
வாயு, பித்தம், கபம் என்ற மூன்று சொற்கள் உங்களுடைய பதில்களில் அடிக்கடி பதிவாகின்றன. இவற்றின் விஞ்ஞானப் பொருளை விளக்க முடியுமா?
-சந்திரசேகரன், திருவாரூர்.
இந்த மூன்று சொற்களின் பொருளை எல்லோரும் நன்கு அறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம். உடலில் கை, கால் பூட்டுகளில் பிடிப்பு, வலி, வீக்கம் ஏற்பட்டால்அதை வலி என்றும் வயிற்றில் உப்புசம், பெருங்குடல் காற்று (அபானன்) அடைபடுதல் அல்லது அதிகம் பிரிதல் என்பதை வாயுக் கோளாறு என்றும், உடலின் ஒரு பக்கத்தில் அசைவு சக்தி அழிந்து போனால் பக்கவாதம் என்று பல வகைகளில் இன்றும் பொதுமக்கள் வாயுவைப் பற்றிப் பேசுகின்றனர்.
அதுபோலவே, வாய்க் கசப்பு, குமட்டல், கிறுகிறுப்பு, உள்ளெரிச்சல், கொதிப்பு முதலியவை பித்தச் சீற்றத்தினால் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். மார்பில் கபம், மூச்சுத்திணறல், தொண்டைக் கட்டு, மூக்கில் சளி முதலியவைகளைக் கபத்தின் கெடுதல் என்று சொல்கின்றனர்.
மேலும், 'உருளைக்கிழங்கு, மொச்சை முதலியவை வாயுவைச் செய்யும். புளி மிளகாய் பித்தம், தயிர், தக்காளிப் பழம் கபம் பண்ணும்' என்று உணவுப் பண்டங்களுடைய குற்றங்களையும் வாத, பித்த, கபங்களை வைத்துப் பேசுவது இன்று சகஜமாயிருக்கிறது.
பொதுமக்களின் இந்தக் கொள்கை ஆயுர்வேத விஞ்ஞானப்படி முற்றிலும் சரியே. ஆனால் நோய்களை மட்டும் வாத, பித்த, கபங்கள் செய்வதாகக் கூறுவது சரியில்லை. உடலில் ஏற்படும் இயற்கை அலுவல்கள், அதன் பயனாக ஆரோக்கியம் எல்லாவற்றையும் வாத, பித்த, கபங்கள்தான் செய்கின்றன என்பதே உண்மையான தத்துவம். அவைகளுடைய சமமான (சீரான நிலை), ஆரோக்கியம், விஷமமான (சீரழிந்த நிலை) நோய் என்று பிரித்து அறியவும்.
சமநிலையிலுள்ள வாயுவின் செயல்கள்:
சுவாசித்தல்- வெளிக்காற்றை உள்ளே இழுப்பதும் உள்காற்றை வெளியில் விடுவதுமான கார்யம்.
அசைவுகள்- வாய் பேச்சு முதல் கை, கால் முதலிய உறுப்புகளுடைய உள்-புறமான எல்லாவிதமான அசைவு கார்யம்.
இயற்கை உந்துதல்களை வெளிப்படுத்துதல். தாதுக்களின் செரிமான இறுதியில் வெளிப்படும் நுட்பமான பதார்த்தங்களையும், குடலிலிருந்து மலம், சிறுநீர் ஆகிய பெரிய கழிவுகளையும் தோலிலிருந்து வியர்வையையும் ஒழுங்கான முறையில் வெளிப்படுத்துதல்,
உற்சாகம்- செயல்களை உடன் தொடங்க, ஊக்கமுண்டாக்கக் கூடிய மனதின் நிலை, இது வாயுவின் ரஜோதிகுணத்தின் கார்யம்.
புலன் செயல்பாடு- ஒலி (காது), தொடு உணர்ச்சி (தோல்), பொருட்களின் அறிவு (கண்), சுவை (நாக்கு), வாசனை (மூக்கு) என்ற புலன்கள் சார்ந்த செயல்களை மூளையைச் சென்று அடைய வைக்கும் செயல்களும் வாயுவினுடையது.
சமநிலையிலுள்ள பித்தத்தின் செயல்கள்:
கண்மூலம் உருவத்தை அறிதல், உண்ணப்படும் உணவுகளைத் தாதுவின் ஊட்டத்திற்காக உறுப்புகளில் சேரும்படி குடலில் சமைத்தல், உடலுக்கு இயற்கையான சூட்டைக் கொடுத்தல், உண்ட உணவு செரிமானமாகி மேற்கொண்டு உணவு உட்கொள்ளவும், வெப்பம் தணிய நீர் பருகவும் விருப்பமுண்டாக்குதல், தோலில் மிருதுவான தன்மை, வசீகரம், பளபளப்பு.
சமநிலையில் கபத்தின் செயல்கள்:
கொழுப்பு போல் பசை- நெய்ப்புத் தன்மையை அனைத்து உறுப்புகளிலும் உள்ளும் புறமும் உண்டாக்குதல். தாதுக்கள் உலர்ந்து விடாமல் ஈரமாய் காப்பாற்றுதல், உறுப்புகள், எலும்பு முதலியவைகளின் பூட்டுகள் எல்லாம் நழுவாமல் பிடித்தும் அவைகளின் உராய்வினால் தேயாமலும் காத்தல், தாதுக்களைத் திடமாயும் கெட்டியாகவும் கனமாயும் ஆக்குதல், விந்தணுக்களின் வளர்ச்சி, கடினமான செயல்களைச் செய்யத் தேவையான உடல்- மன வலிமை, பொறுமை, தைரியம், சஞ்சலமற்ற மன உறுதி இவையெல்லாம் கபத்தின் இயற்கையான செயல்கள்.
இவை அனைத்தும் வாத, பித்த, கபத்தின் விஞ்ஞானப் பொருளாகும்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்