ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தூக்க மாத்திரை இல்லாமல் தூக்கம் வர..

எனக்கு வயது 75. ஓய்வு பெற்ற பேங்க் அதிகாரி. எனக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. பைபாஸ் சர்ஜரி ஆகியுள்ளது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தூக்க மாத்திரை இல்லாமல் தூக்கம் வர..
Updated on
1 min read

எனக்கு வயது 75. ஓய்வு பெற்ற பேங்க் அதிகாரி. எனக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. பைபாஸ் சர்ஜரி ஆகியுள்ளது. மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறேன். சமீபகாலமாக தூக்கம் வரவில்லை. இடையில் சிறுநீர் அதிகமாகக் கழிகிறது. தூக்க மாத்திரை உட்கொள்ள விருப்பமில்லை. இதற்கு ஆயுர்வேத நிவாரணம் உள்ளதா?

-எஸ்.பஞ்சாபகேசன், திருச்சி.

'சிகித்ஸாதிலகம்' என்ற புத்தகத்தில் தூக்கம் வராவிடில் என்ன செய்யலாம் என்ற ஒரு பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கலாம். தயிர், எருமைப்பால், கரும்புச் சாறு ஆகிய மூன்றையும் செரிமானச் சக்தியைக் கவனித்து அதிக அளவில் பகல் வேளைகளில் சாப்பிட்டு வரலாம்.

தினசரி எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். உடலை இதமாகப் பிடித்துவிடச் செய்வது, அடிக்கடி நிறைய தண்ணீர்விட்டுக் கொண்டு குளிப்பது, நெற்றியில் வாதம் எனும் தோஷத்தினை அடக்கக் கூடிய நாராயண தைலம், ஹிமஸாகர தைலம், க்ஷதபலா தைலம் முதலிய நரம்பு மண்டலத்துக்குச் சிறந்த தைலங்களைத் தேய்த்துக் கொள்வது நல்லது. காலையில் இதே தைலங்களைப் பஞ்சில் தேய்த்துவைத்துக் கொள்ளலாம்.

இரவில் உறைந்த தயிரின் மேல் நிற்கும் தெளிவான நீரை உள்ளங்கையில் அழுத்தித் தேய்த்து வர தூக்கம் நன்கு வரும். இலுப்பைப் பூ, அதிமதுரம், தர்ப்பைப்புல், மூங்கிலுப்பு, சர்க்கரை-இந்த ஐந்தையும் சமஎடை சேர்த்து இடித்துத் தூளாக்கி ஒரு தேக்கரண்டி அளவு (2 கிராம்) இரவு படுக்கும் முன்பும், காலையிலும் நெய்யில் குழப்பிச் சாப்பிட்டு மேல் பால் சாப்பிடுவது நல்லது.

உறக்கம் தமஸ் என்னும் மன தோஷத்தின் உறைவிடமாயினும், அது தனது காரியத்தில் வரும் நேரம், விலகும் நேரம் இரண்டிலும், சரியான தருணத்தை நிச்சயமாகக் காப்பாற்றும் ஆற்றல் உள்ளது. குறிப்பிட்ட தருணத்தில் தூங்கவும், எழுந்திருக்கவும் எளிதில் செய்ய முடியும். ஆனால், அதற்கு மன நிம்மதி தேவை. சிற்றின்பப் பற்றற்று, பிரும்மச்சர்யம் மேற்கொண்டு ஆசை அதிகமின்றி கிடைத்ததைக் கொண்டு, போதுமென்று மகிழ்ச்சியான மனப் பான்மை ஆகியவற்றை பழகிவருபவருக்கு தூக்கம் உரிய காலத்தில் வருவதும் போவதும் வசமாகவே இருக்கும்.

உங்களைப் பொருத்தவரை, ஜாதிக்காய் சாப்பிட நல்லது. நல்ல நறுமணமும், ருசியும் அளிக்கக் கூடிய உணவுப் பொருள். அதிகம் பழக்கத்திலுள்ளது. இரைப்பையிலுள்ள ஜீரணத் திரவியங்களைத் தூண்டி நல்ல பசியை அளித்து உணவை ஜீரணமாக்கும். கீழ்வாயுவைப் பிரித்துவிடும். நரம்புகளின் பரபரப்பை அடக்கி, அமைதியைத் தரும். உடல் வலியை மறக்கச் செய்யும். சிறுநீரைக் கட்டுப்படுத்தி, நல்ல தூக்கத்தைத் தரும்.

சிறிய அளவில் இழைத்து வரும் பசையை, தேனுடன் குழைத்து இரவு படுக்கும் முன் சாப்பிட்டால் போதுமானது. எனினும் அதிகம் உபயோகித்தால், மயக்கத்தையும் நரம்புத்தளர்ச்சியையும் ஏற்படுத்தும். ஜாதிக்காயை நெய்யில் பொரித்துத் தூளாக்கிச் சாப்பிடுவது மேலும் நல்லது.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com