கண்டது
(மயிலாடுதுறையில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
'தமிழர் விருந்து மெஸ்''
-எம்.சுப்பையா, கோவை.
(ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகேயுள்ள இரு ஊர்களின் பெயர்கள்)
'காகம், குலவிளக்கு.''
-கு.பாலசுப்பிரமணி, இடையகோட்டை.
(திருத்தணியில் உள்ள ஓர் உணவகத்தில் எழுதியிருந்தது)
'பணம்கூட சில இடங்களில் மட்டுமே தேவைப்படுகிறது;
ஆனால், பொறுமை எல்லா இடங்களிலும் தேவைப்படுகிறது.''
-ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு.
கேட்டது
(கோவை கவுண்டம்பாளையம் பூங்காவில் இருவர்...)
'உன் லவ்வரிடம் ஓடிப்போகலாமுன்னு கேட்டது தப்பா போச்சா ஏன்?''
'பைக்கையும் வித்துட்டியா? அதை நம்பிதானே உன்னை லவ் பண்ணினேன்னு சொல்லிட்டா?''
-எம்.பி.தினேஷ், கோவை-25.
(திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருவர்...)
'சின்ன சண்டை வந்தாலும் என் மனைவி பெட்டியைத் தூக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்குப் போயிடறாங்க?''
'நீங்க கேட்க வேண்டியதுதானே...''
'நான் எப்படி கேட்பது? அது அவளோட
பெட்டியாச்சே...?''
-எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.
திண்டுக்கல் கோவிலூரில் இருவர் பேசியது)
'வீட்டிலும் ரொம்ப வேலை. நம்ம ஆபிஸிலும் முன் போல ஓய்வு எடுக்க முடியலை. பேசாம மகளுக்கு கல்யாணம் பண்ணிட்டு வீட்டிலேயே வச்சிக்கலாமுன்னு இருக்கேன்..''
'நல்ல யோசனை காலம் தாழ்ந்தாம வேகமா முடிவெடு. நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்..''
-வெ.கார்த்திகா, காளனம்பட்டி.
யோசிக்கிறாங்கப்பா!
இதயக் காயத்துக்கு
இனிய ஒத்தடம்- அன்பு.
-த.சீ.பாலு, அத்திப்பட்டு.
மைக்ரோ கதை
'உங்க அம்மா இத்தனை வயசாகியும் இன்னும் புடவைகளையும், நகைகளையும், பாத்திரங்களையும்தான் வாங்கி வைக்கிறா? உனக்கு கல்யாணம் ஆச்சுல்ல.. வீட்டில் பீரோ, பீரோவா புடவைகள், ஷெல்ப்- ஷெல்ப்பாக பாத்திரங்கள்.. நீயாவது உங்க அம்மாவுக்கு புத்தி சொல்லு'' என்று வீட்டுக்கு வந்த மகள் கல்பனாவிடம் சத்தம் போட்டுவிட்டு சென்றார் நடேசன்.
'ஏம்மா இப்படி...'' என்று ஆரம்பித்த மகள் கல்பனாவிடம் பார்வதி, 'உங்க அப்பா சொன்ன மாதிரி, நான் புடவைகளையும், பாத்திரங்களையும் புதுசா வாங்கலை. அவற்றில்தான் பணத்தை உங்க அப்பாவுக்குத் தெரியாம சேமிச்சு வைச்சிருக்கேன்.. அவருக்கு ஓட்டை கை.. யாருன்னா கஷ்டமுனு கேட்டா அள்ளி கொடுத்திடுவாரு..? வயசான காலத்துல நமக்குன்னு நாலு காசு வேண்டாமா? பீரோக்களை பூட்டி வைக்கிறதால, அவரு புடவைகளையே வாங்கி வைக்கிறதா? நினைச்சுக்கிறாரு'' என்று கூறி முடித்தாள்.
இதை கேட்டு தனது தாயை இறுக அணைத்தாள் கல்பனா.
-ச.ஸ்ரீதரவித்யாசங்கர், விருகம்பாக்கம்.
எஸ்.எம்.எஸ்
மனம் வலிக்கும்போது சிரிக்கணும்.
பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வைக்கணும்.
-அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
அப்படீங்களா!
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் ஆஃப் செயலியை உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இணையவழியில் குறுந்தகவல் அனுப்பும் வகையில் 2009-இல் தொடங்கப்பட்ட வாட்ஸ் ஆஃப்பில் புகைப்படம், ஆவணங்கள், விடியோக்கள் பதிவேற்றம், கட்டணம் செலுத்துதல் என அவ்வப்போது புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. தற்போது புதிய சேவையாக வாட்ஸ்ஆஃப்பில் இருந்தபடியே ஆவணங்களை ஸ்கேன் செய்யும் வசதியை வாட்ஸ் ஆஃப் அறிமுகம் செய்துள்ளது.
ஆவணங்களை ஸ்கேன் செய்து வாட்ஸ் ஆஃப்பில் அனுப்ப வேண்டுமென்றால், பிற செயலிகளைப் பயன்படுத்த வேண்டும். அந்தப் படத்தை மீண்டும் வாட்ஸ் ஆஃப்பில் இணைத்து அனுப்ப வேண்டும்.
தற்போது வாட்ஸ் ஆஃப்பில் இருந்தபடியே, ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்படியே பதிவேற்றம் செய்துவிடலாம். இதற்காக, வாட்ஸ்ஆஃப்பில் உள்ள 'பிளஸ்' பொத்தனை தேர்வு செய்து - டாக்குமென்ட்ஸில் ஸ்கேன் டாக்குமென்ட்ஸ் தேர்வு செய்தால் வாட்ஸ்ஆப்பில் உள்ள கேமரா ஸ்கேன் செய்ய தொடங்கிவிடும்.
இந்த சேவை தற்போதைக்கு ஐ-போன்களில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று வாட்ஸ் ஆஃப் அறிவித்துள்ளது.
கட்டுப்பாடு தளர்வு: இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த வாட்ஸ் ஆஃப் பேமென்ட்ஸ் சேவை கட்டுப்பாட்டை மத்திய அரசு தளர்த்தி உள்ளது. இது 50 லட்சம் பேர் வரையில் வாட்ஸ் ஆஃப் பேமென்ட்ஸில் பணப் பரிவர்த்தனை செய்ய வழிவகுத்ஒளதுள்ளது.
இது கிராமங்களில் வாட்ஸ் ஆஃப்பை பயன்படுத்தும் பயனாளர்கள் எண்ம பணப் பரிமாற்றம் செய்ய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.