தெ.ஞா. என்னும் தெய்விக ஞானக் குழல்

பூரண பொற்குடத்துக்கு மூவிரலால் நீறிட்டதுபோல், ஞானம் ததும்பும் திருமுகத்தில் நிறைபேரமைதி பொலியப் புன்னகைக்கும் தெ.ஞா., தன் வாழ்வைத் தமிழாய் நிறைத்துக் கொண்டார்.
தெ.ஞா. என்னும் தெய்விக ஞானக் குழல்
Updated on
2 min read

கிருங்கை சேதுபதி

பூரண பொற்குடத்துக்கு மூவிரலால் நீறிட்டதுபோல், ஞானம் ததும்பும் திருமுகத்தில் நிறைபேரமைதி பொலியப் புன்னகைக்கும் தெ.ஞா., தன் வாழ்வைத் தமிழாய் நிறைத்துக் கொண்டார். லிகனிந்த ஞானம் பிழிந்த பழச் சாறாய் அவரிடம் இருந்து பிறந்த அமுதச் சொற்கள் நிறைவு கொண்டன. லி

சங்கத் தமிழும், சைவ, வைணவ சமயத் தமிழும், பொங்கிப் பெருகிய கம்பராமாயணம் முதலாக் காப்பியத் தமிழும், பாரதி முதலாப் பைந்தமிழ்

வாணர் ஓதிய தமிழும், மொழிக்கு உயிரலிலிலிலிலிலிலினைய இலக்கணத் தமிழும் தன் வயமாகச் சிந்தித்துச் சிந்தித்துச் சிறந்தவை. எழுதிய நூல்களும், பேசிய உரைகளும் அவரது பெருமிதம் காட்டுகின்றன.

பண்பின் நிறைகுடமாய், பணிவின் இருப்பிடமாய், அன்பின் பிறப்பிடமாய், ஆற்றலின் சிறப்பிடமாய் அவர் திகழ்ந்தவர். தமது பெயருக்கு ஏற்பத் திறம்படச் செயலாற்றிய,தெ.ஞா. இரண்டெழுத்தில் நிலைநிற்கும் பண்புப் பெயராகிவிட்டார். மயிலாடுதுறை மாவட்டக் குழையூரில், தண்டபாணி பிள்ளை- தையல் நாயகி தம்பதியருக்கு, 24.9.1941-இல் மகவாகப் பிறந்த ஞானசுந்தரம், தென்றலொடும் உடுக்களொடும் பிறந்த செந்தமிழின் மைந்தரானார்.

சென்னைக் கம்பன் கழகத் துணைச் செயலராக இருந்து கம்பராமாயண வகுப்புகள் நடத்தியதோடு, அந்த நூலை முழுமையாக, மெல்லிய தாளில் நேர்த்தியாக அச்சிட்டு வெளியிட்டார். பேராசிரியர்கள் தெ.பொ.மீ., அ.ச.ஞா, கம்பன் அடிப்பொடி சா.கா., நீதியரசர் மு.மு.இஸ்மாயில் உள்ளிட்டோருடன் பழகியவர். தென்தமிழும் வடமொழியும் தேர்ந்த இவர் ஆங்கிலத்திலும் புலமையரானார். கம்பநாடரில் தான் கண்ட புதிய வெளிச்சங்களை நூலாக்கி உலகறியப் புலப்படுத்தினார். கம்பர் போற்றிய கவிஞராகத் திருவள்ளுவரைத் தரிசனப்படுத்தினார்.

'புல்லாகிப் பூண்டாகிப் புழுவாகி மரமாகி' என வளரும் சிவபுராணத் திருத்தொடர் வரிசையில், 'கல்லாய் மனிதராய்' என வரும் தொடர் 'கல்லா மனிதராய்' என அமைந்திருக்கக்கூடும் என்று கூறிய செய்தி செவிகளில் நிறைக்கிறது. தினமணியில் அவர் தொடர்ந்து எழுதிய ஆக்கங்களும், அவ்வப்போது எழுதிய கட்டுரைகளும் காலம் கருதிப் பிறந்த கற்கண்டுச் சொற்கோவைகள். இலக்கணச் செறிவு, இலக்கிய நயத்திற்கு எவ்வளவு இன்றிமையாதது என்பதை இவர் போல் எடுத்துச் சொல்ல வல்லவர் எவர்?

