'பானிஹட்டி- சிடா தஹி' என்ற பெயர் வித்தியாசமாக இருக்கிறதா? மேற்கு வங்கத்துக்கு உள்பட்ட கொல்கத்தாவுக்கு அருகில் பானிஹட்டி கிராமத்தில் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழா இது. ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மகா பிரபு காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வை நினைவில் கொண்டு, அவரது பக்தர்களால் இந்தத் திருவிழா இன்றும் கொண்டாடப்படுகிறது.
பகவான் கிருஷ்ணரின் அவதாரமாக ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மகா பிரபுவும், பலராமரின் அவதாரமாக ஸ்ரீநித்தியானந்த பிரபுவும் போற்றப்படுகின்றனர். இருவரின் அருளுக்கும் ஏங்கிய பலர், அவர்களுக்குத் தொண்டு செய்ய பிரியப்பட்டனர். அவர்களில் ரகுநாத தாசரும் ஒருவர்.
ரகுநாத தாசர் பானிஹட்டிக்கு அருகேயுள்ள கிருஷ்ணாபுரா என்னும் கிராமத்தில், ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தார். இளம்வயதிலேயே தனது வாழ்க்கையில் பற்று இல்லாமல், துறவு மேற்கொள்ளும் எண்ணம் கொண்டிருந்தார். ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மகா பிரபுவிடம் பணிய வேண்டும் என்கிற ஆவலில், அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறினார் ரகுநாத தாசர். இதனால் அவரைத் தேடிப் பிடித்து, தந்தை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒருநாள் ஸ்ரீ நித்தியானந்த பிரபு பானிஹட்டிக்கு வருகை தந்திருப்பதை அறிந்து, அவரைக் காண ரகுநாத தாசர் சென்றார். கங்கை நதியின் ஓரம் ஒரு மரத்தின் கீழ் அமைதியாக அமர்ந்திருந்த நித்தியானந்தரை மறைவாக நின்று தரிசித்தார் ரகுநாத தாசர். இவரது வருகையின் நோக்கம் அறிந்த ஸ்ரீ நித்தியானந்தர், ' ரகுநாதா... நேராக என்னிடம் வா? உனக்கு நான் தண்டனை அளிக்கப் போகிறேன்' என்றார்.
ரகுநாததாசரும் பயந்தவாறு ஸ்ரீ நித்தியானந்தருக்கு முன்னால் மண்டியிட்டு அமர, அவர் தனது கமலப் பொற்பாதங்களை ரகுநாத தாசரின் சிரசில் வைத்து ஆசி வழங்கி அருளினார். அதற்குள் கிராம மக்கள் கூடி விட்டனர். ஸ்ரீ நித்தியானந்தர் ரகுநாத தாசரிடம், ' இங்கு இருக்கும் அனைவருக்கும் உணவுக்கு ஏற்பாடு செய். சிடா தஹி வரவழைத்து அனைவருக்கும் வழங்கு' என்றார். தந்தையின் அனுமதியுடன் வந்திருந்த ஜமீன்தார் ரகுநாத தாசருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
'சிடா' என்று கூறப்படும் ஒரு வகை அரிசி (அவல் எனலாம்) தயிர், பால், பழங்கள், மண் கலயங்கள் ஆகியவற்றை வேண்டிய அளவு வரவழைத்தார். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு மண்கலயத்திலும் சிடாவையும் அதில் தயிர் அல்லது பால், பழங்களைச் சேர்த்து தேவையானவர்களுக்கு தகுந்தபடி விநியோகம் செய்தார். அதுசமயம் ஸ்ரீ நித்தியானந்தர் தியானத்தின் மூலம் ஸ்ரீ சைதன்ய மகா பிரபுவை அந்தத் தலத்துக்கு வரும்படி செய்தார். இருவரும் ஹரி நாமத்தைக் கூற, எல்லோரும் கூறலானார்கள். தனது பக்தர்களுடன் இருவரும் அந்த சிடா தஹியை ஆனந்தமாக உண்டனர். பின்னர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் ரகுநாத தாசரை தன் முக்கிய ஆறு கோஸ்வாமிகளில் ஒருவராக ஏற்றுகொண்டார். இந்தச் சம்பவம் 'ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ த்ரயோதசி திதி' அன்று நடைபெற்றதாக அறியப்படுகிறது.
இதனால் ஒவ்வொரு வருடமும் மே-ஜூன் மாதத்தில் சுக்லபக்ஷ, பதிமூன்றாம் நாளன்று பானிஹட்டியில் கங்கை நதிக்கரையில் மிகப் பெரிய திருவிழா கொண்டாடப்படுகிறது. இதை 'தண்டா மகோத்ச' என்றும் 'சிடா தஹி உத்சவ்' என்றும் கூறுகிறார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த விழாவை கிராமப் பெயருடன் சேர்த்து வழங்குவது என்பது பழக்கத்தில் வந்த ஒன்று. இன்றும் அன்று நடைபெற்றதைப் போல் மண்பானையில் சிடாவுடன் தயிர் அல்லது பால் சேர்த்து எல்லோருக்கும் கெளடிய வைஷ்ணவ சம்பிரதாய பக்தர்களால் வழங்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.