கண்டது
(தருமபுரி பேருந்து நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த கார் ஒன்றில் எழுதியிருந்தது)
'கை தவறினால் பொருள் உடையும். வாய் தவறினால் மனம் உடையும்.'
இரா.வசந்தராஜன், கிருஷ்ணகிரி.
(திருச்சி மாவட்டத்தில் உள்ள மனவளக் கலைமன்றம் ஒன்றில் எழுதியிருந்தது)
'நீயா, நானா என்றால் எந்தக் குடும்பமும் தேறாது.
நீயும் நானும் என்றால் எந்தக் குடும்பமும் தோற்காது.'
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
(திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தின் எதிரேயுள்ள ஓடையின் பெயர்)
'பிள்ளையைப் போட்டு பலாப்பழம் எடுத்த ஓடை.'
பா.சிதம்பரநாதன், கருவேலன்குளம்.
கேட்டது
(திருச்சியில் உள்ள இறைச்சிக்கடை ஒன்றில் கடை ஊழியரும், வாடிக்கையாளரும்..)
'நேற்று கொடுத்த கறி வேகவே இல்லேப்பா..?'
'சீரியல் பார்த்துட்டே சமைச்சி இருப்பாங்க?'
'அட வூட்ல டி.வி.யே இல்லைங்க..?'
'அப்போ பக்கத்து வீட்டில் சீரியல் பார்க்க போயிருப்பாங்க?'
அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
(தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் இரு நண்பர்கள் பேசியது)
'உங்க வீட்டில் ஆட்சி, அதிகாரம் யார் கையில் சார்..?'
'அதிகாரம் ஆச்சி கையில்...?'
வி.ரேவதி, தஞ்சாவூர்.
(சென்னை திருவொற்றியூரில் உள்ள கடை ஒன்றில் உரிமையாளரும், ஊழியரும்...)
'டேய். சாத்துக்குடி, ஆரஞ்சு வாங்கி வாடா..?'
'ஆறா,.. ஐந்தா கரெக்டா சொல்லுங்க.. சார்..'
-தீ.அசோகன், சென்னை19.
யோசிக்கிறாங்கப்பா!
மீள முடியாத துயரம் ஒன்றுமில்லை. எல்லா துயரங்களையும் மீண்டு வந்ததின் மிச்சம்தான் வாழ்க்கை.
ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.
மைக்ரோ கதை
மருத்துவமனை ஒன்றில் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை முடிந்துவிட்டு வந்த டாக்டர்கள் கோவிந்தசாமியிடம், 'எவ்வளவோ முயற்சி செய்துவிட்டோம். உங்களது மனைவி எங்களால் காப்பாற்ற முடியவில்லை' என்றனர்.
இதைக் கேட்டு கோவிந்தசாமி குலுங்கி அழக, உறவினர்கள் தேற்றினர். அப்போது அருகேயிருந்த ஏழு வயது மகள் ப்ரியாவோ, 'நான் பசியோடு இருக்கிறேன் என்று கூறுங்கள். என் அம்மா எழுந்து விடுவாள்' என்றாள்.
த.நாகராஜன், சிவகாசி.
எஸ்.எம்.எஸ்.
ஆசை உங்களை அடக்கும் முன்பே நீங்கள் ஆசைகளை அடக்கி விடுவது அவசியம்.
லட்சுமி சங்கரன், அம்பை.
அப்படீங்களா!
வாட்ஸ் ஆஃப், கூகுள் சர்ச் ஆகியன விளம்பரங்களை காட்சிப்படுத்தாமல் இதுவரை இயங்கி வந்தன. இவற்றில் வாட்ஸ் ஆஃப்பில் விளம்பரங்களைக் காட்சிப்படுத்த மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. வாட்ஸ்ஆஃப் பிசினஸில் முதலில் இந்தச் சேவை தொடங்கப்பட உள்ளது.
வாட்ஸ் ஆஃப் பிசினஸில் பதிவிடப்படும் விளம்பரங்களைப் பயன்படாட்டாளர்கள் பார்த்து அதுகுறித்த தகவல்களைத் தேடவும், சேனல் சாட்டில் ஆலோசனை செய்யவும் உதவும்.
வாட்ஸ் ஆஃப் சேனல் அப்டேட்டுகளில் விளம்பரங்கள் அந்தந்த நாட்டின் மொழிகளில் இடம் பெறும். சேனல்களைப் பெற சப்கிரிப்ஷன், புரோமோடட் சேனஸ் சேவையும்
வர்த்தக ரீதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சேனல்களில் வரும் லேடஸ்ட் அப்டேட்டுகளை மாதக் கட்டணம் செலுத்தி தெரிந்து கொள்ளலாலம். வாட்ஸ் ஆஃப் சேனல்களை முன்னிலைப்படுத்தவும் கட்டணச்சேவை அறிமுகப்
படுத்தப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்கள் தகவல் பரிமாற்றத்துக்காக பயன்படுத்தப்படும் சாதாரண வாட்ஸ் ஆஃபில் வெளியாகாது.
இதேபோல், வாட்ஸ் ஆஃப்பில் இருந்தபடியே ஆவணங்களை ஸ்கேன் செய்யும் சேவையை ஆன்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கும் நீட்டிக்க வாட்ஸ் ஆஃப் துரிதப்படுத்தி வருகிறது. இந்தச் சேவை ஐ.ஓ.எஸ். பயன்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.