நவில்தொறும் நூல்நயம்!

தமிழகத்துப் பதிப்பகங்கள் உலகத் தரத்திலான நூல்களைப் பதிப்பித்துச் சாதனை படைத்து வருகின்றன.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
3 min read

தென்னிந்தியப் புத்தகக் கண்காட்சியில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் புத்தகங்கள் குவிகின்றன. தமிழகத்துப் பதிப்பகங்கள் உலகத் தரத்திலான நூல்களைப் பதிப்பித்துச் சாதனை படைத்து வருகின்றன. அறிவியல் நுட்பங்களின் வளர்ச்சி நூற்பதிப்புத் துறையிலும் பெரிய புரட்சியைச் செய்திருக்கிறது. இன்றைக்கு அச்சு வடிவிலான நூல்கள் மட்டுமின்றி, இணையத்தில் மின்னூல்களும்கூடக் குவிகின்றன.

புதிதாக எழுதப்படுகிற புத்தகங்கள் அல்லாமல் பழம்நூல்களை மீள்பதிக்கின்ற முயற்சிகளும் வெற்றியடைகின்றன. இவற்றுள் பல அரிய பெட்டகங்களும் உண்டு. பொதுவாகவே தமிழிலக்கியங்கள் ஏட்டுச் சுவடிப் பெட்டகங்களாகப் பனையோலைகளிலிருந்து கிடைத்தவைதான்.

நூல் என்ற சொல்லோடு பல சொற்கள் நூலின் திறத்தைக் குறிப்பன. நுவல்வது - நுவலப்பட்டது - நூல் ஆயிற்று. ஆதியிலே மனிதன் எழுதுமுறை, எழுதப்பட்ட பொருள், பொருள் பொதிமுறை கொண்டு (ஏடு, ஓலை, சுவடி, தூக்கு!, பனுவல், புத்தகம், பொத்தகம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது. இந்நூலின் ஆதி வடிவம் சுவடியேயாகும்.

சுவடி என்ற சொல்லுக்கு ஆழ்ந்த பொருளுண்டு. நாம் நடந்து செல்லும் தடத்தைச் சுவடு என்பதைப் போல, எழுத்து பதிந்து சென்ற தடத்தை ஓலையை சுவடி என்று அழைத்தார்கள் போலும்.

அந்தக் காலப் பாடப்புத்தகங்கள் கூடச் சுவடிகளாகத்தான் இருந்தன. சுவடிகளை வைத்துத் தூக்கிச் செல்லும் கயிறுகள் சேர்ந்த பலகைக்குச் சுவடித் தூக்கு என்று பெயர். அந்தச் சுவடித் தூக்கு ஒருவகையான உறிபோன்ற அமைப்பில் இருக்கும்.

பழங்காலத்து மாணவர்களுக்கு மணல் தான் எழுதப் பயிலும் கரும்பலகையாக இருந்தது. அதுபோலப் பனையேடுகள்தான் புத்தகங்களாக அவை இரும்பினாலும் மரத்தினாலும் இணைத்துச் செய்யப் பெற்ற எழுத்தாணியைப் பேனாவாகக் கொண்டு எழுதப்பட்டவை. ஏடுகளை வைத்துக் கல்வி கற்பிக்கப்பட்டதால் அந்தக் காலப் பள்ளிகளுக்கு ஏட்டுப் பன்ளிக் கூடம் என்றே பெயர்கள் அமைந்தன.

ஆசிரியர் தன்னிடம் பயிலும் மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி தருவதற்காக ஓர் ஓலையில் எழுதித் தருவார். அவர்கள் அது போலவே எழுதிப் பழகுவார்கள். அந்த ஓலைக்கு 'மூல ஓலை' என்று பெயர். மூல ஓலைக்குச் சட்டம் என்ற பெயரும் உண்டு.

ஏட்டுச் சுவடிகளுக்குக் குறிப்பிட்ட அளவு ஒன்றும் இல்லை. வெவ்வேறு அளவில் அவை இருக்கும். ஏட்டுச் சுவடிகளில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகனைத் துல்லியமாகப் படிப்பதற்கு வசதியாக அதன் மீது மஞ்சள், ஊமத்தையிலை ச்சாறு, வசம்புக் கரி முதலியவற்றைத் தடவிக் கொள்வது வழக்கம். இது அந்த ஏட்டுச் சுவடிகளைப் பூச்சிகள் கடித்து விடாமல் இருப்பதற்கும் பாதுகாப்பாக அமையும். இந்தச் சுவடிகளின் வலது மூலையில் ஒற்றைத் துளை ஒன்று இருக்கும். அதனுள் ஒரு நூலாலான கயிற்றைச் செலுத்திக் கட்டிக் கொள்வார்கள். இதற்குக் கிளிமூக்கு என்று பெயர்.

