
மறைந்த ஓவியர் 'மாருதி' புதுக்கோட்டையில் 1938 ஆகஸ்ட் 27-இல் பிறந்தார். புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் புதுமுகவகுப்பு வரை படித்த இவரது இயற்பெயர் ரங்கநாதன். பிரபலமான ஓவியரான இவர், தனக்கு 'மாருதி' என்று பெயர் சூட்டிக் கொண்டது வித்தியாசமானது நிகழ்வுதான்.
இவரது பெற்றோர் டி.வெங்கோபராவ்- பத்மாவதி. இவருக்கு இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள்.
நானூறு ஆண்டுகளுக்கு முன் இவரது முன்னோர்கள் மகாராஷ்டிரத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு குடிவந்துள்ளனர். தமிழ் மீது இவருக்கு ஆர்வம் அதிகம். பள்ளிப் படிப்பின்போது, தமிழில் அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்.
இவரது தந்தை ஆசிரியராகப் பணிபுரிந்தாலும், அவரும் ஓவியர்தான். அப்போது புதுக்கோட்டையில் வரலட்சுமி விரதம் கொண்டாடுவது வழக்கம். தெருவில் இருக்கும் எல்லா வீடுகளிலும் பானையில் வெள்ளை அடித்து, வரலட்சுமி ஓவியத்தை இவரது தந்தை வரைவார். அதைப் பார்த்த மாருதி தனது ஏழாம் வயது முதலே ஓவியம் வரையத் தொடங்கினார்.
1959-இல் சென்னைக்கு குடிபெயர்ந்தார். மயிலாப்பூரில் திரைப்பட சுவரொட்டிகள் தயாரிக்கும் 'ஆர்ட் அன்ட் கோ' எனும் நிறுவனத்தில் பணி கிடைத்தது. மாத ஊதியம் ஐம்பது ரூபாய்.
கருப்பு-வெள்ளையில் இருக்கும் பிரபல நடிகர், நடிகைகளின் படங்களை வெட்டி, ஒட்டி வண்ணமாக மாற்றி, படத்தின் தலைப்பை எழுத வேண்டும்.
'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்', 'மாயமனிதன்' ஆகிய திரைப்படங்களின் விளம்பரங்களில் மாருதி பணிபுரிந்தார். 'குமுதம்' ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலையை சந்தித்தபோது, அவர் சில தேர்வுகளை நடத்தி மாருதிக்கு மாதம் ஒரு படம் வரையவும் வாய்ப்பை அளித்தார்.
கணவர் ஏணியில் ஏறி வெள்ளையடிக்கும்போது சரிந்து விழுகின்றார். அப்போது உள்ளே இருந்த மனைவி காப்பி கொண்டு வருகிறார். இதைக் கண்டு மனைவி அதிர்ச்சி அடைகிறார். இந்தக் காட்சியைக் கீழே இருந்து பார்த்தால் எப்படி தெரியுமோ அந்தக் கோணத்தில் தத்ரூபமாக ஓவியத்தை மாருதி வரைந்தார். 'குமுதம்' ஏடு ஓவியர் மாருதியைப் பாராட்டியது.
ரங்கநாதன் என்று சொந்தப் பெயரைப் போட நினைத்தார். ஆனால், விளம்பர நிறுவனத்தார் பார்த்தால், வேலை போய்விடும் என்று நினைத்தார் மாருதி. 'என்ன செய்யலாம்' என்று யோசித்தபோது, பக்கத்தில் 'மாருதிராவ்' எனும் மருத்துவரின் பெயர் பலகையைப் பார்த்து 'மாருதி' என்று தேர்வு செய்தார். முதல் ஓவியத்தை 'மாருதி' என்ற பெயரில் வரைந்தாலும், அடுத்த மூன்று ஆண்டுகள் வரையில் 'நாதன்' என்ற பெயரிலேயே வரைந்திருக்கிறார்.
இதைக் கவனித்த எஸ்.ஏ.பி.அண்ணாமலையும் 'மாருதி' என்ற பெயர் நன்றாக இருக்கிறது. இதுவே இருக்கட்டும் என்று சொல்லவே, அதுவே நிலைத்துவிட்டது.
மாருதிக்கு நீண்ட நாளாக பெரிய ஆசை.... ஓவியர் சில்பியை சந்தித்து, அவரிடம் ஆசி வாங்க வேண்டும் என்பது. பலமுறை முயன்றும், முடியவில்லை. ஒருமுறை மாருதி பேருந்தில் பயணித்தபோது, அதே பேருந்தில் சில்பி நின்றுகொண்டிருந்தார். அவரிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்ட மாருதி, பேருந்து என்றும் பார்க்காமல் அவரது கால்களில் விழுந்து ஆசி பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.