ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க...
வெயிலின் சூடு தாங்காமல் நான் இளநீர், முலாம்பழம், வெள்ளரிப் பிஞ்சுகள் என்றெல்லாம் வாங்கிச் சாப்பிட்டாலும், வயிறு எரிச்சல், தலைசுற்றல், நீர்க்கடுப்பு ஏற்படுகின்றன.


பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
வெயிலின் சூடு தாங்காமல் நான் இளநீர், முலாம்பழம், வெள்ளரிப் பிஞ்சுகள் என்றெல்லாம் வாங்கிச் சாப்பிட்டாலும், வயிறு எரிச்சல், தலைசுற்றல், நீர்க்கடுப்பு ஏற்படுகின்றன. இதற்கு என்ன காரணம்? இவற்றை எப்படி சாப்பிட்டால், என் உடல் சூடு தணியும்.
-பிரகதீஷ், காஞ்சிபுரம்.
அமுதத்துக்கு ஒப்பான இயற்கை நமக்கு அன்பளிப்பாகத் தந்திருக்கக் கூடிய இளநீர், முலாம்பழம், வெள்ளரிப்பிஞ்சு, பனம் நுங்கு போன்றவை கூட வேளையறிந்து உட்கொண்டால்தான் அமுதமாகச் செயல்படும். வேளை தவறி உட்கொண்டால், நீங்கள் குறிப்பிடுவதுபோல, உபாதைகளைத் தோற்றுவிக்கக் கூடியவை.
இவை அனைத்தும் காலை வேளையிலும், நல்ல பசி வேளையிலும் சாப்பிட உகந்தவை அல்ல. இரைப்பையில் நல்ல பசி வேளையில், பித்தச் சுரப்பினால் வயிறு சூடாக இருக்கும் நிலையில், நல்ல குளிர்ந்தக் குணம் கொண்ட இவைகளின் வரவால், பித்தமும், சீதளமும் சேர்ந்து பசியின்மை, வயிற்று வேக்காளம், புளிப்பு, பேதி, தலைசுற்றல், வயிற்றுவலி போன்ற உபாதைகளை ஏற்படுத்துகின்றன.
அதனால் பகல் உணவுக்குப் பின் இரண்டு- மூன்று மணி நேரம் கழித்துச் சாப்பிட உங்களுடைய உடல்சூடானது தணிவதுடன் நாவரட்சியும், தண்ணீர் வேட்கையும் நன்கு குறைந்துவிடும்.
பழுக்கக் காய்ச்சிய மண்சட்டியில் தெளித்தத் தண்ணீர் சட்டி உடையக் காரணமாவது போல் வயிற்றிலுள்ள சூடானது மிகவும் குளிர்ந்த உணவுப் பொருளைச் சந்திக்க நேரும்போது, விபரீதப் பலனாக வயிற்றில் வேக்காளத்தை உருவாக்குகிறது.
பசி மந்தம், நிறைய தண்ணீர் பருகிய பின்னர் கடும் பசி, வியர்வைப் பெருக்கு, மார்பில் சளி போன்ற நிலைகளில் இவற்றைச் சாப்பிடக் கூடாது. வியர்வை அடங்காமல் பெருகும் நிலையில், இளநீர், குளிர்ந்த நீர் ஆகியவற்றைப் பருகினால் உடனே மார்பில் சளி கட்டும். மென்னிப் பிடிப்பு, இடுப்புப் பிடிப்பு, நீர்ச்சுருக்கு ஏற்படும்.
அதனால் வெயிலில் அலைந்து வீடு திரும்பியவர், வியர்வை மற்றும் உடற்சூடு தணியும் வரை காத்திருந்து அதன்பிறகு இவைகளைச் சாப்பிட நல்ல பலன்களைப் பெறலாம். ஆனாலும், இவைகளை அளவு மீறாமல் சாப்பிடுவதே நல்லது, வெள்ளரிப் பிஞ்சுடன் மிளகுத் தூளும் உப்பும் சேர்த்துச் சாப்பிடுவது, பிஞ்சின் சீதளத்தை மாற்ற உதவுகிறது.
வெள்ளரிப் பிஞ்சை தயிர் பச்சடியாக்கிச் சாப்பிடுவதே மிகவும் நல்லது. முலாம்பழத்தை நல்ல பழமாக உள்ளபோதுதான் சாப்பிட வேண்டும். சிலர் இளநீரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, நன்கு குளிர்ந்த பிறகு எடுத்து அருந்துகின்றனர், இது தவறாகும்.
இளநீராக எடுத்தவுடன் அதில் ஐஸ் மற்றும் பழவகைகள் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. அதுபோல, முற்றிய பனம் நுங்கை சாப்பிட்டால் ஜீரணமாகாது. இளம் பன நுங்குதான் நல்லது. காயில் இருந்து வெட்டி எடுத்த நுங்கை வெகுநேரம் கழித்துச் சாப்பிடுவதும் நல்லதல்ல. குடலில் தங்கி வலியை உண்டாக்கும். தலைசுற்றலையும் ஏற்படுத்தும்.
மாலையில் கோடைக்குளியல் நல்லது. கோடையில் ஏற்படும் எரிச்சல், தினவு, சொரி, சினப்புகள் மறைய இளம் பன நுங்கை மேலுள்ள அதன் தோலை நீக்கி, உடலின் மேல் தேய்க்க மிகவும் நல்லது.
இந்த வருடம் (2025) கோடை கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், உங்களுடைய கேள்வியானது காலத்துக்கு ஏற்ற கேள்வியாக அமைந்துள்ளது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...