இரட்டை கம்பு சிலம்பத்தில் சாதனை...

தேசிய இளைஞர் தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட மார்த்தாண்டம் அருகே தொலையாவட்டத்தில் ஜனவரி 12 -இல் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர் இரண்டே முக்கால் மணி நேரம் தொடர்ந்து இரட்டை கம்பு சிலம்பம் சுழற்றினர்.
இரட்டை கம்பு சிலம்பத்தில் சாதனை...
Published on
Updated on
2 min read

தேசிய இளைஞர் தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட மார்த்தாண்டம் அருகே தொலையாவட்டத்தில் ஜனவரி 12 -இல் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர் இரண்டே முக்கால் மணி நேரம் தொடர்ந்து இரட்டை கம்பு சிலம்பம் சுழற்றினர். இதற்காக 'அசாதாரண திறன் பெற்ற மாணவர்கள்' என்ற பட்டத்தை வென்று, நோபிள் புக் ஆஃப் வேல்ட் ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர்.

அவர்கள் களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் வன்னியூரைச் சேர்ந்த சுனில் - சிந்து தம்பதியின் மகள் எஸ். ஆதிரா, எட்டாம் வகுப்பு பயிலும் மேக்கோடு பகுதியைச் சேர்ந்த பாபுராஜ் - ரீனாராஜ் தம்பதியின் மகன் பி.ஆர். பினோராஜ் ஆகிய இருவர்தான்.

சாதனை குறித்து பள்ளித் தலைமையாசிரியர் எம். ஜெயராஜ் கூறியதாவது:

'மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவதை விடுத்து, தன்னம்பிக்கை மிகுந்தவர்களாகவும், ஆளுமைத்திறன் கொண்டவர்களாகவும் வளர்வதற்கு, தனித்திறன்களை மெருகேற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் எங்கள் பள்ளி மாணவர்களை மனவலிமை கொண்டவர்களாக வளரும் வகையில் ஊக்குவித்து வருகிறோம்.

இதற்காக, முன்னாள் டிஜிபி சி. சைலேந்திரபாபுவின் நண்பர் ஜி. சுதிர் சந்திரகுமார், எங்கள் பள்ளி மாணவர்களுக்கு வாரம்தோறும் சிலம்பப் பயிற்சியை அளிக்கிறார். இலவசமாக அளித்தால், மாணவர்களுக்கு அந்தக் கலைகள் மீது உயர்மதிப்பும், ஈர்ப்பும் இருக்காது என்ற கருத்தை கவனத்தில் கொண்டு பயிற்சிக்காக சிறிய அளவில் பங்களிப்புத் தொகை பெறப்படுகிறது.

இரட்டை கம்பு சிலம்பத்தில் மாணவி ஆதிரா, மாணவர் பினோராஜ் ஆகியோர் படிப்பிலும் சிறந்துவிளங்குகின்றனர். இருவரும் வெளியுலகை தைரியமாக எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையையும், மன வலிமையையும் சிலம்பக் கலை அளித்துள்ளது. இருவரும் பள்ளியில் செயல்பாட்டில் உள்ள பேண்ட் வாத்தியக் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களிலும் இடம்பெற்று தங்கள் பங்களிப்பை பள்ளிக்கு நல்கி வருகிறார்கள்'' என்கிறார் ஜெயராஜ்.

மாணவியின் தாய் சிந்து கூறியதாவது:

'நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்துகொண்டே இருக்கின்றன. பெண்கள் எந்தக் காலத்திலும் அவள் வெளியே செல்லும்போது தன்னை தற்காத்து கொள்ளும் சுய பாதுகாப்பு உணர்வை கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே எனது மகளை சிலம்பப் பயிற்சியில் சேர்த்தேன்.

பயிற்சியில் சேர்ந்த ஓராண்டுக்குள் சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சியையும், மன நிறைவையும் ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் படிப்பிலும், சிலம்பத்திலும் மேலும் பல சாதனைகள் புரிவாள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது'' என்கிறார் சிந்து.

மாணவர் பினோராஜின் தாய் ரீனாராஜ் கூறியது:

'எங்கள் உறவினர்களின் பிள்ளைகள் சிலர் சிலம்பப் பயிற்சி பெறுவதை பார்த்து, அதை கற்க விரும்புவதாக பினோராஜ் கூறினான். பள்ளியில், விரும்பும் மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சியை அளிக்க, தலைமையாசிரியர் ஏற்பாடு செய்ததை அறிந்தேன்.

அதன் பின்னர் சிலம்பம் கற்பதற்கு அவனை ஊக்கப்படுத்தி, பயிற்சியில் சேர வைத்தேன். சாதனையைப் படைத்து எனக்கும், பள்ளிக்கும் பெருமை தேடி கொடுத்தான். இந்த வெற்றி இன்னும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அவனுக்கு கொடுத்துள்ளது'' என்கிறார் ரீனாராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com