எழுத்தாளர்களின் வாழ்வில்....

எழுத்தாளர்கள் பல ஆண்டுகள் கழித்தும், இன்றும் நினைவு கூறப்படுகின்றனர். அவ்வாறு சில எழுத்தாளர்களின் வாழ்வில் நடைபெற்ற சுவாரசியங்கள்:
எழுத்தாளர்களின் வாழ்வில்....
Published on
Updated on
2 min read

எழுத்தாளர்கள் பல ஆண்டுகள் கழித்தும், இன்றும் நினைவு கூறப்படுகின்றனர். அவ்வாறு சில எழுத்தாளர்களின் வாழ்வில் நடைபெற்ற சுவாரசியங்கள்:

ஷெல்லி என்ற ஆங்கில மகாகவியின் பாடல்கள் அற்புதமானவை. இவருக்கு மக்களை சீர்திருத்த வேண்டும் என்ற ஆசை. ஏதாவது ஒரு நாட்டு மக்களுக்கு தாம் சொல்ல விரும்பும் அறிவுரைகளை ஒரு காகிதத்தில் எழுதுவார். அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடுவார்.

பாட்டிலின் மேல் எந்த நாட்டுக்கு அனுப்ப விரும்புகிறாரோ, அந்த நாட்டின் பெயரை எழுதுவார். அதைத் தபாலில் அனுப்ப மாட்டார். கடலில் எறிவார். கடலில் எறிந்தால் அது மிதந்துகொண்டே போய் யாருக்கு எழுதப்பட்டதோ அந்த நாட்டவர்களின் கைக்கு கிடைக்கும் என்பது ,ஷெல்லியின் அபார நம்பிக்கை.

எஸ்.விஜயலட்சுமி, புதுக்கோட்டை.

எழுத்தாளர் மார்க்டுவெய்ன் 1876இல் டாம்சாயரின் சாகசங்கர் என்ற தனது நாவலை தட்டச்சு செய்து உருவாக்கினார். இதுவே தட்டச்சில் உருவான முதல் நாவலாகும்.

கோட்டாறு ஆ.கோலப்பன்

ஒருமுறை தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் ஸ்ரீரமண ஆசிரமத்துக்குச் சென்றிருந்தார். அவர் பக்தியுடன் ரமண மகரிஷியின் காலில் விழுந்து வணங்கினார். அப்போது, 'எனக்கு சந்நியாசம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. ஆனால், பந்த பாசம் போகவில்லை' என்று உ.வே.சா. கூறினார். 'பந்த பாசமா' என்றார் ரமணர்.

'ஆமாம்.. இந்த ஏட்டுச் சுவடிகளை வைத்துகொண்டு இரவும் பகலும் அல்லல்படுவதில் மனம் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. அந்தப் பந்தம் ஒழியுமானால், சந்நியாசம் வாங்கிக் கொள்ளலாம்' என்று உ.வே.சா. கூறினார். அதற்கு ரமணர், 'அது பந்தம் அல்ல. உலகத்துக்காகச் செய்கிற காரியம் அது. தனக்காகச் செய்யும் காரியங்களை விலக்கி விடுவதுதான் சந்நியாசம். ஒரு குடும்பத்தை விட்டு வருகிற சந்நியாசிக்கு உலகமே குடும்பம் ஆகிவிடுகிறது. ஆதலால், நீங்கள் இப்போதே சந்நியாசியாகவே இருக்கிறீர்கள். நீங்கள் செய்துவரும் தமிழ்த் தொண்டே சந்தியாச யோகம்' என்றார். இந்தப் பதில் உ.வே.சா.வுக்கு மன நிறைவை அளித்தது.

நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

'கடந்த 40 ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பாரதியார் நமது குலதெய்வம். நமது என்றால் என்னுடைய, உன்னுடைய இந்த மொழியில் எழுதுகிற, எழுதப் போகிற அனைவருக்கும்.. ஒருமுறை க.நா.சு.வும், 'பாரதி, பாரதி என்று சொல்லிக் கொண்டிருக்கிறாயே! பாரதி எழுதலைன்னா என்ன பண்ணியிருப்பே' என்று. அதெயெல்லாம் நான் எழுதியிருப்பேன் என்று பதில் சொன்னேன். பாரதி நம்மிடமிருந்து வேறல்ல. நமது கனவுகளில் இருந்து பிறந்தவர். அவர் நம்முடைய நவீன இலக்கியத்தின் ஒவ்வொரு கிளையும் அவரால் தொடங்கப்பட்டதுதான்' என்று ஜெயகாந்தன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

