீழ்க்கண்டவை ஏற்படலாம்:

வயிற்றின் மேல் பகுதியில் எரியும் உணர்வு அல்லது வலி.

சாப்பிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு வலி அதிகரித்தல்.

வயிறு உப்புதல், அடிக்கடி ஏப்பம் வருதல்.

குமட்டல் மற்றும் வாந்தி.

எடை குறைதல் அல்லது பசியின்மை.

சிலருக்கு அடிக்கடி அகோரப்பசி எடுத்தல்.

கருப்பு நிற மலம் (உள்புற ரத்தப்போக்கின் அறிகுறி).

ஆயுர்வேதத்தின்படி எச். பைலோரித் தொற்று என்பது பாசகபித்தம், சமான அபான குடல் வாயுக்களின் சீர் கேட்டால் ஏற்படும் உபாதையாகும். குடலில் சேர்ந்துள்ள நச்சுகளை வெளியேற்றி, செரிமானத்தைச் சீராக்குவதே இதன் முக்கிய குறிக்கோள்.

வாயுவிடங்கம் எனும் மூலிகை மருந்து, குடல் கிருமிகளை அழிப்பதில் சிறந்தது. அதனுடன் கொடுவேலி, சுக்கு, எள், புரசு, கல்யாண முருங்கை போன்றவை சேர்க்கப்பட்டு விற்பனையில் உள்ள விழால் வேராதி' கஷாயத்தை காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், எச்.பைலோரிக்கு எதிராக வேலை செய்து, பசியைச் சீராக்கி, குடல் வாயுவையும் கட்டுப்படுத்தும் திறனுடையது.

அதிமதுரம், நெல்லி முள்ளி, சீந்தில் கொடி ஆகியவற்றின் சூரணத்தை ஒன்றாகக் கலந்து, அதிலிருந்து இரண்டு முதல் நான்கு கிராம் வரை எடுத்து, சிறிது தேன் குழைத்து, மதிய உணவுக்கு அரை மணி முன் சாப்பிட்டு வர, வயிற்றில் உள்ள புண் ஆறுவதற்கு ஏதுவாக இருக்கும். மேலும் வயிற்றுப் படலத்தைப் பாதுகாக்கும், அமிலத்தைக் குறைக்கும். உடல் சக்தியை அதிகரித்து, கிருமி எதிர்ப்பை உருவாக்கும். குடல் அழற்சியைக் குறைக்கும்.

அவிபத்தி' சூரணத்தை தேனுடன் குழைத்து 10 15 நாள்களுக்கு ஒரு முறை சாப்பிட, குடல் பித்தத்தை பேதி மூலம் வெளியேற்றி, குடல் சூட்டைத் தணிக்கும். அளவு, நேரம் போன்றவை நபருக்கு நபர் மாறுபடும். மருந்து என்பதால், மருத்துவர் உதவி தேவைப்படலாம்.

நவீன ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பாக்டீரியா தொற்றானது வாயின் உள்புறச் சவ்வுகளிலும் ஈறுகளிலும் தங்கியிருக்கக் கூடியவை என்றும், அதைக் குறைக்கவும், நீக்கவும் வாய் கொப்பளிக்கும் மருந்துகளை முதல் ஒரு வாரத்துக்குப் பரிந்துரை செய்கின்றனர்.

அந்தக் காலங்களில் கிராமப்புறங்களில் கருங்காலிக்கட்டை, நால்பாமரப்பட்டை, வேலம்பட்டை ஆகியவற்றைக் கொண்டு கஷாயம் காய்ச்சி, வாய் கொப்பளித்து வந்தனர். இதனால் எந்தப் பாக்டீரியாவும் வாயில் தங்க முடியாது. அதற்கான வேலை தற்சமயம் வாழ்க்கையில் மறுபடியும் தேவை என்பதே நிதர்சனமான உண்மை.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.