டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பெயர்களிலும் வளரட்டும் வரலாறு!

அண்மையில், இலக்கிய நிகழ்வு ஒன்றின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றபோது, அந்த விழாவின் பொருட்டு நடத்தப்பெற்ற இலக்கியப் போட்டிகளில் பங்கேற்றோருக்கும், வென்றோருக்கும் பரிசளிக்க நேர்ந்தது.

News image
கோப்புப்படம்
Updated On :27 பிப்ரவரி 2026, 9:30 pm

கிருங்கை சேதுபதி

அண்மையில், இலக்கிய நிகழ்வு ஒன்றின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றபோது, அந்த விழாவின் பொருட்டு நடத்தப்பெற்ற இலக்கியப் போட்டிகளில் பங்கேற்றோருக்கும், வென்றோருக்கும் பரிசளிக்க நேர்ந்தது. அதில் வினோதமான பரிசளிப்பு ஒன்றும் நடைபெற்றது. அதாவது, பங்கேற்றோரில் தமிழ்ப் பெயர் கொண்டவர்களுக்கு என்று தனிப் பரிசும் பாராட்டும். அப்போது வியப்பும் வேதனையும் தந்த விஷயம் என்னவெனில், பங்கேற்றவர்களின் எண்ணிக்கை மூன்றிலக்க அளவில் அமைந்திருக்க, தமிழ்ப் பெயர் கொண்டவர்களின் எண்ணிக்கை ஓரிலக்க அளவில் இருந்தது.

அவ்வமயம் சான்றிதழ் பெறுபவர்கள் தங்களின் பெயருக்கான விளக்கத்தைச் சொல்லும்படி கேட்டுப் பார்த்தேன். ஓரளவுக்குப் பதில் தந்தவர்களின் எண்ணிக்கையும் அந்த அளவிலேயே அமைந்திருந்தது.

மற்ற சொற்களின் பொருள் தெரியாமல் இருப்பது சரி. தன் சொந்தப் பெயரின் பொருளோ, அது வைக்கப் பெற்றமைக்கான காரணமோ கூடத் தெரியாமல் அறிந்துகொள்ளாமல் இருக்கிறோம் என்று பலருக்கும் அப்போதுதான் தெரிந்தது.

பொதுவாக, அவரவர்தம் குலதெய்வப் பெயர்கள், குடும்பப் பெயர்கள், சிறப்பு வேண்டுதலால் பிறந்த குழந்தைகளுக்கு விருப்ப தெய்வங்களின் பெயர்கள் மற்றும் அத்தெய்வங்கள் உறைகின்ற திருத்தலங்களின் பெயர்கள் சூட்டப் பெறுகின்றன. சிறப்பான நிலையில், உதவிய அன்பர்களின் பெயர்கள்கூடச் சூட்டுகிற நிலை இருந்தது.

நெடும்பண்டைக் காலத்துத் தமிழ்ப் பெயர்கள் பல இன்றளவும் சூட்டப்படுகின்றன. சாத்தன் என்னும் பெயர் சாத்தையா, சாத்தப்பன் என விளங்குகின்றன. பாரி, அங்கவை, சங்கவை, கபிலன் ஆகிய பெயர்களோடு முல்லை, முல்லைக் கொடி என்ற பெயர்களும் சூட்டும் வழக்கம் தொடர்கிறது.

இதிகாசப் பாத்திரங்களின் பெயர்கள் இந்திய மரபுப்படி அமைந்தாலும், அவை தமிழ்மரபேற்றுத் தமிழ்ப் பெயர்களாகியிருக்கின்றன. ராமன்- இராமன், லக்ஷ்மணன்-இலக்குவன், சீதா- சீதை, தர்மன்- தருமன், கர்ணன்- கருணன் ஆகியன அதற்குச் சான்றுகள்.

இவ்வாறே, கிறிஸ்தவப் பெயர்களும் தமிழ் மரபேற்றுத் தமிழ்ப் பெயர்களாகவே ஆகியிருக்கின்றன. டேவிட்- தாவீது, ஆன்டனி குரூஸ்- அந்தோணி குருசு, ஜோசப்-சூசை-வளனார், ஜோசப் ராஜா- வளனரசு எனத் தமிழ்ப் பெயர்களாகியிருக்கின்றன. தமிழ் மரபில்லாப் பெயர்கள் மொழிபெயர்க்கப்பெற்றும் ஒலிபெயர்க்கப் பெற்றும் தமிழ்ப் பெயர்களாகியிருக்கின்றன.

சமய எழுச்சிக் காலத்தில் சமயக் குரவர்களின் திருநாமங்களைப் பிள்ளைகளுக்கு இடுதல் வழக்கமாக இருந்தது. மருள்நீக்கியார் சமணம் சார்ந்து, தருமசேனராகி பின்னர் சைவம் சார்ந்தபின், திருநாவுக்கரசர் ஆனார். அவர்தம் அருள்திறம் கண்டு உவந்த அப்பூதியடிகள் தம் பிள்ளைகளுக்குத் 'திருநாவுக்கரசு' என்றே பெயரிட்டு மகிழ்ந்தார். மூத்தவருக்கும், இளையவருக்கும் அதுவே பெயர். வேறுபாடு அறிய மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்று அழைத்த பாங்கினைப் பெரிய புராண நூல் சுட்டுகிறது. இம்மரபு, சைவ மரபினரைக் கடந்து

மீளவும் சமய எழுச்சி உற்ற காலத்தில் பலராலும் பின்பற்றப்பட்டன. வைணவ, சமண சமயப் பெயர்களும் அவ்வாறே வாழையடி வாழையென வைக்கப்பெற்றும் வழங்கப்பெற்றும் வருகின்றன.