பக்குவப்படுத்தப்பட்ட பனையோலைகளை நரம்போடு இணைத்துச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு கிளிமூக்குகளாகப் பயன்படுத்துவார்கள். கிளிமூக்கிற்குப் பதிலாகப் பொத்தானையும், துளையுள்ள செப்புக் காசையும் சோழியையும்கூடப் பயன்படுத்துவதும் உண்டு. நாம் தற்காலங்களில் ஸ்பைரல் பைண்டிங் செய்ய முன்னும் பின்னும் வெற்றுத் தாள்களை வைப்பது போலவே, ஏடுகளின் ஆரம்பத்திலும் இறுதியிலும் வெற்றேடுகள் சிலவற்றை இணைத்திருப்பார்கள்.

இவ்வாறு அரிச்சுவடியையும் எண் சுவடியையும் மட்டுமே கற்றுக் கொண்டிருந்த காலத்தில் தமிழின் மூல வரலாற்றுச் சுவடியைத் தேடிக் கண்டடைந்தவர், உலகுக்குக் கொடையளித்து மகிழ்ந்தவர் 'தமிழ்த்தாத்தா' என்று நாமெல்லாம் போற்றியழைக்கும் மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி உ.வே.சாமிநாதையர்.

பழங்காலத் தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளை முறையாகக் கற்பார் அருகியிருந்த காலம். படியெடுப்பவர்கள் தப்பும் தவறுமாகப் படியெடுத்து எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்' என்னும் பழமொழியை மெய்ப்பித்துக் கொண்டிருந்தனர். இன்றைய நூல்களிலேயே அச்சுப் பிழை இல்லாதவற்றைக் காண முடியாது. அக்காலத்திலோ ஏட்டுச்சுவடிகளைப் பெயர்த்து எழுதியவர்களின் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை. இந்திர இழவூரெடுத்த காதை இந்திர இழவூரெடுத்த காதையாகிப் போன கதைகளும் உண்டு. இவ்வாறு தமிழ் ஏட்டுச் சுவடிகளும் புலவர்களும் மிகுதியாக இருந்த காலத்தில் கூடப் பழைய நூல்களைப் பதிப்பிக்கும் துணிவுயாருக்கும் இல்லை.

ஏட்டுப் பெட்டகங்களுக்குள் புதைந்து போய்க்கிடந்த சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் மணிமேகலை, புறநானூறு, பத்துப்பாட்டு என்னும் தமிழிலக்கியப் புதையல்களைத் தேடித் தேடிக் கண்டறிந்து அவற்றைப் புத்தகங்களாகப் பதிப்பிப்பதற்கு மேற்கொண்ட முயற்சியில் தமிழ்த்தாத்தா அடைந்த இன்னல்களுக்கு அளவேயில்லை.

தமிழிலக்கியங்களின் பெருமையறியாத அந்தக் காலத்தில் இது போன்ற ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பிக்கும் பணியின் அருமை அறிந்தோர் மிகக் குறைவு. அத்திபூத்தாற் போல சில ஜமீன்தார்களும் ஆதீனகர்த்தர்களும், தமிழார்வலர்களும் தவிர உதவுவோர் ஒருவரும் இல்லை. தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் பிரிட்டிஷ் ராணியின் முன் கைகட்டி நின்று பணிவிடை செய்த காலம் அது.

எத்தனையோ எதிர்ப்புகளும் எதிரிகளும் அவருக்கு ஏற்பட்டார்கள். அவருடைய எதிரிகளில் முக்கியமான எதிரிகறையான்! "கறையான் படைகளுடன் அவர் நடத்திய போரை ஒரு மகாகவி வர்ணிக்க வேண்டுமே தவிர சாதாரண வார்த்தைகளில் எழுத முடியாது' என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவார் அமரர் கல்கி. ஆனால், அதில்தான் எத்தனை உண்மை? கடல் கொண்டதுபோகக் கறையான் தின்றது மீள இன்றைக்கு எஞ்சியிருப்பவை தமிழ்த்தாத்தாவின் அருந்தமிழ்த் தொண்டினால் தமிழகம் பெற்ற பரிசிலன்றோ?

கல்கி மொழிந்ததைப் போலவே மகாகவி பாரதியார் தமிழ்த்தாத்தாவைப் போற்றி,

பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்

காலமெலாம் புலவோர் வாயிற்

துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்

இறப்பின்றித் துலங்குவாயே

என்று வாழ்த்திப் பாடினார்.

