கலைவழியே கல்வி கற்றல்

526 விருதுகள், 675 பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளேன் என்கிறார் ஷாஜஹான்.
கலைவழியே கல்வி கற்றல்
Updated on
2 min read

பள்ளிக்கல்வி என்பது புத்தகங்களிலும், பாடத் திட்டங்களில் மட்டும் அடங்கிய ஒன்றல்ல; அது குழந்தையின் மனம், உணர்வு, கற்பனை, சிந்தனை ஆகிய அனைத்தையும் ஒளிரச் செய்யும் ஒரு பரந்த உலகம். அதனால் குழந்தைகளுக்காக இந்த உலகத்தை இன்னும் உயிர்ப்புடன் சுவாரசியமாக மாற்ற முயற்சி செய்து வருகிறார் ஷாஜஹான்.

திண்டுக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட நத்தம் ஒன்றியம் செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் அவருடன் பேசியபோது:

'கணித பட்டதாரி ஆசிரியர் பணி 2009 -ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டம், குவாகம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தொடங்கியது. கணிதத்தை எளிய முறையில் ரசனையுடன் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிப்பது? என்ற சிந்தனை மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

ஒருநாள் அந்த ஊரில் கோயில் திருவிழா. மாணவர்கள் நிறையப் பேர் பள்ளிக்கு வரவில்லை. உடனே திருவிழா நடைபெறும் இடத்துக்குச் சென்று பார்த்தால், மாணவர்கள் கிராமியக்கலை நிகழ்ச்சிகளை ரசித்துக் கொண்டிருந்தனர். பின்னர், பாடங்களை கலைவழியாகவும், கதைச்சொல்லியாகவும் இருந்து கற்றுத்தரத் தொடங்கினேன்.

வகுப்பறையைக் கலகலவென்று மாற்றியதால், மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றனர். மாணவர்கள் பள்ளிக்கு வரத்தொடங்கினர்.

கணிதத்தில் 'வாய்பாடு' பாடத்தை ஒயிலாட்டம் மூலமாகக் கற்பித்தேன். பாடத்தைப் பாடலாக்கி, கருத்தை அசைவாக்கி, கல்வியை அனுபவமாக மாற்றிய அந்த முதல் முயற்சி, பின்னர் ஒரு பெரும் மாற்றத்தின் துவக்கமாக மாறியது.

தொடர்ச்சியாக கரகாட்டம், தப்பாட்டம், தோல் பாவைக்கூத்து, கைப்பாவை, மரப்பாவை, நிழல் பாவை பொம்மலாட்டம், மிமிக்ரி , மேஜிக் ஷோ, மாயக்குரல் என எந்தக் கலை வடிவமாக இருந்தாலும், அது மாணவர்களின் சிந்தையைத் திறப்பதற்கான திறவுகோலாக மாறியது.

பாரதியார் பிறந்த நாளன்று பாரதியார் வேடம் ஏற்று வகுப்பறையில் 'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே, உச்சி மீது வானிலிருந்து வீழுகின்ற போதிலும் அச்சம் இல்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே' என்று பாடும்பொழுது, குழந்தைகள் மனம் அப்படியே உள்வாங்கிக் கொள்கிறது.

குறள்நெறி கருத்துகளை வெளிப்படுத்தும் போது திருவள்ளுவர் வேடம் ஏற்றும் வருகிறேன். மாணவர்கள் அறநெறியில் பயணிக்க 'உலக திருக்குறள் மாணவர் பேரவை' அமைத்து, தினமும் குரல் சொல்லும் மாணவர்களுக்கு பரிசு, மிட்டாய் எனத் தந்து ஊக்குவிக்கிறேன்.

பத்து ரூபாய் நோட்டு ஒன்றை மாணவர்களின் பாக்கெட்டில் வைத்துவிட்டு மற்றொரு பாக்கெட்டில் இருந்து 50 ரூபாய் எடுத்துக் கொடுப்பதன் மூலம் உனக்குள் திறமை ஒளிந்துள்ளது. அதை உன்னால் உணரமுடியும்; உன்னால் ஜெயிக்க முடியும் என்று மேஜிக் ஷோ மூலம் செய்து காட்டும்பொழுது மாணவன் மனதில் தன்னம்பிக்கையும் உத்வேகமும் ஏற்படுகிறது.

மாணவர்கள் இடைநிற்றல் குறைந்ததோடு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் நூறு சதவீதமானது. அதன் காரணமாக அன்பாசிரியராக, நண்பராக மாணவர்களிடம் பயணிக்கத் தொடங்கினேன்.

பல முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ளேன். நாட்டுப்புறக் கலைகள் மற்றும் இசை ஆகியவற்றிலும் பட்டம் வாங்கியுள்ளேன். தற்சமயம் பறை இசைப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து கற்றுவருகிறேன். எதையும் முதலில் நானே கற்றுக் கொண்டு பின்னர் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்கிறேன். கற்று கற்பிப்பதே கல்வியின் உயிர் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளேன்.

'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது', 'தூய தமிழ்ப் பற்றாளர் விருது', தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டுத் துறையின் 'பொம்மலாட்டக் கலைஞர்' விருது, 'கலைநன்மணி', சுற்றுச்சூழல் துறை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 'சுற்றுச்சூழல் புரவலர் விருது' உள்பட 526 விருதுகள், 675 பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளேன்' என்கிறார் ஷாஜஹான்.

-சமாத்மிகா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com