பாரம்பரிய விளையாட்டுகளை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காலம்காலமாக விளையாடி வந்தனர். 1980களில் தொலைக்காட்சி வருகை, 1990களில் கேபிள் டி.வி., சாட்டிலைட் சேனல்கள்
பரவலானதால், பாரம்பரிய விளையாட்டுகள் படிப்படியாக மறையத் தொடங்கின. 2010களில் விடியோ கேம்ஸ் உள்ளிட்டவை பிரபலமாகிவிட்டதால், குழந்தைகள் கணினித் திரை, கைப்பேசி பயன்பாட்டில் மூழ்கிவிட்டனர். இவற்றில் மூழ்கிய குழந்தைகள் கண் பார்வை குறைவு, மன அழுத்தம் போன்ற உடல் நலப் பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர்.
இந்த நிலையில், தஞ்சாவூரில் புதுக்கோட்டை சாலையில் உள்ள பிஷப் சுந்தரம் வணிக வளாகத்தில் திறன் மேம்பாட்டு மையத்தை நடத்தி வரும் பி. ஆனந்த் ரேவதி தம்பதியினர் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்காக குழந்தைகளுக்கு இலவசமாக கற்றுக் கொடுத்து வருகின்றனர்.
அவர்களிடம் பேசியபோது:
'கைப்பேசித் திரையில் மூழ்கிவிட்ட குழந்தைகளை மீட்க, இந்த மையத்தில் வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை பாரம்பரிய விளையாட்டுகள் தமிழாசிரியர் மூலம் இலவசமாகக் கற்றுத் தரப்படுகின்றன. ஒருவருக்கொருவர் கலந்துரையாடி விளையாடுவதால், மன அழுத்தம் இல்லாமல், மகிழ்ச்சியாக விளையாடுவர். மற்றவர்கள் சுற்றியிருந்து பார்க்கும்போது அவர்களுக்கும் சிந்தனைத் திறன் மேம்படும். இந்த விளையாட்டுகளில் மற்றவர்களுடன் பழகி விளையாடுவதால், சமூக உறவுகள் மேம்படுகின்றன. மூளை, கைவிரல்கள் உள்ளிட்டவையும் வலுவடைகின்றன.
கைப்பேசியில் கேம்ஸ் விளையாடும்போதோ, பொழுதுபோக்கு அம்சங்களைப் பார்க்கும்போதோ அவரவர் தனிப்பட்ட முறையில் விளையாடுவர். கைப்பேசியில் விரல்களைப் பயன்படுத்தும்போது, நரம்புகள் வலுவிழக்கின்றன. கைப்பேசியைக் குழந்தைகள் அதிமாகப் பயன்படுத்துவதால், அதன் விளைவுகள் சில ஆண்டுகளில் தெரிய வரும். அவர்களுக்கு உடல் பாதிப்புகள் ஏற்படும். சிறு வயதிலேயே கண் கண்ணாடி அணியக்கூடிய நிலை அதிகரித்து வருகிறது. கவனச் சிதறல் அதிகரிக்கிறது.
எனவே, குழந்தைகள் கைப்பேசியைப் தொடர்ந்து பார்ப்பதைத் தவிர்க்கச் செய்வதற்காக இந்த முயற்சியை செய்து வருகிறோம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு கற்கும் குழந்தைகள் தங்களது குடியிருப்புப் பகுதியிலுள்ள மற்ற குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து சேர்ந்து விளையாடினால், இதற்கான பயன்கள் கிடைக்கும். இந்த விளையாட்டுகளில் பொருள்களை வாங்கக் கூடிய செலவுகள் கிடையாது. வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே விளையாடலாம்.
நூறாங்குச்சி: நூறாங்குச்சி விளையாட்டில் பெரிய குச்சியைப் பயன்படுத்தி, சிறிதாக உள்ள பத்து குச்சிகளை நழுவாமல் எடுக்க வேண்டும். நுணுக்கமாகக் கவனித்து குச்சிகளை அசையாமல் எடுக்கும் இந்த விளையாட்டு குழந்தைகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும் திறன் மேம்படும். கவனச் சிதறல் இருக்காது. மேலும், குச்சிகளை நழுவாமல் எடுக்கும்போது, குழந்தைகளுக்கு கை நடுக்கம், பதற்றத்தைப் போக்கிவிடுவது மட்டுமல்லாமல், அவர்களது நரம்புகள் வலுவடையும்.
வளையல் விளையாட்டு: வீட்டில் உடைந்த வளையல்களை வைத்து விளையாடப்படும். ஒரு வட்டத்துக்குள் வளையல்களைச் சரியாக வீசி, அதைப் பிரிப்பது, எடுப்பது என விளையாடப்படுகிறது. கை நடுக்கத்தைப் போக்குவது மட்டுமல்லாமல், கவனம் செலுத்தும் திறனும் மேம்படும்.
