சமாத்மிகா
'ஆறு வயது முதல் பதினான்கு வயது வரையுள்ள குழந்தைகள் கல்வியைப் பெறுவது கட்டாய அடிப்படை உரிமை. அதனை வழங்குவது மத்திய அரசின் அடிப்படைக் கடமை என்ற சட்டம் 2010- ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. இதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பிறமலைக் கள்ளர் மாணவர்களுக்கான கட்டாயக் கல்வியை ஆங்கிலேய அரசு நடைமுறைப்படுத்தியது' என்கிறார் மோகன் குமாரமங்கலம் என்கிற பாவெல் பாரதி.
தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட கூடலூரைச் சேர்ந்த பாவெல் பாரதி, மதுரையில் வசிக்கிறார்.
அ. பூச்சிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக உள்ளார். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், 'பெயல்' என்ற பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழின் இணை ஆசிரியராக உள்ளார்.
அவரிடம் பேசியபோது:
'தொல்லியல், மானிடவியல், நாட்டாரியல், காலனிய மறுவாசிப்பு ஆகிய புலங்களில் ஆர்வமுடைய நான், 'வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழகம்' என்ற அமைப்பின் வாயிலாகப் பல்வேறு கண்டுபிடிப்புகளை ஆவணப்படுத்தி வருகிறேன். இருபதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டதோடு, பத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் நூலாக்கியுள்ளேன். 'ஏறு தழுவுதல்', 'ஜல்லிக்கட்டு' , 'தொன்மைப் பண்பாடு அரசியல்' உள்ளிட்ட நூல்களைத் தொகுத்துள்ளேன்.
'கண்ணகி கோயிலும் வைகைப் பெருவெளியும்' (2018), ' வைகைவெளி தொல்லியல் கற்காலம் முதல் கட்டுமான காலம் வரை' ( 2021) ஆகிய எனது இரு நூல்கள் விருதுகளைப் பெற்றுள்ளன.
ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் 1920- ஆம் ஆண்டில் 148 ஆண்கள் பள்ளிகளும், 16 பெண்கள் பள்ளிகளும் என மொத்தம் 164 பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் மதுரைக்கு அருகில் உள்ள கீழக்குடி பெண்கள் பள்ளி. இந்தப் பள்ளிக்கான புதிய கட்டடம் ஒன்று 1925 ஜனவரி 16-இல் திறக்கப்பட்டுள்ளது.
இதற்கான விழாவில் சென்னை மாகாண அரசின் தலைமைச் செயலர் ஜி.எஃப். பாடிசன், மதுரை மாவட்ட ஆட்சியர் ஜே.எஃப், ஹால், கள்ளர் சீரமைப்புத் துறை பொறுப்பாளரான காவல்துறை கண்காணிப்பாளர் ராவ் பகதூர் ஏ,கே.ராஜா ஐயர் உள்ளிட்டோர் பங்கெடுத்துள்ளனர். இந்தக் கல்வெட்டு பள்ளியில் இன்றும் காணப்படுகிறது.
காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்துள்ள பள்ளிகளுக்கு வராத மாணவர்களின் பட்டியலை கள்ளர் உள்ளூர் பஞ்சாயத்தாருக்கு அனுப்பி, அவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கக் கோரி, கீழக்குடி பெண்கள் பள்ளி ஆசிரியர் எழுதிய கடிதமும் உள்ளது.
அந்தப் பெற்றோரையும் பஞ்சாயத்தார்களையும் குற்றப்பரம்பரைச் சட்டத்தின்படி, தண்டிக்கப் போவதாக எச்சரிக்கை செய்து, ஆசிரியர் கீழக்குடி பஞ்சாயத்தாருக்கு எழுதியுள்ள கடிதமும் கிடைத்துள்ளது. கீழக்குடி ஊராட்சி மன்றத் தலைவரும் பெற்றோருக்கு அபராதம் விதித்து, அந்தக் குறிப்பை காவல் துறைக்கு அனுப்பி வைத்துள்ள ஆவணமும் உள்ளது.
உசிலம்பட்டியிலும் கீழக்குடியிலும் சாரணப் பயிற்சி முகாம்கள் தோற்றுவிக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் சென்னைக்கு வருகை தந்த வேல்ஸ் இளவரசரைச் சிறப்பிக்க நடைபெற்ற சாரணப் பெருந்திருவிழாவுக்கு மதுரை கள்ளர் சாரணக் குழுவினர் பங்கேற்றுள்ளனர். பிற்காலத்தில் இருபாலருக்குமான பள்ளிக்கூடமாக அருகில் உள்ள மற்றொரு கட்டடத்தில் செயல்படுகிறது.
சுதந்திர இந்தியாவின் கட்டாயக் கல்விச் சட்டமானது அரசியலமைப்பின் 21 ஏ பிரிவின் கீழ் மனித வளத்தையும் கல்வி வளர்ச்சியும் அடிப்படை நோக்கமாகக் கொண்டது. ஆனால், ஆங்கிலேய அரசின் கட்டாயக் கல்விச்சட்டமானது கண்காணிப்பதையும் தண்டிப்பதையும் நோக்கமாகக் கொண்டது' என்கிறார் பாவெல் பாரதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.