
பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் நிறைவடைந்துள்ளன. மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளும், அதன் பின்னர் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் தொடங்க உள்ளன. இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள படிப்பதைத் தீவிரப்படுத்தி வரும் காலகட்டம் இது. பெற்றோர், உறவினர்கள் தங்களது அறிவுரை
களையும், ஆலோசனைகளையும், எச்சரிக்கைகளையும் தொடர்ந்து பிள்ளைகளிடம் சொல்லும் நேரம் இது.
இந்தச் சூழலில் மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும், பெற்றோர் எவ்விதம் நடக்க வேண்டும் என்பது குறித்து கடையநல்லூரைச் மனநல ஆலோசகர் நவாஸ்கானிடம் பேசியபோது:
'பெரியவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவது போல், மாணவர்களும் வகுப்பறைச் சூழல், தேர்வுப் பயம் போன்ற பல காரணங்களால் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள்.
பதின்வயதில் இருக்கும் குழந்தைகள் முதன்முதலில் மனநல அழுத்தத்துக்கு உள்ளாகும்போது, பெரும்பாலான பெற்றோர் அதை மனப் பிரச்னை என்று புரிந்து கொள்ளாமல் அடிக்கவும், திட்டவும் செய்கின்றனர். 'அவர்கள் பொய் சொல்கிறார்கள், அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறார்கள், கவன ஈர்ப்புக்காகச் செய்கிறார்கள்..' என்றெல்லாம் குற்றம் சாட்டுகிறார்கள்.
பல பெற்றோர் மனநலப் பாதிப்பை பிரச்னையாகவே எடுத்துகொள்வதில்லை. அதற்காக செலவு செய்வதையும் வீணாகவே கருதுகிறார்கள், நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும் எனவும் நம்புகிறார்கள். இது அதிகரித்தவுடன் அதிகமாகச் செலவு செய்கின்றனர்.
பல பெற்றோர் குழந்தைகளுக்குத் தேவைப்படும் வயதில் உடன் இருப்பதில்லை. உடனிருந்தாலும் பிள்ளைகளை பல்வேறு காரணங்களுக்காகத் தேவையில்லாமல் கண்டிக்கின்றனர். தங்களது வேலை, தொழில் பிரச்னை போன்றவற்றின் அழுத்தத்தை பிள்ளைகளின் மீது சுமத்துகின்றனர். கல்வியின் மூலமே வாழ்க்கையில் அடுத்தகட்ட பொருளாதார நிலையை எட்ட முடியும் என்று சிறுவயது முதலே குழந்தைகளுக்குப் போதிக்கின்றனர். இதுபோல் தொடர்ந்து கூறுவதால் சில குழந்தைகளுக்கு படிப்பின் மீது பயமும்,வெறுப்பும் வந்து விடுகிறது.
குழந்தைகள், மாணவர்கள் அதிக அளவில் மனநலப் பாதிப்புக்கு ஆளாவது தேர்வு பயத்தினால்தான். மாணவிகளைவிட மாணவர்களே அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். வகுப்பறையில் ஆசிரியர் சொல்வதை ஊன்றிக் கவனிப்பதில், மாணவர்கள் சற்றுப் பின்தங்கி இருக்கின்றனர். இந்தச் சரிவானது தேர்வை எதிர்கொள்வதிலும் தொடர்கிறது.
தேர்வுக்குத் திட்டமிடுதல் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு உடல் ஆரோக்கியமும் முக்கியம்.
'எம்பிள்ளையும் ராவும் பகலுமா கண் முழிச்சு கஷ்டப்பட்டுத்தான் படிக்கிறான். ஆனா கொஞ்ச நேரத்துல படிச்சது பூராவும் மறந்துடுதுன்னு சொல்றான்' என்று தங்களது குழந்தைகளைப் பற்றி குறைபட்டுக் கொள்ளும் நிறைய பெற்றோரைச் சந்தித்திருக்கிறேன்.
இப்படிப்பட்ட மாணவர்களுக்குச் சிந்தனையை ஒருமுகப்படுத்திப் படிப்பதில் பிரச்னை இருக்கிறது.
மனச்சோர்வு: தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு உண்டாகும் மனச்சோர்வைப் போக்க சிறிது நேரம் தியானம், பிரணாயாமப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அதன் மூலம் நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், புத்துணர்வுடனும் செயல்படமுடியும்.
மலச்சிக்கல்: மனப் பதற்றத்தின் விளைவாகச் சில மாணவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். இதனால் ஆழ்ந்து படிக்க முடியாத நிலை ஏற்படும். இதைத் தவிர்க்க முறையான உணவுப் பழக்கம் அவசியம். காரம், புளிப்பு அதிகம் சேர்க்காத உணவு வகைகளை உண்ண வேண்டும்.
தூக்கம்: இரவு நீண்ட நேரம் கண் விழித்துப் படிப்பதால் சில மாணவர்களுக்குக் கண்களுக்கு வெளியே கருவளையம் விழும். சரியான தூக்கம் இல்லாமல் கண்ணின் உள்ளேயும் சிவந்து காணப்படும். தேர்வு நேரத்தில் இரவில் சரியாக உறக்கம் இல்லாவிட்டால், மறுநாள் தேர்வு எழுதுவது பெரும் சோதனையாக மாறிவிடும். அதனால் குறைந்தது ஏழு மணி நேரமாவது தூங்க வேண்டியது அவசியம்.
தவிர்க்க வேண்டிய உணவு: பீட்ஸா, பர்கர், பரோட்டா போன்ற உணவு வகைகளை அவசியம் தவிர்க்க வேண்டும். குளிர்பானங்கள் அருந்தக் கூடாது. நொறுக்கு தீனிகளை அறவே தவிர்க்க வேண்டும். காலையிலேயே அதிக அளவு உணவை உண்ணக் கூடாது. உணவைத் தவிர்க்கவும் கூடாது.
உணவு முறை: எளிதில் ஜீரணமாகக்கூடிய, நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். கண்களுக்கு நல்லது என்பதால், தினமும் ஒரு கேரட் சாப்பிடலாம். பசு நெய்யை உணவில் சேர்ப்பது ஞாபகச் சக்தியை அதிகரிக்கும்.
தேர்வை மன அழுத்தமின்றி மகிழ்வுடன் சந்தித்தாலே எளிதாக வெற்றி பெற்றுவிடலாம்'' என்கிறார் நவாஸ்கான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.