கிச்சு கிச்சு தாம்பலம்: கிச்சு கிச்சு தாம்பலத்தில் மண்ணைக் குவித்து வைத்து, அதற்குள் சிறிய குச்சியை நுழைத்து உள்ளே கொண்டு சென்று, ஒளித்து வைக்கப்படும். எதிரே உட்கார்ந்து விளையாடுபவர், அந்தக் குச்சி எங்கே இருக்கிறது எனத் தேடுவார். சிலர் குச்சி எங்கே வைக்கப்பட்டுள்ளது என்பதைச் சரியாகக் கணித்து எடுத்துவிடுவர். இதனால் மற்றவர் என்ன கணிக்கிறார் என்பதைச் சரியாகக் கணிக்கும் திறன் நமக்குக் கிடைக்கிறது. எதிரே உட்கார்ந்திருப்பவரின் தந்திரத்தையும் அறிந்து கொள்ளும் திறன் மேம்படுகிறது.
சில்லு: ஒவ்வொரு கட்டத்தில் சில்லைப் போட்டு தாண்ட வேண்டும். இதன் மூலம் குழந்தைகளின் கால்கள் வலுவடைகின்றன. குழந்தைகளுக்கு பக்க விளைவு இருக்காது.
பல்லாங்குழி: காய்களின் எண்ணிக்கையை வைத்து விளையாடப்படுகிறது. இதில், குழிகளில் எண்ணிக் கொண்டு காய்களைப் போடுவதன் மூலம் கணிதத் திறன் மேம்படுகிறது. தோல்வியைத் தாங்கிக் கொள்ளும் மனப்பான்மை கிடைக்கிறது. கை விரல்களில் புளியங்கொட்டைகளை அள்ளிக் கொண்டு, குழிகளில் ஒவ்வொன்றாகப் போடும்போது, விரல்களுக்கு அக்குபிரஷர் பயிற்சி கிடைக்கிறது. இதன் மூலம் விரல்கள் வலுவடைகின்றன.
தாயக்கட்டை: கட்டங்களின் எண்ணிக்கை தெரிய வேண்டும். முதலில் தாயம் போட்டால்தான் விளையாட்டைத் தொடங்க முடியும். இதில், பல்வேறு நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டு விளையாடும்போது, குழந்தைகளுக்குக் கணிதத் திறன் மேம்படுகிறது.
பரமபதம்: ஏணியைக் கொண்டு மேலும் செல்வதும், பாம்பு வாய் பகுதிக்குச் செல்லும்போது கீழே இறங்குவதும் இருப்பதால், தோல்வியை ஏற்றுகொள்ளும் மனப் பக்குவம் மேம்படுகிறது. மீண்டும் முயற்சி செய்தால், வாழ்க்கையில் முன்னேற்றமடைய முடியும் என்பதை ஊக்கப்படுத்தும்.
கில்லி: கிட்டிப்புல் வேப்ப மரத்தில் செய்யப்படுகிறது. இதை வேகமாக அடித்து விளையாடும்போது, கிட்டி எவ்வளவு தொலைவுக்குச் செல்ல வேண்டும் என்பதைக் கணித்து அடிக்கப்படுகிறது. மேலும், விழுந்த இடம் வரை கோலால் அளவீடு செய்யும்போது, கணிதத் திறன், கைக்கு வலு போன்றவை மேம்படும்.
கல்லாங்காய்: குழந்தைகள் மட்டுமல்லாமல் பெண்களும் விளையாடுவர். ஒவ்வொரு கல்லாக மேலே எறிந்து கையில் பிடிக்கும்போது, அதை எவ்வளவு உயரத்துக்குக் கொண்டு சென்றால், பிடிக்க முடியும் என்பதைக் கணிக்கும் திறன் கிடைக்கிறது. இந்த விளையாட்டில் கைவிரல்களும் வலுவடைகின்றன. கற்கள் மேலே எறிந்து பிடிக்கும்போது கண்களுக்கும் பயிற்சியாக அமைகிறது.
ஆடு புலி ஆட்டம்: கட்டங்கள் போட்டு விளையாடப்படும். ஒருவர் ஆடுகளாகவும், மற்றொருவர் புலிகளாகவும் இருந்து விளையாடுவர். புலிகளை ஆடுகள் பிடிப்பது, ஆடுகளை புலிகள் வெட்டுவது என்கிற அடிப்படையிலான இந்த விளையாட்டின் மூலம் சூழலை உணர்தல், திட்டமிடல், நினைவாற்றல், கூரிய கவனிப்பு போன்ற திறன்கள் மேம்படுகின்றன. இதேபோல, ஸ்கிப்பிங், கண்ணாமூச்சி உள்ளிட்ட விளையாட்டுகள் கற்றுத் தரப்படுகின்றன' என்கிறனர் ஆனந்த், ரேவதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.