ஆனால், ஒருபுறம் நிதியின்மை, நவீனத் தொழில்நுட்பங்கள் ஏதும் தோன்றாத காலம், போக்குவரத்து வசதிகள்கூட இல்லாத குக்கிராமங்கள்தோறும் அலைந்து திரிந்து ஒவ்வொரு ஓலைச்சுவடியுள்ளும் ஏதேனும் ஒரு துளிச் செய்தி கிடைத்து விடாதா என்று நாளும் முயன்றார். பொருளாதார வசதி போதுமானதாக இல்லை என்பதை: நிதியறியோம். இவ்வுலகத்தொரு கோடி இன்பவகை நித்தம் தூய்க்கும் கதியறியோம் என்று பாரதியாரே உணர்த்திக் காட்டியிருக்கிறார். ஆனால், அத்தகைய நிலையிலும் தனக்குக் கிடைத்த பொருளுதவிகளைத் தமிழ்ப் பணிகளைத் தவிர்த்துத் தன்னலத்துக்காக ஒருபோதும் அவர் பயன்படுத்திக் கொண்டதேயில்லை.

தமிழ்த்தாத்தாவின் அருந்தொண்டுகளைப் போற்றி இராமநாதபுரம் சமஸ்தானத்து மகாராஜா ஓர் ஊரையே தானமாகத் தருவதற்கு முயன்றார். ஆனால், எளிமைக்கும் பற்றற்ற வாழ்வுக்கும் பழக்கப்பட்டவராகிய தமிழ்த்தாத்தா சமஸ்தானத்தின் நிலைகருதி மிகவும் தன்னடக்கத்தோடு அதை மறுத்து விட்டார்.

தமிழ்த்தொண்டின் ஆர்வமானது அவர்தம் சதை நரம்புகளில் கலந்து, மூச்சு விடுவதைப்போல் இயற்கையோடு இயற்கையாய்ச் சேர்ந்திருந்தது என்பார்கள். இதற்கொரு தகுந்த சான்றுண்டு.

குன்றக்குடி ஆதீனத்தின் சின்னப்பட்டமாக விளங்கியவர் ஆறுமுகத் தம்பிரான். இவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களிடம் தமிழ்த்தாத்தாவோடு இணைந்து பாடங்கற்ற பெருமைக்குரியவர். சுவடி தேடிய காலத்தில் ஓர் அரும்பொழுதில் அவரைத் தரிசிக்க நேர்ந்தபோது, குன்றக்குடி மடத்திலிருந்த அப்பாப் பிள்ளையையும் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் சில சுவடிகள் இருப்பதை முன்பே தமிழ்த்தாத்தா அறிந்திருந்தார்.

அதனால் அதை வேண்டினார். அப்போது, அப்பாப் பிள்ளை ஒரு சுவடியைக் கொண்டுவந்து தந்தார். அதுதான் மிகத் திருத்தமாக எழுதப்பட்ட சிலப்பதிகார, மணிமேகலை மூலம் அடங்கிய ஓலைச் சுவடி. மேலும் சுவடிகள் குறித்து வேண்டிக் கேட்டார் உ.வே.சா. ஆதீன கர்த்தர் ஆணையுடன் மிதிலைப்பட்டிக்கு அழைத்துச் சென்றார் அப்பாப் பிள்ளை. அங்கே சிற்றம்பலக் கவிராயரைச் சந்தித்தார். சுவடிகள் நிறைந்த அந்தக் கவிராயரின் வீடு தமிழ்மகள் ஆலயமாகத் தோன்றியது என்று வியந்து போற்றுகிற தமிழ்த்தாத்தா, அவர் வீட்டிலிருந்த சுவடிகளெல்லாம் மிகவும் திருத்தமாக இருந்தன.

ஓர் ஏட்டின்மேல் புறநானூறு உரை, சிலப்பதிகார உரை என்ற குறிப்பு இருந்தது. எனக்கு அந்த வீட்டைவிட்டு வர மனமில்லை என்று தமிழ்கண்டு மகிழ்ந்த தருணத்தையும் குறிப்பிடுகிற அவர், இது போன்ற சுவடிகள் செவ்வூரிலும் காரைச்சூரான்பட்டியிலும் இருக்கின்றன என்று அவர்கள் சொன்னபோது, 'புதையல் இருக்குமிடத்தை ஒருவர் எனக்குச் சொல்லியிருந்தால் அவ்வளவு சந்தோஷம் உண்டாகியிராது: அவ்வளவு மகிழ்ச்சியில் மூழ்கினேன் என்றும் பதிவிட்டிருக்கிறார். புதையுண்டு கிடந்த தமிழ்ப் புதையல்களை உலகறியத் தந்த தமிழ்த்தாத்தா உவே.சா.வின் அருந்தமிழ்த் தொண்டை இன்றைய தலைமுறை போற்றுவதும் அவர்வழியில் தமிழ்ப் பணியாற்றுவதும் தலையாய கடமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com