கண்டது
(சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஒரு பூங்காவில் வைக்கப்பட்டிருந்த பலகையில் எழுதியிருந்தது)
உடல் நலமாயிருக்கும்பொழுதே நோயைப் பற்றி ஆராய்ந்து தெரிந்துகொள்.
கே.ஜி.எஃப். விசாகன், கிழக்கு தாம்பரம்.
(தருமபுரி அரூர் வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்தில் எழுதியிருந்தது)
உங்கள் பயணத்தில் எங்கள் வாழ்க்கை.''
ப.நரசிம்மன், தருமபுரி.
(அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகிலுள்ள கிராமத்தின் பெயர்)
வெண்மான்கொண்டான்''
து.காஞ்சனா, அரியலூர்.
கேட்டது
(மதுரை ஆண்டாள்புரம் பேருந்து நிறுத்தத்தில் இருவர் பேசியது)
வீட்டுக்குப் பின்புறம் ரொம்பநாளாக காலியாக இருந்த மனையில் இன்னிக்கு பூமி பூஜை போட்டாங்க!''
அதுல உனக்கு என்ன வருத்தம்? உன்னைக் கூப்பிடலையா? அல்லது அந்த இடத்தை நீ வாங்கலாமுன்னு நினைச்சியா?''
அதெல்லாம் இல்லை.. நாளையில் இருந்து குப்பை போட வேற புது இடம் பார்க்கணும்ல... அதான் கவலை...!''
பெ.நா.மாறன், மதுரை.
(சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருவர் பேசியது)
முன்னே வீடு வாங்க கஷ்டப்பட்டீங்களே... இப்பே என்ன கஷ்டம்...?''
இ.எம்.ஐ. கட்ட கஷ்டப்படுறேன்...''
-கீதா சீனிவாசன், பெருங்களத்தூர்.
(திருச்சியில் உள்ள மருந்துக் கடை ஒன்றில்...)
ஆடி மாசம் மருந்து தர மாட்டீங்களா?''
யாருங்க அப்படிச் சொன்னது..?''
ஆணிக்கு மருந்து கிடைக்கும்னு போர்டு வைச்சிருக்கீங்களே.. அதான் கேட்டேன்...''
அது காலில் வர்ற 'ஆணி'ங்க...!''
சிவம், திருச்சி.
யோசிக்கிறாங்கப்பா!
கண்ணாடியே சிறந்த நண்பன். ஏனெனில் நான் அழும்போது அது சிரிப்பதில்லை.
எஸ்.என்.தென்றல், தஞ்சாவூர்.
மைக்ரோ கதை
வங்கியிலிருந்து வீட்டுக்கு வந்த ரமேஷ் தனது பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து, அவன் மனைவி வேதவள்ளியிடம் அளித்தார். இதில் 20 ஆயிரம் ரூபாய் இருக்கு. நான் இந்தப் பணத்தோட வங்கியிலிருந்து வெளியே வந்தபோது, வாசலில் இருந்த ஒருவன், ஐந்நூறு ரூபாய் கீழே விழுந்துடுச்சி சார்னு என் கிட்டே பேச்சுக் கொடுத்தான்.
இப்படிச் சொல்லிக் கவனத்தைத் திசை திருப்பி பணத்தைத் திருடிட்டு போற ஆசாமிகளைப் பற்றி பேப்பரில் நியூஸ் வருதே... நான் ஏமாறுவேனா... அந்தப் பணம் என்னது இல்லைன்னு சொல்லிட்டு நம்ம பணத்தைப் பத்திரமா எடுத்து வந்திட்டேன்'' என்றார் ரமேஷ்.
இதற்குள் தனது கணவர் கொடுத்ததை இருமுறை எண்ணிப் பார்த்த வேதவள்ளி, என்னங்க ஐந்நூறு ரூபாய் குறையுது'' என்று சொல்ல, திகைத்து நின்றார் ரமேஷ்.
இரா.சாந்தகுமார், கூடுவாஞ்சேரி.
எஸ்எம்எஸ்
இதுவும் கடந்துபோகும். ஆனால் எதுவும் மறந்து போகாது.
சாத்தை மயில், திருநெல்வேலி.
அப்படீங்களா!
ரோபோக்கள் என்றாலே மக்களின் அன்றாடப் பணிச் சுமையைக் குறைக்கும் சாதனமாகப் பார்க்கப்பட்டு வந்தது. தற்போது அதில் செயற்கை நுண்ணறிவை (ஏ.ஐ.) புகுத்தி ஹுமனாய்ட் ரோபாட்டாக மாற்றும் புதிய உக்தி வேகமாக நடைபெற்று வருகிறது. மனித அசைவுகளைத் துல்லியமாகக் கொண்டுள்ள ஹுமனாய்ட் ரோபோக்கள் சீனாவில் நடைபெறும் ஏ.ஐ. கண்காட்சியில் காண்போரை வியப்பில் ஆழ்த்துகின்றன.
சுமார் 150 ரக ரோபோக்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. முதலில் தொழிற்சாலைகள், மருத்துவ
மனைகளில் இதன் தேவை இருந்தது. தற்போது இந்த வகை ரோபாட்டுகள் வீட்டுப் பணிக்காக நியமிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. மனிதனுடன் ரோபோக்களை சகஜமாக்கும் வகையில் இந்தக் கண்காட்சியில் ரோபோக்களின் கால்பந்து விளையாட்டு, குத்துச் சண்டை போட்டி எனப் பல்வேறு வகையில் அவை பயன்படுத்தப்பட்டன.
அதிலும், யூனிட்ரீ நிறுவனத்தின் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஆர்1 ரோபோ அனைவரையும் கவர்ந்தது. 25 கிலோ எடையுடன் 26 இணைப்புகள் கொண்ட இந்த ரோபோ ஓடுவதிலும், பல்டி அடிப்பதிலும், சண்டை போடுவதிலும் படுசுட்டி.
இதேபோல் பல்வேறு சீன நிறுவனங்கள் தங்களின் ரோபோக்களை மேம்படுத்தி வருவதாலும் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. அமெரிக்க நிறுவனங்களும் இந்தப் போட்டியில் இடம்பெறுவதாலும் வீடுகளில் இனி சாதாரணமாக ரோபோக்கள் இருக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே நம்பலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.