திராவிடச் சிந்தனை ஓங்கிய காலத்தில் புழக்கத்தில் இருந்த ஜாதிப் பெயர்கள் மாற்றம் பெற்றன. பழந்தமிழ்ப் பெயர்கள் மீளவும் நடைமுறைக்கு வந்தன. செம்பியன், நெடுஞ்செழியன், பெருஞ்சித்திரன், சேரலாதன், கோப்பெருந்தேவி, இளவெயினி உள்ளிட்ட பெயர்கள் பரவலாகச் சூட்டப்பெற்றன. தனித்தமிழ் இயக்கம் எழுச்சியுற்ற காலத்தில் பல பெயர்கள் தமிழாக்கம் கண்டன. வேதாச்சலம்- மறைமலையடிகள் ஆனார்; சூரிய நாராயண சாஸ்திரியார்- பரிதிமாற்கலைஞர் ஆனார்; ஜீவானந்தன்- உயிரின்பன் ஆனார்; துரைராசு-முடியரசன் ஆனார்.

தேசிய, சர்வதேச சிந்தனைகள் முகிழ்த்த காலத்தில் உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர்கள், அரசியல் தலைவர்களின் பெயர்கள் தமிழ்க் குழந்தைகளுக்கு வைக்கப்பெற்றன. இயன்றவரையில், ஹ, ஸ, க்ஷ, ஜ ஆகிய கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்தாக்கங்கள் ஆக்கப்பெற்றன.

இலக்கிய ஈடுபாட்டின் காரணமாகத் தம் உள்ளங்கவர்ந்த படைப்பாளிகளின் பெயர்களைத் தம் பிள்ளைகளுக்குச் சூட்டுகிற பான்மையும் இருந்தது. கண்ணதாசன், அண்ணாதுரை, ஜெயகாந்தன், ஜீவா போன்ற பெயர்கள் பலருக்கும் வாய்த்தன.

அதேபோல், புகழ்பெற்ற படைப்புகளில் இடம்பெறும் பாத்திரங்களின் பெயர்களும் பிள்ளைகளுக்குப் பெயர்களாய் வளர்ந்தன. காளிதாசரின் சாகுந்தலம் படித்துக் கொண்டிருந்த காலத்தில் பிறந்த மகளுக்கு, 'சகுந்தலா' என்று மகாகவி பாரதி பெயரிட்டிருக்கிறார். கல்கி, சாண்டில்யன், அகிலன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, மு.வ. ஆகியோர் நாவல்களின் தலைமைப்பாத்திரப் பெயர்கள், தமிழ்க் குழந்தைகளின் பெயர்களாக மறுவுருவெடுத்தன.

தமக்கு முந்தைய தகுதியாளர்களின் தாசர்களாகத் தம்மை ஆக்கிக் கொண்டு புனைந்த பெயர்களும் பலருக்குச் சொந்தப் பெயர்களாக நிலைகொண்டிருக்கின்றன. அவ்வகையில், கனக.சுப்புரத்தினம்- பாரதிதாசன் ஆனார். அப்பாவு - கம்பதாசன் ஆனார். உவமைக் கவிஞர் "இராசகோபாலன்' என்ற தன் பெயர் விடுத்துப் புனைவுப் பெயராக, சுப்புரத்தினதாசன் என்பதைச் சுருக்கி, சுரதா என்று அமைத்துக்கொண்டார். அதுபோல், ஜெயகாந்த தாசன்- ஜெகாதா ஆனார்.

கண்ணதாசன் மரபில், வாணிதாசன், முருகதாசன், பெரியார்தாசன் என்று பெயர் சூட்டிக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோர் பெயர்கள் போலத் திரைத்துறைசார் பிரபல நடிக, நடிகைகள் பெயர்களைப் பெற்றோர் சூட்டியதும் உண்டு. தம் பெயர்களுடன் சேர்த்துத் தாமே இட்டுக் கொண்டவர்களும் உண்டு.

திருமுறைகளில் உள்ள ஈடுபாட்டால், தம் பிள்ளைகளுக்கு அருளாளர்களின் திருநாமங்களை இட்டவர்கள் பலர். நாவுக்கரசு, வாகீசன், மணிவாசகன், சுந்தரம் என்றும் மங்கையர்க்கரசி, திலகவதி, புனிதவதி என்றும் பெயரிடுகிற வழக்கம் தொடர்கிறது.

