பேல்பூரி

எதையும் இழக்காமல் இந்த உலகத்தில் எதுவுமே வருவதில்லை.
பேல்பூரி
Published on
Updated on
2 min read

கண்டது

(ராசிபுரத்தில் ஓடிய ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்தது)

'எதையும் இழக்காமல் இந்த உலகத்தில் எதுவுமே வருவதில்லை.''

-ரமணன் ஏகாம்பரம், ராசிபுரம்.

(செங்கல்பட்டில் ஓடிய சில வாகனங்களில் எழுதியிருந்தது)

'மிரட்டல்கள் இல்லாமல் நேர்மை ஒருபோதும் சாத்தியமில்லை.''

'வாழ்க்கை தொடர்ந்து கற்றுகொள்கின்ற பயணம்.''

'புத்தகங்களைப் படிப்பதுடன் மனிதர்களை நேசியுங்கள்.''

-ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு.

(சென்னையில் ஓடிய ஆட்டோ ஒன்றில்...)

எதிரியை பேசவிட்டு கவனிக்கணும்.

துரோகியை பேசவிடாமல் கவனிக்கணும்.''

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.

கேட்டது

(கோவை பேருந்து நிலையத்தில் இரு பெண்கள்..)

'எனக்கு வீட்டிலேயும் ஆபிஸிலும் ஒரே திட்டுதான்...?''

'இன்னமும் வேலை பழகலையாடி...?''

'என் மாமியார்தான் ஆபிஸிலும் செக்ஷன் ஆபிசர்...''

-ரத்னம் மரகதம், கோவை.

(பல்லாவரம் பேருந்து நிலையத்தில் தம்பதி...)

'பிறந்த வீட்டுக்குப் போயிடுவேன்னு இனி நீ என்னை மிரட்ட முடியாது?''

'அதான் இப்போ உங்க அப்பா வித்துட்டாருல்ல..''

-பர்வதவர்த்தினி, பம்மல்.

(திருச்சி ரயில் நிலையத்தில் இரு பெண்கள் பேசியது)

'உன் மாமியாருக்கு கை, கால்களை நீ பிடிச்சி விடுவியாமே...?''

'ஆமாம்.. மறுநாள் சண்டை போடுறதுக்கு அவங்களுக்கு தெம்பு வேணும்ல...?''

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

யோசிக்கிறாங்கப்பா!

முடியாது என்று சிந்திப்பதைவிட எப்படி முடியாது என்று சிந்தனை செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.

-ஸ்ரீவித்யா, பல்லாவரம்.

மைக்ரோ கதை

திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரத்துக்குச் செல்ல சுரேஷ் தனது மனைவி, இரு குழந்தைகளுடன் பஸ்ஸூக்கு காத்திருந்தார். பஸ்களில் கூட்ட நெரிசல் இருந்ததால், அங்கே வந்த ஆட்டோக்காரரிடம், 'சமயபுரம் செல்ல எவ்வளவு கேட்கிறீர்கள்'' என்றார்.

அதற்கு ஆட்டோக்காரரோ, 'உங்களுக்கு முந்நூறு ரூபாய். உங்க மனைவிக்கு முந்நூறு ரூபாய். உங்க குழந்தைகளுக்கு காசு வேண்டாம். இலவசம்தான்'' என்றார்.

இதற்கு சுரேஷோ, 'எங்க ரெண்டு பசங்களைக் கொண்டு போய் கோயில் அருகே விட்டுடுங்க.. நாங்க ரெண்டு பேரும் பஸ்ஸில் வந்துடறோம்'' என்று சொன்னதும், ஆட்டோக்காரர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துவிட்டார்.

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

எஸ்.எம்.எஸ்.

யோசித்துகொண்டே இருப்பவன் வாய்ப்பை இழக்கிறான்.

பேசிக் கொண்டே இருப்பவன் வாழ்வையே இழக்கிறான்.

-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

அப்படீங்களா!

தகவல் பரிமாற்றத்தில் உலகின் முன்னணி செயலியான வாட்ஸ் ஆஃப் தொடர்ந்து புதிய சேவைகளை அறிவித்து வருகிறது. நாம் பிறருக்கு பகிரும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா? என்பதுதான் பயன்பாட்டாளர்களின் கேள்வி.

இதற்கு வாட்ஸ் ஆஃப் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது 'அட்வான்ஸ்டு சாட் பிரைவசி' என்ற புதிய சேவையைத் தொடங்கிஉள்ளது. இந்தச் சேவையை தேர்வு செய்துவிட்டால், நீங்கள் அனுப்பும் சாட், விடியோ, புகைப்பட தகவல்களை பிறர் பதிவிறக்கம் செய்ய இயலாது.

பிறருக்கு ஷேர் செய்யவும் இயலாது. இதன் மூலம் யாருக்கு நாம் தகவல்களை அனுப்புகிறோமோ?, அவர் மட்டுமே அந்தத் தகவலைப் பயன்படுத்த முடியும்.

உதாரணத்துக்கு உங்கள் பாஸ்போர்ட் புகைப்படத்தை ஆவண சரிபார்ப்புக்காக அனுப்புவதாக இருந்தால், இந்த அட்வான்ஸ் சாட் பிரைவசி சேவையைத் தேர்வு செய்துவிட்டு அனுப்பினால், அந்தத் தகவலை காணும்நபர் அதை பதிவிறக்கமோ, பகிரவோ முடியாது.

வாட்ஸ் ஆஃப் குழுவில் உள்ள விவரம் தெரியாத நபர்கள் நமது தகவல்களைப் பகிர முடியாத அளவுக்கு இந்தப் புதிய சேவை உதவுகிறது. இதேபோல் ஒரு முறை கண்ட உடன் அழியும் டிஸ்அப்பியரிங் சேவையையும் வாட்ஸ்ஆப் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

'அட்வான்ஸ் சாட் பிரைவசியை பயன்படுத்த வேண்டும்' என்றால் முதலில் வாட்ஸ் ஆஃப்பை அப்டேட் செய்துவிட்டு பின்னர் சாட் பெயரை தேர்வு செய்து அதில் அட்வான்ட் சாட் பிரைவசி என்பதை தேர்வு செய்துவிட்டால் போதும்.

-அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com