
என் வயது நாற்பத்து எட்டு. வைட்டமின் பி12 சத்து உடலில் குறைவாக உள்ளது. இதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும். ஆயுர்வேத மருந்துகள் மூலமாகச் சரிசெய்து கொள்ள முடியுமா? என்ன உணவு வகைகள் சாப்பிட வேண்டும்.
-கதிரவன், கோவை.
வைட்டமின் பி12 சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடத் தவறினால், பெரும் உபாதைகளை நாளடைவில் சந்திக்க நேரிடும். பக்கவாதம், மாரடைப்பு, நரம்பு மண்டலச் செயலிழப்பு போன்றவற்றால் படுத்த படுக்கையாக உள்ள நிலைகளையும் அது ஏற்படுத்திவிடும் தன்மையுடையது. இந்த வைட்டமின் சத்துக் குறைபாட்டை முன்பே அறிந்துகொள்வதற்கான அறிகுறிகள் பலதும் இரவில் காணக் கூடும்.
உறக்கம் வந்தவுடன் இரவில் படுத்த பிறகு சில மணி நேரங்களில் தசைவலியை உடலெங்கும் உணர்த்தும். தசைப்பிடிப்பு, தசை பலவீனம் காணக் கூடிய நிலைகளில் அவற்றை உதாசீனப்படுத்தாமல் இந்த வைட்டமின் சத்து எவ்வாறு உள்ளது என்பதை உடனே அறிந்துகொள்ளுதல் நல்லது.
இரவில் வயிறு, செரிமானத்தில் ஏற்படும் கோளாறுகள் இதற்குக் காரணமாகலாம். குமட்டல், பேதி. வயிற்றில் வாயுவின் தொல்லை அல்லது மலச்சிக்கல் போன்றவையும் இதனுடைய சத்துக் குறைவால் ஏற்படும் அறிகுறிகள்.
தினமும் தலைவலி ஏற்படும். அதுவும் இரவில் தினமும் ஏற்பட்டால் இதன் பரிசோதனையை மேற்கொள்வது நலம். இரவில் உறக்கமின்மை, மறுநாள் காலை எழுந்தவுடன் உற்சாகமில்லாமல் சோர்வு ஏற்படுதல் போன்ற அறிகுறிகளும் காரணமாகலாம். இரவில் படுத்தவுடன் சிறிது நேரத்திலேயே காலிலுள்ள ரத்தக் குழாய்கள் இறுதி, தசை முறுக்கும் வலியை ஏற்படுத்தினாலும் இதன் பரிசோதனை அவசியமாகிறது.
சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு இதன் தாக்கம் அதிகம் தென்படுவதாக ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. புலால் உணவு வகைகளில் இதன் சத்து அதிகமாக உள்ளதாகவும் அறியப்படுகின்றன. வயிற்றில் அமிலக் குறைபாடு அல்லது குடலில் சீரற்ற செயல்பாடு, நீண்டகாலம் அன்டாசிட் மருந்துகள் சாப்பிடுவது, துரிதமாகத் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகம் உண்ணுதல், அடுமனை எனும் பேக்கரி உணவுகள் ஆகியவை இந்த வைட்டமின் சத்து பெறுவதற்குத் தகுதியானவை கிடையாது.
பசும்பால், தயிர், பனீர், ஆட்டுப்பால், எருமைப் பால், மஷ்ரூம்கள் போன்றவை பி12 வைட்டமின் குறைபாட்டைத் தவிர்க்க உதவும். புளிக்க வைத்த உணவு வகைகளான இட்லி, தோசை, கஞ்சி வகைகள், குடல் நுண்ணுயிர்களைத் தூண்டி இந்த வைட்டமின் உற்பத்திக்கு உதவலாம். ஸ்பைருலினா எனும் சுருள்பாசியும் தற்சமயம் பரிந்துரைக்கப்படுகிறது. இதில், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
இரவு தூக்கத்துக்கு முன் ஒரு தேக்கரண்டி திரிபலாசூரணம் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். காலை நேரத்தில் வெறும் வயிற்றில் அஸ்வகந்தா சூரணத்தை 5 கிராம் அளவில் எடுத்து சிறிது சூடான பசும்பாலில் கரைத்துக் குடிக்கவும். வாரத்துக்கு மூன்று முறை ஸ்பைருலினா மாத்திரை (இரண்டு) மாலையில் வெதுவெதுப்பான நீருடன் சாப்பிடவும். உணவில் அடிக்கடி முருங்கை இலை, நெல்லிக்காய், மஷ்ரூம்கள், பால் பொருள்களைச் சேர்க்கவும். கொய்யாவில் பி12 வைட்டமின் உள்ளது. கீரை, காளான்கள் போன்ற செறிவூட்டப்பட்ட காய்கறிகளில் பொதுவாக, பழங்களைவிட அதிக வைட்டமின் பி12 உள்ளது.
உடலெங்கும் மூலிகைத் தைலத்தைத் தடவி வெயிலில் சிறிதுநேரம் அமர்ந்தவுடன் வென்னீரில் குளித்தல், மாதம் ஒருமுறை பேதிமருந்து சாப்பிட்டு குடலைச் சுத்தப்படுத்திக் கொள்ளுதல், அஸ்வகந்தா லேஹியம் சாப்பிடுதல் போன்றவை மேற்கொள்ளலாம்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.