நாட்டரசன் கோட்டையில் உள்ள கண்ணாத்தாள் என்னும் அம்மன் பெயரை முன்னிறுத்திப் பெண் குழந்தைகளுக்குக் கண்ணம்மா, கண்ணாத்தாள் என்றும், ஆண் குழந்தைகளுக்கு, கண்ணப்பன் என்றும் பெயரிடுகிறார்கள்.

ஊர்ப்பெயரொடு, தம் பெயர் இணைத்துக்கொள்ளும் மரபு சங்க காலந்தொட்டே இருந்துவந்தது, இப்போதும் தொடர்கிறது. சுப்பிரமணியம் என்ற தன் பெயருக்குமுன் ஊர்ப்பெயர் சேர்த்து, இளசைச் சுப்பிரமணியன் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் பின்னர் பட்டப் பெயராக அமைந்த "பாரதி'யை, தன் பெயருக்குப் பின் இணைத்து, சுப்பிரமணிய பாரதி என்றே குறித்துக் கொண்டார். பின்னர் மகாகவி என்ற சிறப்புப் பெயராலேயே அறியப் பெறுபவரானார்.

முழுப் பெயரையும் சொல்வது தவிர்த்து, தந்தை பெயரின் முன் எழுத்தும் தன் பெயரின் முன் எழுத்தும் கொண்டு அறியப்பெற்ற பெயர்களும் உண்டு.

வ.உ.சிதம்பரம்- வ.உ.சி., சா.கணேசன்- சா.க., இராய.சொக்கலிங்கன்- இராய.சொ., வ.சுப.மாணிக்கம்- வ.சுப.மா., சா.விஸ்வநாதன்- சாவி., ம.பொ.சிவஞானம்- ம.பொ.சி., மு.வரதராசன்- மு.வ., தி.க.சிவசங்கரன்- தி.க.சி. ஆகிய பெயர் வரிசையில், ஊர்ப் பெயரின் முதல் எழுத்தும் சேர்த்து அழைக்கப்பெறும் மரபும் நம்மிடையே உண்டு.

திருவாரூர் விருத்தாசலம் கல்யாண சுந்தரனார் என்ற பெயரின் சுருக்கமே, திரு.வி.க. என்றானது. அதுபோல், மம்சாபுரம் ராக்கப்ப போத்திலிங்க குருசாமி என்பதன் சுருக்கம் ம.ரா.போ.குருசாமி.

உதவி புரிந்தவர்தம் அன்பினை நினைவுகூர்ந்து நன்றியறிதலுக்காக இடப்பெற்ற பெயர்களும் உண்டு. பிரிட்டிஷ் அரசின் நீதிமன்றத்தில், தனக்காக வாதாடிய வாலஸ்துரையின் நினைவாக தம் புதல்வருக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டவர் வ.உ.சி.

நியூமராலஜி என்னும் எண் ஜோதிடம் புழக்கத்தில் வந்த பிறகு, பற்பலப் புதுப் பெயர்கள் தமிழ்க் குழந்தைகளுக்கு இடப்பெறுகின்றன. குறிப்பிட்ட எழுத்துகளில் பெயர் அமைய வேண்டும் என்பதற்காக, தமிழில் மொழிமுதல் வாரா எழுத்துகள், மொழிக் கடை வாரா எழுத்துகள் பலவற்றைக் கைக்கொண்டு, பொருளறிந்தோ, அறியாமலோ, வாய்க்கு வழங்க சிரமமான மரபற்ற பெயர்களைச் சூட்டுவது அதிகரித்து வருகிறது.

புண்ணியங்களை வரிசைப்படுத்தி மகாகவி பாரதியார் இசைத்த பாடல் ஒன்றில், "பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்' என்று குறிப்பிடுவார். பண்ணும் புண்ணியங்களால் பெயர் விளக்கமாகிய கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகளில் பதிவாகிய வரலாறுகள் தமிழுக்குத் தனிப்புகழைப் பெற்றுத் தருவனவாக அமைகின்றன.

அண்மையில் எகிப்தில் கண்டறியப்பெற்ற கல்வெட்டுகளில் சிகைக் கொற்றன், சாத்தன், கீரன் ஆகிய தமிழ்ப் பெயர்கள் இருக்கக் கண்டு பெருமிதம் கொள்கிறோம். அதே நேரத்தில் நம் காலத்துத் தமிழ் மக்களின் பெயர்களில் எத்தனைப் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக அமைந்திருக்கின்றன என்று கவலை கொள்கிறோம்.

'தணிப்பரிய துன்பமதாம் தமிழ்நாட்டில் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை' என்று அப்போதே கவலையுற்றுக் கவி பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். அவரைப் போலவே, 'தமிழ்நாட்டில் தமிழ் வீட்டில் தமிழ்ப்பெயர்தான் இல்லை' என்று சொல்லும் நிலை வந்திருக்கிறது. இதில் மாற்றம் வரவேண்டுமல்லவா?

பழம் பெருமையில் பங்கேற்கிற நாம் புதுப் பெருமைகளை வளர்த்தெடுக்கிற கட்டாயத்திலும் இருக்கிறோம் என்பதை நினைவூட்டுவதும் செயல்படுத்துவதும் காலத்தின் தேவையல்லவா?

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.