

எனக்கு எழுபத்து ஐந்து வயதாகிறது. சிறுநீரகக் கல் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் சாப்பிட்ட மாத்திரைகளால் சாப்பிட முடியாத நிலை, பசியின்மை ஏற்பட்டது. பரிசோதனையில் குடல் புண் ஏற்பட்டுள்ளதை அறிந்து மூன்று மாதங்கள் மருந்து சாப்பிட்டதில், உணவு சாப்பிட முடிகிறது. ஆனால், பசி மந்தமாக உள்ளது. நான்கு முறை ஒருநாளில் மலம் கழிகிறது. இதற்கு ஆயுர்வேத மருந்து உள்ளதா?
-பா.ராசலட்சுமி, திருநெல்வேலி.
கல்லீரல், குடல் பாதிப்புகளை நீங்கள் சந்திக்க நேர்ந்துள்ளதை உணர முடிகிறது. பித்தநீரில் பொதிந்துள்ள சிறிது நெய்ப்பு, ஊடுருவும் தன்மை, சூடு, லேசு, நீர்த்த நிலை போன்ற குணங்கள் தாக்கம் அடைந்து, தம் செயல்திறனில் மந்தமாகிவிட்டது.
செரிமான தாமதத்தை ஏற்படுத்தும் மாவுப் பண்டங்கள், கிழங்குகள், புலால் வகை உணவுகளை நீங்கள் நிறுத்திவிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். இஞ்சி (தோல் நீக்கியது) 400 கிராம், சீரகம் 200 கிராம், கொத்தமல்லி விதை 200 கிராம், இந்துப்பு 100 கிராம், எலுமிச்சைப் பழச் சாறு 900 மில்லி ஆகியவற்றை எடுத்துகொள்ள வேண்டும்.
இந்துப்பை எலுமிச்சைப் பழச்சாற்றில் கரைத்து, அதில் சிறிய துண்டுகளாக்கிய இஞ்சியையும், சீரகத்தையும், கொத்தமல்லி விதையையும் போட்டுப் பிசறிவிடவும். ஓரிரு நாள்கள் கிளறிவிட பிறகு வெயிலில் நன்கு காயவிடவும். காய்ந்ததை இடித்து மென்மையான தூளாக்கி, கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தவும். ஒரு நாளில் 2-3 வேளை, வேளைக்கு அரை- 2 தேக்கரண்டி அளவு வாயிலிட்டு சுவைத்துச் சாப்பிடவும். அதன்மேல் சிறிது வெந்நீர் அல்லது மோர் சாப்பிடவும்.
செரிமானத்துக்கு உதவக் கூடிய புளிப்புத் திரவங்கள் இரைப்பையில் நன்றாகச் சுரக்கத் தொடங்கும். கல்லீரல் செயல்பாடு சுறுசுறுப்பாகும். உணவில் விருப்பமின்மை, பசியின்மை, உணவு செரிமானமாகாமல் பெருமலமாக வெளிப்படுதல், அஜீரணத்தாலும் பித்தத்தாலும் ஏற்படும் களைப்பு, தலைசுற்றுதல், மயக்கம், இனம் தெரியாத கலக்கம் முதலியவைகளுக்கும் நல்லது.
பொதுவாக, எல்லா அஜீரண நோய்களிலும் பித்தத்தால் ஏற்படும் பலவகை நோய்களிலும் கையாளக் கூடியது. எண்ணெய், நெய் அதிகம் சார்ந்த உணவு சாப்பிட்டவுடன் அஜீரண வாந்தி, தலைசுற்றுதலில் மிகவும் உதவும்.
நீங்கள் கேழ்வரகு கஞ்சி குடிப்பது நல்லது. கேழ்வரகை வாங்கிச் சுத்தம் செய்து, வெயிலில் சில மணி நேரம் காயவைக்கவும், மறுநாள் காலை உதய நேரத்தில் கேழ்வரகு மேல் 3-4 விரல் அளவு தண்ணீர்விட்டு, காலையில் 11 மணி வரை ஊறவிடவும். அதன்பின்னர், தண்ணீரை வடித்துவிட்டு, மறுபடியும் தண்ணீர்விட்டு, இரவு 8 மணி வரை ஊறவைக்கவும்.
தண்ணீரை வடிகட்டி, கேழ்வகை வெள்ளைத் துணியில் போட்டு, துணியின் தலைப்புகளைத் தளர்வாகச் சேர்த்து முடித்து, மூட்டையாக முடிந்து, மரப்பலகையின் மீது வைத்து, பாத்திரத்தால் மூடி வைக்கவும். மறுநாள் காலை 8 மணிக்கு எடுத்துப் பார்க்கவும். முற்றிலும் சிறுமுளை கண்டிருக்கும். அதை எடுத்து நிழலில் உலரவிடவும். மறுநாள் நல்ல வெயிலில் காயவைத்து, உலக்கை குத்திப் புடைத்து, முனைமூக்கு உமிகளை நீக்கி, பொன்னிறமாக வறுத்து, அரைத்துகொள்ளவும். அரைத்த மாவை சல்லடையில் சளித்து, சுத்தமாக மூடிவைக்கவும்.
இது எளிதில் ஜீரணமாக்கக் கூடியது. பசியை வலுப்படுத்தக் கூடியது. உடலைப் புஷ்டிப்படுத்தும். ருசியில் இனிப்பான, சிறந்த உணவு. வயது, குடல் பலம், ஜீரண சக்தி முதலியவற்றை அனுசரித்துப் பக்குவம் செய்து, சாப்பிட வேண்டும். கொஞ்சம் சூடான வெந்நீரில் முதலில் கரைத்து மேலும் தேவையான அளவு வெந்நீர் கலந்து கலக்கி, அடுப்பில் சில நிமிடங்கள் கொதி நன்றாக வரும்படி காய்ச்சி இறக்கி, பிறகு அப்படியே அல்லது மோர் சேர்த்து சாப்பிடுவதுதான் நல்லது.
கேழ்வரகு மாவுடன் கொஞ்சம் கோதுமை மாவு அல்லது அரிசி மாவு கலந்து, கொஞ்சம் புளித்த மோரில் கரைத்து தோசை வார்த்துச் சாப்பிடலாம். வெல்லம் சேர்த்தும் தோசை செய்யலாம். அரிசி மாவு சேர்த்து, மோர்க்களியாகக் கிண்டவும்.
வில்வாதி லேஹியம், அஷ்டசூர்ணம், காலசாகாதி கஷாயம், முஸ்தாரிஷ்டம், அக்னிகுமாரரஸம் மாத்திரை போன்றவை மருத்துவரின் ஆலோசனையின்படி சாப்பிடலாம்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.