கல்லூரி மாணவனாக, சென்னைக் கம்பன் கழகப் போட்டிகளுக்குச் சென்ற காலத்தில் தொடங்கிய நட்பு, கல்லூரிப் பேராசிரியனாகப் பணிபுரியும் காலத்திலும் நிறைநீர நீரவர் கேண்மையாக வளர்ந்தது. இரவு பகல் எந்த நேரத்திலும் ஐயம் தெளிவிக்கும் ஆசானாக அவர் திகழ்ந்தார். மெய்ம்மையை விளக்கினார். அச்சாக்கம் செய்யப் புகும் நூல்களைக் கணினியிலேயே பார்த்துப் படித்து, மிக நுட்பமான அணிந்துரைகள் வழங்கி ஆசி நல்கினார்.

சந்திக்கும் பொழுதுகளில் கனிந்த அன்பின் ஈரம் ததும்பிய சொல்லாலும் தோள் தழுவிப் பரிவு காட்டும் உறவாலும் பெற்ற பேறு தமிழாய் இனிக்கிறது. என்னைவிடவும் அண்ணலின் ஈரத் தமிழுக்குப் பாத்திரமாகிப் பயன் பெற்றோர் பலர்.

கவனக்குறைவோ, கருத்துப் பிசகோ சிறிதும் நேராமல், கொடுத்த நேரத்தில், உரிய கருத்துகளை நிரல்பட எடுத்து மொழிவதில் அவருக்கு நிகர் அவர்தான். நிகழ்வுக்கு உரிய நேரத்துக்கு முன்பே வந்துவிடுவார். நிகழ்வு முடிகிற வரைக்கும் இருந்து கேட்பார்.

அரங்கத்தில் இருப்பவர் அனைவரும் மனம் கொள்ளுமாறு சொல்லுகிறபோது, அபிநயம் பிடிக்கும் விரல்கள். குரலில், ஒரு ஞானப் புல்லாங்குழல் நாதம் எழுப்பும். தேவையான அளவுக்கு, ஏற்ற இறக்கத்துடன் செய்திகளை எடுத்துரைக்கும் போது, கட்டைவிரலும் ஆட்காட்டி விரலும் வளைந்து நுனி தொட்டுக் கொள்ளும். விரித்த மூன்று விரல்கள் வெளியில் அவர் சொல்லை நிறுவிக் காட்டும்.

குன்றக்கூறல், மிகைபடக் கூறல், கூறியது கூறல் அவரிடம் இருக்காது. வசையொழிந்த அவர் மொழியில், புகழ் மொழியும் இயல்பு நவிற்சியாகவே இருக்கும். மொழிப் பற்று உண்டு. பகைமை இல்லை. பக்தி உண்டு. பகட்டு இல்லை. அன்பு உண்டு. அகந்தை கிடையாது. இன்பமோ, துன்பமோ எதனையும் வெளிப்படுத்திக் கொள்ளாத எளிமை இவர் சொத்து. பழகுநர், தனது பெயரர் வயதென்றாலும், ஒருமையில் அவர் குறிப்பதோ, அழைப்பதோ இல்லை.

முதுபேரறிஞர் மு.வ.வின் சீடர். தனக்குப் பின் தமிழுக்குத் தகு நூல் எழுதி வரும் எவருக்கும் உரிய அங்கீகாரத்தைத் தன் அணிந்துரைகளால் வழங்கி ஆசியளித்த அவர் ஆற்றிய உரைகள் காணொலிகளில் உயிர்ச்சித்திரங்களாக உலவிவருகின்றன. அவர் வகுத்த வழியில் வாழ்தல் அறம். தெ.ஞா. என்னும் தெய்விக ஞானக் குழல் என்றும் நின்று இசைக்கிறது நம்முள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com