மனிதனாக இரு...

தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் பணம் சம்பாதிக்கவும், வசதியாக வாழவும்தான் பெற்றோர் கற்றுத் தருகிறார்கள்.
மனிதனாக இரு...
Published on
Updated on
1 min read

தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் பணம் சம்பாதிக்கவும், வசதியாக வாழவும்தான் பெற்றோர் கற்றுத் தருகிறார்கள். ஆனால், மனிதனாக, உற்றார் உறவினர்களுக்கு உதவியாய் இருக்க, உடனிருப்போருக்கு நல்ல நட்பாய் இருக்க, நாட்டுக்குச் சிறந்த குடிமகனாக இருக்கப் பெரும்பாலானோர் கற்றுத் தருவதில்லை.

பெற்றோரை பிரிந்து, உறவினர்களை மறந்து, தாய்நாட்டை துறந்து ஏ.சி. அறையே உலகம், கைப்பேசியே உற்றார்- உறவினர்கள், பணம் சம்பாதிப்பதே வாழ்க்கை.. என்று இயந்திரமயமாக வாழ்ந்துவரும் இளையத் தலைமுறையினருக்கு அறிவுறுத்தும் வகையில் ஓர் வரலாற்று நிகழ்வு.

ஒருநாள் மகாகவி காளிதாசர் வயல்வெளியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, தண்ணீர் தாகம் எடுத்தது. சற்று தூரத்தில் ஒரு கிராமத்துப் பெண் கிணற்றில் இருந்து தண்ணீரை இறைத்து, குடத்தில் எடுத்து வந்துகொண்டிருந்தார். அவளிடம் காளிதாசர், 'அம்மா.. தாகமாக இருக்கு.. கொஞ்சம் தண்ணீர் தருவீங்களா?'' என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பெண்ணோ, 'தருகிறேன். உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்'' என்றாள்.

உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு அந்தப் பெண்ணிடம், 'தான் யார் என்று சொல்ல வேண்டுமா?' என்ற கேள்வி எழுந்து, 'அம்மா... நான் ஒரு பயணி'' என்றார். இதற்குப் பின்னர், அந்தப் பெண்ணுக்கும் காளிதாசருக்கும் நடைபெற்ற உரையாடல்.

'உலகில் இரு பயணிகள்தான். ஒருவர் சந்திரன். மற்றொருவர் சூரியன். இவர்கள்தான் இரவும் பகலுமாகப் பயணிப்பவர்கள்.''

'அம்மா.. என்னை ஒரு விருந்தினர் என்று என வைத்துகொள்ளுங்கள்.''

'உலகில் இரண்டு விருந்தினர்கள்தான். ஒன்று செல்வம். இரண்டு இளமை. இவை இரண்டும்தான் விருந்தினர்களாக வந்துச் சென்றுவிடும்.''

'நான் ஒரு பொறுமைசாலி...''

'அதுவும் இரண்டு பேர்தான். ஒன்று பூமி. எவ்வளவு மிதித்தாலும் தாங்கும். மற்றொன்று மரம். யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக் கொண்டு,

காய்களைக் கொடுக்கும்.''

'அம்மா.. நான் ஒரு பிடிவாதக்காரன்...''

'உலகிலேயே இரண்டு பிடிவாதக்காரர்கள்தான். ஒன்று 'குடி'. மற்றொன்று 'நகம்'. இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும், பிடிவாதமாக வளரும்..''

'அம்மா.. நான் ஒரு முட்டாள்.''

'உலகிலேயே இரண்டு முட்டாள்கள்தான். ஒன்று நாட்டை ஆளத் தெரியாத அரசன். மற்றொன்று அவருக்கு துதி பாடும் அமைச்சர்..''

எதைச் சொன்னாலும் பதிலைச் சொன்ன அந்தப் பெண்ணின் காலில் விழுந்துவிட்டார் காளிதார்.

உடனே அந்தப் பெண், 'மகனே.. எழுந்திரு.. '' என்றதும் காளிதாசர் நிமிர்ந்துப் பார்த்தார். சரஸ்வதி தேவி நின்றுகொண்டிருந்தார். அவரைப் பார்த்து காளிதாசர் கைகூப்பி வணங்கினார்.

உடனே தேவி, 'காளிதாசா.. எவன் ஒருவன் தன்னை ஒரு மனிதன் என்று உணர்கிறானோ, அவனே மனிதப் பிறவியில் உச்சத்தை அடைகிறான். நீ மனிதனாக இரு!'' என்று கூறி, தண்ணீர் குடத்தை காளிதாசரின் கையில் அளித்துவிட்டு, மறைந்தார்.

இந்த நிகழ்விலிருந்து மனித நேயமில்லாத வாழ்க்கை வாழக் கூடாது. 'நீ நீயாக இரு.. மனிதனாக இரு' என்பதை உணர முடிகிறது அல்லவா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com