கன்னியாகுமரி மாவட்டத்தின் பெருமைகளுக்கு மேலும் ஒரு மணிமகுடம் சூட்டும் வகையில், 400 ஆண்டு பாரம்பரியமுடைய தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இங்கு தயாராகும் கோயில் நகைகள், கிராம்பு, மார்த்தாண்டம் தேன், மட்டி வாழை போன்றவை புவிசார் குறியீடு பெற்றவை.
தற்போது தோவாளையில் மட்டுமே பிரத்யேகமாக உருவாக்கப்படும் மாணிக்கமாலைக்கும் புவிசார் குறியீடை மத்திய அரசு அண்மையில் அளித்துள்ளது. மலர் மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது இதுவே முதல்முறையாகும். மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடும் கிடைத்திருப்பதால் இனி சந்தை வாய்ப்பும் பரவலாகும்.
திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் காலத்திலிருந்தே தோவாளையில் குடிசைத் தொழிலாக தொடுக்கப்படும் மாணிக்கமாலைகள்தான் அரசவை நிகழ்ச்சிகளிலும், இறைவன் சந்நிதியில் முக்கிய விழாக்களுக்கும் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளன.
இதுகுறித்து தோவாளையைச் சேர்ந்த வனிதாஸ்ரீவிடம் பேசியபோது:
பூக்கள் என்றாலே தென்மாவட்டங்களில் உடனே 'தோவாளை' என்பார்கள். சிறுவயதில் இருந்தே பூக்கள் கட்டுவதை பார்த்தே வளர்ந்தேன். தொடக்கத்தில், மல்லி, பிச்சி என தலையில் சூடிக் கொள்ளும் பூக்களையே கட்ட தொடங்கினேன். ஒருகட்டத்தில் கோயில் திருவிழாக்களுக்கு போடும் சப்பரத்தட்டி கட்டும் அளவுக்கு முன்னேறி விட்டேன்.
எங்களது குடும்பத்தின் அடையாளமே மாணிக்கமாலைதான். மாணிக்கமாலை கட்டுவது என்பது வழக்கமான பூக்கள் கட்டுவது போன்றது இல்லை. பின்னல் முறையில் இந்த மாலையை கட்ட வேண்டும். தையல் மாதிரிவரும்.
தங்கத்தில் மாணிக்கக்கல் பதித்தால் எப்படி இருக்குமோ, பார்வைக்கு அப்படியே இருக்கும். அதனால்தான் இதற்கு 'மாணிக்கமாலை' என பெயர் வந்தது. இந்தப் பெயரை திருவிதாங்கூர் மன்னர்கள்தான் சூட்டினர்.
இது பார்ப்பதற்கு பாய் விரித்தது போலவும் இருக்கும். மாணிக்கமாலை கட்டுவதற்கு தோவாளை பகுதிகளில் விளையும் அரளிப்பூவைப் பயன்படுத்துகிறோம். வெண்மை நிறத்துக்கு வெள்ளை அரளிப்பூவும், சிவப்பு நிறத்துக்கு சிவப்பு அரளியும், பச்சை நிறத்துக்கு நொச்சி இலையையும் பயன்படுத்துகிறோம். பின்னல் முறைக்கு நன்கு வளையும் திறனுடையதாக நொச்சி இலை இருக்கும். குளங்களில் கிடைக்கும் சம்பா நாரில்தான் இந்த மாலையைக் கட்டுகிறோம். இவை எல்லாமே தோவாளை பகுதியில் கிடைக்கும் வளங்கள்தான்.
நான் பி.டெக், எம்.பி.ஏ. படித்துள்ளேன். இருப்பினும், பாரம்பரியக் கலைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கைவினைக் கலைப் பட்டியலில் வரும் 'மாணிக்கமாலை' கட்டும் தொழிலை செய்து வருகிறேன். எனது குடும்பத்தினர் ஆறு தலைமுறைகளாக மாணிக்கமாலையைக் கட்டுகிறார்கள்.
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு மன்னர்கள் காலத்தில் இருந்தே மாணிக்கமாலை சூட்டப்பட்டு வருகிறது. மாணிக்கமாலை கட்டுவதில் தற்போது எனது குடும்பத்தினரும், வெகுசில குடும்பத்தினர் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.
மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அஸ்தி கன்னியாகுமரி கடற்கரையில் கரைக்க எடுத்துவரப்பட்ட காலத்தில், திருநெல்வேலி வரை மட்டுமே ரயில் போக்குவரத்து இருந்தது. அப்போது திருநெல்வேலியில் இருந்து, கன்னியாகுமரிக்கு நேரு அஸ்தி எடுத்து வந்த வாகனத்தில் மலர் அலங்காரம் செய்தது எனது தாத்தா மாடசாமி. அவர் சிறந்த கைவினை கலைஞருக்கான தேசிய விருதையும் பெற்றவர்.
எனது அப்பா, முத்தம்பெருமாள் வாழும் கைவினைபொக்கிஷம், கமலாதேவி விருதுகளையும், அம்மா தமிழரசி சிறந்த கைவினைகலைஞருக்கான மாநில விருதும் பெற்றவர். எனது பூட்டி சண்முகத்தம்மாளும் மாணிக்கமாலை கட்டியே பிரபலம் ஆனவர்.
இளம் தலைமுறைக்கான கைவினைஞர்களுக்கான கைத்திறன்போட்டியில் முதல்பரிசை நான் பெற்றுள்ளேன்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 2019இல் பிரதமர் நரேந்திரமோடியும், சீனஅதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பின்போது, அவர்கள் முன் அமர்ந்து 'மாணிக்கமாலை' தொடுத்து அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளேன்.
பள்ளியில் படிக்கும் எனது குழந்தைகளுக்கும்கூட இந்த கலையை கற்றுக் கொடுத்திருக்கிறேன்' என்கிறார் வனிதாஸ்ரீ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.