கண்டது
(நாகூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
'வவ்வாலடி'
-ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.
(அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
'கல்வெட்டு'
-சிவரஞ்சனி. வே., இராமநாதபுரம்.
(தென்காசி அருகேயுள்ள புளியங்குடியில் உள்ள ஒரு கடையின் பெயர்)
'ஒரு சொல்'
-சங்கரி முத்தரசு, கோவை.
மைக்ரோ கதை
மறதிப் பேராசிரியர் ஒருவர் தனது உதவியாளரிடம், 'இந்த மாதம் பத்தாம் தேதி எனக்கு ஒரு மீட்டிங் உள்ளது. ஞாபகப்படுத்து' என்றார்.
'சார்.. பத்தாம் தேதி முந்தா நாளே போய்விட்டது' என்றார் உதவியாளர்.
'அடாடா.. அந்த முக்கியமான மீட்டிங்குக்கு போகாமல் இருந்துவிட்டேனே...' என வருந்தினார் பேராசிரியர்.
'இல்லை சார்.. போனீர்கள்' என்று உதவியாளர் சொல்ல, 'அப்படியா.. அதையும் மறந்துட்டேனே..' என்றார் பேராசிரியர்.
-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.
எஸ்எம்எஸ்
அவமானமும், அனுபவமும் கற்றுத் தரும் பாடத்தை
விலை உயர்ந்த புத்தகத்தாலும் கற்றுத் தர முடியாது.
-ரமணன் ஏகாம்பரம், ராசிபுரம்.
கேட்டது
(திண்டுக்கல்லில் உள்ள அலுவலகம் ஒன்றில்...)
'மஞ்சள் காமாலைக்கு இன்னும் பத்தியச் சாப்பாடுதான் சாப்பிடுறீயா?'
'எனக்கு எப்போ சார் மஞ்சள் காமாலை வந்தது?'
'மாட்டிக்கிட்டியா? மஞ்சள் காமாலைன்னு டாக்டர் சர்டிபிகேட் கொடுத்து லீவு போட்டியே... அது பொய்தானே..?'
-விமலா சடையப்பன், காளனம்பட்டி.
(தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் இரு நண்பர்கள் பேசியது)
'சே.. மழை விட்டும் தூவானம் விடலையே..?'
'ஏன் அப்படி சொல்றீங்க?'
'ஓர்க் ப்ரம் ஹோம் முடிந்தும் கூட எனக்கு கிச்சன் வேலை விட்டபாடில்லையே...?'
-வி.ரேவதி, தஞ்சாவூர்.
(திருச்சி ரயில் நிலையத்தில் இருவர் பேசியது)
'ஜெனரேசன் கேப்புக்கு என்ன அர்த்தம்..'
'விளக்கேற்ற பெண் வேணும்னு அம்மா நினைப்பதற்கும், ஸ்விட்ச் போட்டா போதுமுன்னு மகன் நினைப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான்..'
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
யோசிக்கிறாங்கப்பா!
கோபம் யாருக்கு வேண்டுமானாலும் வரும்.
ஆனால், பொறுமை எல்லோருக்கும் வராது.
-ந.சண்முகம், திருவண்ணாமலை.
அப்படீங்களா!
எதிர்கால உலகில் மக்களின் தேவைகளுக்கேற்ப செயற்கை நுண்ணறிவு மூலம் நவீனமயமாக்கப்பட்ட பயன்பாட்டு பொருள்களின் கண்காட்சி 'சிஇஎஸ் 2025' அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று முடிந்துள்ளது.
துணிகளை துவைத்து காயவைத்து மடித்து வழங்கும் வாஷிங் மெஷின் முதல் காரில் கொண்டு செல்லக் கூடிய சிறு ஹெலிகாப்டர் வரையிலான பொருள்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
சிங்கப்பூர் ஸ்டார்ட் அஃப் நிறுவனம் 'ஃபிலின்ட்' உருவாக்கிய காகிதத்திலான ரீசார்ஜ் பேட்டரிகள் இந்தக் கண்காட்சியின் சிறந்த நிலைத்தன்மைக்கான விருதைப் பெற்றது. இந்த பேட்டரிகள் காலாவதியான 6 வாரங்களில் மக்கும் தன்மை கொண்டவையாகும்.
ஹுமனாய்டு ரோபோ, செல்லப் பிராணியாக பாதுகாப்பாக குழந்தைகள் வைத்துகொள்ள உதவும் நாய் ரோபோ ஆகியவற்றின் அசைவுகள் அசல்போல் காட்சியளித்தன.
லேப்டாபின் திரையை பெரிதாக்க உதவும் இரட்டை திரை வசதி, பேட்டரி வசதியுடன் கூடிய பிரிட்ஜ், தனிமையில் உள்ள வயதானவர்களுடன் பேச்சு துணையாக இருக்கும் ரோபோ, எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடிய வயர்கள் இல்லா பேட்டரி டிவி, கைப்பேசியின் திரையை மூக்குக் கண்ணாடியில் காட்டும் ஸ்மார்ட் கிளாஸ், குளிர்பானங்களைப்போல் குடிநீரை காப்போனேட் செய்யும் வாட்டர் பாட்டில்கள் ஆகியவை தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது.
-அ.சர்ப்ராஸ்