பேல்பூரி

படைத்தவனை தொடர்பு கொள்ள வரும்போது தொலைத்தொடர்பு எதற்கு? உங்கள் செல்போனை அணைத்திடவும்!
பேல்பூரி
Updated on
2 min read

கண்டது

(திருச்சி சமயபுரம் கோயில் அருகில் ஒரு கடையில் எழுதி வைத்திருந்த வாசகம்)

'படைத்தவனை தொடர்பு கொள்ள வரும்போது தொலைத்தொடர்பு எதற்கு? உங்கள் செல்போனை அணைத்திடவும்!'

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

(புதுச்சேரி பாகூர் பகுதியில் உள்ள ஓர் ஊரின் பெயர் )

'நிர்ணயபட்டு'

-நாகஜோதி செந்தில்குமார், நாகப்பட்டினம்.



(விருதுநகர் மாவட்டம், காரியாபட்டிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

'பாம்பாட்டி'

-அ.யாழினி பர்வதம், சென்னை -78.

கேட்டது

(திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருவர் பேசிக்கொண்டது...)

'நீ எப்படி இவ்வளவு நிம்மதியா இருக்கே?'

'சிலதை லூசில் விட்டுவிடுவேன்... சிலரை லூசுன்னு விட்டுவிடுவேன்!'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.



(நாமக்கல் அரசு மருத்துவமனை முன் இரு தோழியர்...)

'உன் மாமனாருக்கு இப்போ பரவாயில்லையா?'

'ம்... ஆனா, மாத்திரை போட்டுக்கத்தான் அடம்பிடிக்கிறாரு!'

'என் மாமனார் படுத்தப்போ இப்படித்தான்... அப்புறம் நான் மாத்திரைகளுக்கு நடிகைகளின் பெயர் சொன்னேன்... அப்படியே போட்டுக்கிட்டாரு!'

-யு.பைஸ் அஹமத், நாமக்கல்.



(தஞ்சாவூர் சரபோஜி கல்லூரிக்கு வெளியில் மாணவர்கள் இருவர்...)

'கையில பெருசா ஒரு வலை வச்சிருக்கானே... அவன் என்னையே முறைச்சுப் பார்க்கிறான், மச்சி?'

'நாய் பிடிக்கிற ஆளுடா அவன்... நாக்கை தொங்கப் போட்டுக்கிட்டு அலையாதே... உன்னை ஒரே அமுக்கா அமுக்கி ஏதாவது ஊசியைக் குத்திடப் போறான்!'

-வி.ரேவதி, தஞ்சை.

யோசிக்கிறாங்கப்பா!

'தேவையில்லாத கேள்விக்கு தெளிவான பதில் மெளனம்'

-க.அருச்சுனன், செங்கல்பட்டு.

மைக்ரோ கதை

'என் பையன் லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குறான். இருந்தும் பெண் கொடுக்க யாரும் முன் வரல. கல்யாண வயது கடந்துபோகுது. கவலையா இருக்கு. நூறு வரனுக்கு மேல் பார்த்தாச்சு. ஒன்னும் அமையல...' கவலையாய்ப் பேசினார் ரங்கநாதன்.

'என்கிட்டையும் ஒரு பொண்ணு இருக்கு. உன் பையனுக்குக் கொடுக்கிறதில் ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால்...' என்று சற்று இழுத்தவர், 'உன் பையன் வாங்குற சம்பளத்தில மாத மாதம் என் குடும்பச் செலவுக்கு கால் பங்கு கொடுக்க முடியுமா?'

'என்ன சார் சொல்றீங்க..?' ரங்கநாதன் உண்மையாகவே அதிர்ந்து போய்கேட்டார்.

'என்ன சார்... அதிர்ச்சியா இருக்கா? நான் என் பொண்ணுக்கு மாப்பிள்ளை மட்டும் கேட்டிருந்தால் அதிர்ந்து போய் இருக்க மாட்டீர்கள். அதே போல் உங்க பையனுக்கும் , பெண் வீட்டார் அதிர்ந்து போகாத அளவுக்கு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பெண் தேடுங்கள். அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் வைச்சிடலாம்!'

நூறு வரனுக்கு மேல் கை நழுவிப்போனதன் காரணம் புரியத் தொடங்கியது ரங்கநாதனுக்கு.

ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.

எஸ்.எம்.எஸ்.

'இரக்கப்படுபவன் ஏமாந்து போகலாம்.

ஆனால், என்றும் அவன் தாழ்ந்து போவதில்லை.'

-பி. நாகலட்சுமி பழனிசாமி, கிழக்கு தாம்பரம்.

அப்படீங்களா!

மெட்டா நிறுவனத்தின் சமூக வலைதளங்களில் விளம்பரம் இல்லாமல் இயங்குவது வாட்ஸ் ஆப் மட்டும்தான். தற்போது வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ்ஸிலும், சானல்ஸிலும் விளம்பரங்கள் வருகின்றன. எனினும், சாதாரண சாட்டுகளிலும், சூழு சாட்டுகளிலும் இந்த விளம்பரங்கள் இடம்பெறாது என தற்போதைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேடஸ் அப்டேட்டுகளை அவ்வப்போது மாற்றி அமைத்துக்கொண்டே இருப்பவர்கள், சானல்களை பின் தொடர்பவர்கள் ஆகியோருக்கு திடீரென விளம்பரத் தகவல் வெளியாவதாக பயனாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய இந்த விளம்பரங்கள் பயன்படுத்தப்படுகிறது என்றும், வாட்ஸ் ஆப் தகவல்களில் தனிநபர் உரிமை பாதுகாக்கப்படும் என்றும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விளம்பரங்களை ஓரளவுக்குத் தடுக்க, 'செட்டிங்ஸ் - அக்கௌண்ட் சென்டர் அக்கவுண்ட் செட்டிங்ஸ்- ஆட் பிரஃபரன்ஸ்' சென்று விளம்பரங்கள் வெளியாவதைக் குறைத்துக்கொள்ளலாம். எனினும், இனி வரும் காலங்களில் வாட்ஸ் ஆப் விளம்பரங்களில் இருந்து முழுமையாக யாராலும் தப்பிக்க முடியாது என்றே கூறலாம்.

-அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com