நவீன எழுத்தாளர்களில் பழந்தமிழ் இலக்கியத்தைப் பற்றி நல்ல அறிவு பெற்றவர்கள் புதுமைப்பித்தனும், அழகிரிசாமியும்தான் என்று ஒருமுறை க.நா.சு. சொன்னார். புதுமைப்பித்தனும், அழகிரிசாமியும் சேர்ந்து, 'சோதனை' எனும் பத்திரிகை நடத்துவது பற்றி திட்டமிட்டனர். அதற்குள் எதிர்பாராதவிதமாய் புதுமைப்பித்தன் இறந்துவிட, அந்த எண்ணம் நிறைவேறவில்லை. கு.அழகிரிசாமி எழுதியுள்ள 'நான் கண்ட எழுத்தாளர்கள்' என்ற நூலில் அவர், புதுமைப்பித்தனுடன் பழகிய அனுபவங்களைப் பற்றி சுவைபட கூறியிருக்கிறார்.

குழந்தை எழுத்தாளர் வை.கோவிந்தன் காங்கிரஸ்காரராக வாழ்ந்தார். அவருக்கு இடதுசாரி கொள்கையில் ஒரு சாய்பு இருந்தது. 1940களில் தமிழ்ப் பதிப்பகங்களுக்குக் கிடைத்த சோவியத் உறவால் ஏற்பட்ட தொழில் சார்ந்த செயற்கைப் பிடிப்பாக அது தெரியவில்லை. வ.விஜயபாஸ்கரன், தொ.மு.சி.ரகுநாதன், ராதாகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட இடதுசாரிகளுடன் அவர் கொண்டிருந்த நட்பின் நெருக்கம் கொள்கைப் பிடிப்பால் ஏற்பட்டதாகவே கருதலாம்.

வை.கோவிந்தன் மறைவுக்குப் பிறகும் அவர்கள் காட்டும் மதிப்புணர்வு அதை உறுதி செய்கிறது. திராவிடக் கட்சிகள் மீது வை.கோவிந்தனுக்கு ஒட்டுதல் இல்லை. ஆனாலும், சுயமரியாதைக்காரர் முன்னெடுத்த தமிழ் எழுத்து சீர்திருத்தத்தில் மொழி சார்ந்து அவர் கவனம் செலுத்தினார்.

ஒரு கதையில் க.நா.சு. 'என் பிரயாணங்களில் என் அறிவு விசாலித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனியாக ஒவ்வொரு வாசனை வீசுகிறது. தஞ்சாவூருக்கென்று பிரத்யேகமான ஒரு வாசனை, கும்பகோணத்துக்கென்று ஒரு வாசனை, மன்னார்குடிக்கென்று ஒரு வாசனை, திருவட்டீஸ்வரன்பேட்டைக்கென்று ஒரு வாசனை, திருவனந்தபுரத்துக்கென்று ஒரு வாசனை. மதுரைக்கு ஒரு மணம் உண்டு என்பதை நான் திருப்பரங்குன்றம் பேருந்தில் போய் கொண்டிருக்கும்போது உணர்ந்துகொண்டேன்' என்று கூறியிருக்கிறார். இதை 'நவீனத் தமிழ் ஆளுமைகள்' என்ற நூலில் பழ.அதியமான் எழுதியிருக்கிறார்.

தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

'சுஜாதாவையும் ராஜேஷ்குமாரையும் அடையாளம் காட்டியது நீங்கள்தான் எப்படி இனம் கண்டீர்கள்?' என்று எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்:

'ராஜேஷ்குமாரே இதை பல இடங்களில் சொல்லி இருக்கிறார். அவரது 10, 15 கதைகள் திரும்பி வந்திருக்கின்றன. ஏன் என்று கேட்டு அறிந்துகொண்டார். அதன்பிறகு நான் சொன்னபடி எழுதத் தொடங்கினார். அவரது கதைகள் பிரமாதமாக வெளிவந்தன. ஆனால், சுஜாதாவை பொருத்தவரையில் அவர் 'சுத்த சுயம்

பிரகாசம்'. அவருக்கு யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை. 'சசி காத்திருக்கிறாள்' என்ற ஒரு சிறுகதையை அனுப்பி இருந்தார். வித்தியாசமான உத்தியுடன் எழுதப்பட்டிருந்த அந்தச் சிறுகதை மிகவும் நன்றாக இருந்தது. கூடவே அற்புதமான ஒரு டுவிஸ்ட்டுடன் அந்தக் கதையை முடித்திருந்தார். அச்சிடப்பட்டவுடன்தான் எஸ்.ஏ.பி.யே வாசித்தார். அந்தச் சிறுகதைக்கு

இருபது ரூபாய் சன்மானம் என்பதை நாற்பது ரூபாயாக

எஸ்.ஏ.பி. உயர்த்தி அனுப்பிவைத்தார்' என்றார்.

எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com