ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கேக், பிஸ்கெட், சாக்லெட் அதிகம் சாப்பிட்டால்...?

நான் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறேன். நிறைய மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கேக், பிஸ்கெட், சாக்லெட் அதிகம் சாப்பிட்டால்...?
Updated on
2 min read

நான் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறேன். நிறைய மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அவர்களுடைய பிறந்த நாள்களில் என் அறைக்கு வந்து கேக், பிஸ்கெட், சாக்லெட்.. என்றெல்லாம் கொடுத்து வாழ்த்தச் சொல்லுவார்கள். அவற்றைச் சாப்பிட வேண்டும் என்ற சபலத்தால், நான் பசியில்லாதபோதும், சாப்பிட்டு விடுகிறேன். இது என்னைப் பெரிதும் பாதிக்கிறது. இந்தச் சபலம் நீங்க வழி என்ன?

கணேசன், கரூர்,

உண்ட உணவு நன்றாகச் செரித்தப் பின்னரே அடுத்த வேளைக்கான உணவை உண்ண வேண்டும். பசிக்காமல் இருப்பதற்கு ஏற்கெனவே உண்ட உணவு நன்றாகச் செரிக்காமல் இருப்பதுதான் காரணம். 'ஜாடராக்னி' எனும் பசித்தீ மந்த நிலையை அடைந்தால், ஜீரண உறுப்புகளின் ஆற்றல் குறையும். அதை உடனே கவனிக்காமல் அலட்சியம் செய்தால் நோயை உண்டு பண்ணுவதன் மூலம் மரணத்துக்கும் காரணமாகி விடுகின்றது.

அஜீரணத்தால் வரும் நோய் புலி, ஓநாய், சிங்கம் ஆகிய விலங்குகளையும், கழுகு எனும் பறவையையும் அணுகுவதில்லை. இந்த நான்குக்கும் ஜீரண உறுப்புகள் சக்தி மிகுந்திருப்பதால் ஒருபொழுதும் எவ்வுணவும் ஜீரணமாகாது இருப்பதில்லை. அதனால் அத்தகைய அஜீரண நோய் பாவத்தின் பயனாகிய வியாதியில் இருந்து வராதிருப்பதே நல்லது.

ஆயுர்வேதத்தில் 'ஆமய:' எனும் சொல் பொதுவாக வியாதியைக் குறிக்கிறது. இது காரணப் பெயர். நோய்க்குக் காரணம் அஜீரணம் என்பது இந்தச் சொல்லில் இருந்து விளங்கம். அதாவது 'ஆம:'' பக்குவமாகாதது (ஜீரணமாகாதது) அதிலிருந்து உண்டாவது 'ஆமய:'. இதனைத் தவிர்ப்பதற்குரிய உபாயத்தைச் சற்று ஆராய்வோம்.

'லங்கனம் பரமௌஷதம்' என்னும் பழமொழி பசியின்மையால் வரும் நோய்க்கு உபவாஸம் (பட்டினியிருத்தல்) உயர்ந்த மருந்தாகும் என்று கூறுகிறது. நேரம் தவறி மாணவ மாணவியர் வழங்கும் உணவுத் தின்பண்டங்களை மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் நீங்கள் சாப்பிடநேருவதால், அடுத்த வேளை பசிவரும் வரை வயிற்றைப் பட்டினி போட்டால்தான் நோயின்றி வாழ முடியும். அதைவிட நல்லது எதுவாயின் பள்ளியில் பணிபுரியும் பியூன், வாட்ச்மேன், ஆயா போன்றவற்களுக்கும் கிடைத்ததில் பங்கு போட்டு உண்பதுதான்.

நம் முன்னோர், மனிதன் இரண்டு வேளைதான் உண்ண வேணடும் என்று வகுத்திருக்கிறார்கள். காலை மாலை என இரு வேளை மட்டுமே சாப்பிடுபவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று ஆயுர்வேதமும் வலியுறுத்துகிறது. கட்டுப்பாட்டுடன் இரண்டு வேளைகள் பசித்துப் புசித்தால் மனித உடலுக்கு மருந்து என்றும் பொருளே வேண்டியதில்லை என திருவள்ளுவர்

'மருந்தென வேண்டாவாம்

யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி யுணின்' எனும் குறளில் சுவைபடக் கூறியுள்ளார்.

கேக், பிஸ்கட், சாக்லெட் போன்ற தின்பண்டங்ளைச் சாப்பிட்ட பிறகு, ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் அவை அனைத்தும் கனமான அதாவது எளிதில் செரிமானமாகாத உணவுப் பொருள்களாக இருப்பதால், அவையே பின்னாளில் இதய அடைப்பு, கல்லீரல் மற்றும் கணையங்களின் உள்அடைப்புகளுக்குக் காரணமாகிவிடும்.

மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லையே, என்ன செய்வது என்று நீங்கள் வேதனைப்பட்டால் சிட்டிகை அஷ்டசூரணம், பாஸ்கரலவணம், ஹிங்குவசாதி போன்ற ஆயுர்வேத சூரண மருந்துகளை கைவசம் வைத்துகொண்டு தின்பண்டங்களைச் சாப்பிடுவதற்கு முன், பின் என மூன்று சிட்டிகை சாப்பிட்டால் பெரிய உபாதைகள் ஏதும் ஏற்படாதவாறு இருக்கலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com