பனித் துருவல்கள் படிந்த அடர்ந்த பைன் வனப் பகுதிகள், சீறும் நீரூற்றுகள், கோடையின் பசுமையான பச்சை, இலையுதிர்காலத்தின் தங்கநிற இலைகள் கொண்ட மரங்கள், வெள்ளைப் பனிமலைகள், பள்ளத்தாக்குகள் வழியாகச் சலசலத்துச் செல்லும் ஆறுகளை செனாப் பாலத்தில் முதுகைத் தேய்க்கும் மேகங்களை விலக்கியவாறே .
செல்லும் அதிவேக காஷ்மீர் ரயில் பயணம் பயணிகளுக்கு கண்கொள்ளா காட்சியாக விருந்தளிக்கும். உலக அளவில் பிரசித்தி பெற்ற சுவிட்சர்லாந்தின் புகழ் பெற்ற ரயில் பயணத்துக்கு இணையான பயணமாக 'ஸ்ரீநகர் - கத்ரா ரயில் பயணம்' அமையும்.
இயற்கை அழகுக்காகக் கொண்டாடப்படும் ஜம்மு- காஷ்மீரின் கண்டறியாத அழகிய நிலப்பரப்புகளை கண்டு மகிழ 'செனாப் பாலம்' எனும் புதிய சாளரம் திறக்கப்பட்டுள்ளது. செனாப் நதியின் மீது கட்டப்பட்ட உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 6-இல் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் ரயில் மூலம் இணைக்கும் நோக்கில் தீட்டப்பட்ட 42 ஆண்டுகள் பழமையான திட்டத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில், ஸ்ரீநகர்- கத்ரா இடையே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இரண்டு வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் பயணிக்கச் செய்தார்.
மைனஸ் டிகிரி குளிரைத் தாங்கும் ரயில் பெட்டிகள், குளிரூட்டப்படாத கழிவறைகள், அதன் தண்ணீர் குழாய்களுக்கு எந்தப் பாதிப்பும் வராதபடி, பிரத்யேகமாக பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை உருவாக்கியுள்ளது. பொறியியல் சாதனையாக மாறியிருக்கும் செனாப் பாலம் காஷ்மீரின் வளர்ச்சி, வர்த்தகம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் முக்கிய இடத்தை வகிக்க உள்ளது.
செனாப் பாலத்தின் சிறப்பம்சங்கள்:
ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் மீது இரண்டு மலைகளை இணைக்கும் பாதையாக, செனாப் ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. ஜம்மு-
பாரமுல்லா பாதையில் கத்ரா, சங்கல்டன் இடையே அமைந்துள்ள இந்தப் பாலத்துக்கான செலவு சுமார் ரூ.1,486 கோடி.
உலகின் மிக உயரமான இடத்தில் நிறுவப்பட்ட வளைவுப் பாலமாகும், ஆற்றுப் படுகையிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் நிற்கிறது. பாரிஸ் ஈபிள் கோபுரத்தைவிட செனாப் பாலம் 35 மீட்டர் உயரம் அதிகம்.
தரையிலிருந்து 331 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் 725 மீட்டர் நீளம் கொண்டு, பருமனான இரும்பு கயிறுகள் தாங்கிப் பிடிக்கும் அஞ்சி காட் பாலமும், 13 கி.மீ. நீளமுள்ள விரிவான டி-50 சுரங்கப் பாதையும், இந்தத் திட்டத்தின் மகுடங்கள்.
தரை வாகனங்கள் போக, இரும்புக் கயிறுகள் தாங்கிப் பிடிக்கும் பாலங்கள் இந்தியாவில் உண்டு. ஆனால், ரயில்கள் செல்ல இரும்புக் கயிறுகள் தாங்கிப் பிடிக்கும் பாலம் இதுவரை இந்தியாவில் கட்டப்படவில்லை. இந்தியாவின் முதல் 'கேபிள்-ஸ்டே' ரயில் பாலம் அஞ்சி காட் ஆகும்.
காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் இந்தப் பாலம், ரூ.35 ஆயிரம் கோடி செலவில் உருவாகி வரும் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.
செனாப் ரயில் பாலம், ஆற்றுப் பள்ளத்தாக்கின் குறுக்கே 1,315 மீட்டர் நீளமுள்ள எஃகு, கான்கிரீட் கலந்து கட்டப்பட்ட பொறியியல் அற்புதமாகும். இது 530 மீட்டர் நீளமுள்ள அணுகு பாலத்தையும் 785 மீட்டர் நீளமுள்ள வளைவுப் பாலத்தையும் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தை இந்தியரயில்வேயின் துணை நிறுவனமான கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் மேற்பார்வையிட்டது. ஆப்கான்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், தென் கொரியாவை தளமாகக் கொண்ட அல்ட்ரா கன்ஸ்ட்ரக்ஷன், என்ஜினீயரிங் கம்பெனி, வி. எஸ். எல். இந்தியா போன்ற நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் செனாப் பாலம் உருவாகியுள்ளது.
பாலத்தின் அடித்தளப் பாதுகாப்புக்கான வடிவமைப்பை பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் தயாரித்தது. ஐ.ஐ.டி. தில்லி சாய்வு நிலைத்தன்மை பகுப்பாய்வை நடத்த, ஐ.ஐ.டி. தில்லி, ஐஐடி ரூர்க்கி ஆகிய இரண்டும் நில அதிர்வு பகுப்பாய்வைக் கையாண்டன. பாலத்தை வெடிப்புத் தடுப்புடன் உருவாக்க பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு உதவியது.
பாலத்துக்கான எஃகு இந்திய எஃகு ஆணையத்தால் வழங்கப்பட்டது, அதேநேரத்தில் சுவிஸ் நிறுவனமான 'மகேபா' சிறப்பு கோள வடிவ தாங்கு உருளைகளை வழங்கியது. இந்தத் திட்டத்தில் 28,660 மெட்ரிக் டன் எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது. 26 கி. மீ. தரைவழி சாலை கட்டுமானமும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.
செனாப் பாலத்தின் ஆயுள் காலம் 120 ஆண்டுகள். மணிக்கு 100 கி.மீ. வரை ரயிலை இயக்கலாம். செனாப் பாலம் 8 ரிக்டர் அளவு வரை ஏற்படும் நிலநடுக்கங்களையும், 40 டன் 'டி.என்.டி.' க்கு சமமான அதிகத் தீவிரம் கொண்ட வெடிப்புகளையும் தாங்கும் திறன் கொண்டது.
பாலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எஃகு மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வரை தாக்குப் பிடிக்கும். மணிக்கு 266 கி.மீ. வரை காற்றின் வேகத்தையும் எதிர்கொண்டு சமாளிக்கும்.
அதிக செலவில் துணிச்சலான இந்த ரயில்வே திட்டத்தின் பின்னணியில் 17 ஆண்டுகளாகச் செயல்பட்டவர்களில் ஒருவர் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் மாதவி லதா. ஆந்திரத்தைச் சேர்ந்த இவர், தனது முனைவர் பட்டத்தை சென்னை ஐ.ஐ.டி.யில் பெற்றவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.