சென்னை லயோலா கல்லூரியில் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை என். ஜென்ஸி, அதே கல்லூரியில் ஒப்பந்த முறையில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஜென்ஸியை நேரில் அழைத்து, 'கல்வி மூலம் உயரங்களைத் தொடப் பாடுபடும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு ஜென்ஸியின் கடின உழைப்பானது கலங்கரை விளக்கம்.
சமூகத் தடைகள், நிராகரிப்புகளைக் கடந்து, கல்வி என்ற சக்தியால் ஜென்ஸி வெற்றி பெற்று மற்ற திருநங்கைகளுக்கு முன்மாதிரியாகியுள்ளார்' என்று வாழ்த்தினார்.
ஜென்சி ஆங்கிலம் மட்டும் கற்பிக்கவில்லை. மனதைரியமும், விடாமுயற்சியும் இருந்தால் கல்வியால் ஒருவர் அவர் யாராக இருந்தாலும் உயரங்களைத் தொட முடியும் என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
'கல்விதான் கடைசி வரை கை கொடுக்கும்' என்று கூறும் ஜென்ஸியிடம் பேசியபோது:
'நான் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவள். திருத்தணி அருகேயுள்ள ஆர்.கே. பேட்டையை அடுத்த புதூர் எனது பூர்விகம். பள்ளிப் படிப்பு தமிழ் வழியில்தான். ஆங்கில இலக்கியத்தில் பட்டப் படிப்பை திருத்தணி அரசு கலைக் கல்லூரியிலும், முதுகலை, ஆய்வியல் நிறைஞர் படிப்புகளை வியாசர்பாடி அரசு கலைக் கல்லூரியிலும் படித்தேன்.
முதுகலைத் தேர்விலும் சென்னைப் பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் பெற்றேன். லயோலா கல்லூரியில் முனைவர் பட்டத்தை இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெற்றேன். எனக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஆங்கில துறைத் தலைவரான மேரி வித்யா பொற்செல்வி.
எனது அப்பா சிறு வயதிலேயே இறந்துவிட்டார். அம்மாதான் படிக்க வைத்தார்கள். சென்னையில் ஆதரவற்ற திருநங்கைகள், திருநம்பிகள் தங்கிப் படிக்கும் மத்திய அரசின் கண்ணிய இல்லத்தில் தங்கி, முனைவர் பட்டத்துக்காகப் படித்தபோது, சென்னை அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராகப் பணிபுரிந்தேன்.
பத்து ஆண்டுகளாக சென்னை புத்தகக் கண்காட்சிகளின்போது அறிவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன். பொதுநலத் தொண்டு நிறுவனங்களுக்கு மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆங்கிலம் பயிற்றுவித்தேன். வியாசர்பாடி அரசு கலைக் கல்லூரியிலும் பகுதி நேர உதவிப் பேராசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறேன். லயோலா கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் முழுநேர உதவி பேராசிரியராக நியமித்துள்ளனர்.
லயோலா கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் 7 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு அவர்கள் விரும்பும் பாடப்பிரிவில் எந்தக் கட்டணமும் வாங்காமல் இலவசமாகப் படிக்க வைக்கின்றனர். இங்கு பணிபுரிவது எனக்கு பெருமைதான். இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே எனக்குப் பெண் மாதிரி பேசுவதும், நடப்பதுமாக மாற்றம் வந்துவிட்டது. சிறுமிகளுடன் பழகுவது பிடித்தது. வகுப்பில் முதல் மாணவனாக வருவதால் என்னை யாரும் கேலி செய்யவில்லை. கல்லூரியிலும் அப்படியே. நான் பெண் என்று புரிந்துவிட்டது. அதை நான் வெளிப்படையாக அம்மாவிடம் கூட சொல்லவில்லை. 'பால் திரிபு' காரணமாக, சமூகத்தில் திருநங்கைகள் படும் கஷ்டங்களைத் தெரிந்துகொண்டதால், படிப்பு ஒன்றுதான் கடைசிவரையில் எனக்குத் துணையாக இருக்கும் என்று முடிவு செய்துவிட்டேன். அதிர்ஷ்டவசமாக வீட்டில் என்னிடம் வந்த சுபாவ மாற்றத்தைப் பெரிதுபடுத்தவில்லை. உறவினர்கள், அக்கம்பக்கம் என்னை கேலி செய்வார்கள். நான் படிப்பிலேயே முழு கவனம் செலுத்திவந்தேன்.
எம். ஃபில். முடிக்கும் வரை ஆண் உடையை அணிந்துவந்தேன். பிறகுதான் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டேன். அதற்கு முன்தான் அம்மா, மூத்த சகோதரி, அண்ணனிடம் உண்மையைச் சொல்லி, 'பெண்ணாக மாறப் போகிறேன்' என்பதைச் சொன்னபோது அவர்கள் அதிர்ந்தனர். ஆனாலும் மனததைத் தேற்றிக் கொண்டு ஆதரவாக நின்றனர். சென்னையில் வாடகை வீட்டில் வசித்துவருகிறேன். தமிழ்நாடு அரசுப் பணிகளில் திருநங்கைகள், திருநம்பிகளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. அதனால் அவர்கள் படித்தாலும் வேலை கிடைப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.
தமிழ்நாட்டில் திருநங்கைகளில் நான் மட்டும்தான் 'முனைவர்' பட்டம் பெற்று உதவிப் பேராசிரியராகியுள்ளேன். கருணை அடிப்படையில் எனக்கு அரசு கல்லூரியில் பணி வழங்க வேண்டுகிறேன். இதனால், ஆதரவற்ற திருநங்கைகள், திருநம்பிகள் திசை மாறிப் போகாமல் கல்வியின் பக்கம் வருவார்கள். படிப்பார்கள். முன்னேறுவார்கள்.
முதல்வரே என்னைப் பாராட்டியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எனது தனிப்பட்ட சாதனை அல்ல. திருநங்கை சமூகத்துக்கான எனது சிறு பங்களிப்பு. திருநங்கைகள் சமூகத்தின் கண்ணியம், கல்வி, சம வாய்ப்பு, சம உரிமைக்கான அங்கீகாரத்தை கல்வி ஒன்றுதான் பெற்றுத் தரும். கல்வி கடைசிவரை கை கொடுக்கும். கல்வி வாழ்க்கையை மாற்றும் என்பதால், திருநங்கைகள் மத்தியில் படிப்பில் கவனம் செலுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். திருநங்கைகளை திருநம்பிகளை அவர்களது வீடுகளில் உறவுகள் அங்கீகரிக்க வேண்டும்' முனைவர் ஜென்சி .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.