இந்தியாவின் செஸ் கிராமம்...

சூதாட்டத்தாலும், குடிப் பழக்கத்தாலும் மூழ்கியிருந்த மரோட்டிச்சால் கிராம மக்கள் செஸ் ஆட்டத்தால் மாறிவிட்டனர்.
இந்தியாவின் செஸ் கிராமம்...
Updated on
2 min read

சூதாட்டத்தாலும், குடிப் பழக்கத்தாலும் மூழ்கியிருந்த மரோட்டிச்சால் கிராம மக்கள் செஸ் ஆட்டத்தால் மாறிவிட்டனர். தற்போது அந்தக் கிராமம் 'இந்தியாவின் செஸ் கிராமம்' எனப்படுகிறது. இந்த நேர்மறைத் தாக்கத்தை முன்வைத்து 'ஆகஸ்ட் கிளப்' என்ற மலையாளத் திரைப்படமும், 'தி பான் ஆஃப் மரோட்டிச்சால்' என்ற ஆவணப்படமும் ஹிந்தியிலும் தயாராகியுள்ளன.

கேரள மாநிலத்துக்கு உள்பட்ட திருச்சூரை அடுத்துள்ள இந்தக் கிராமத்தில் முப்பத்து ஏழு ஆண்டுகளாக தேநீர்க் கடை நடத்திவரும் உன்னிகிருஷ்ணன் கூறியது:

'நான் இளமையில் நக்சல்பாரி இயக்கத்தில் இருந்தேன். குடும்பத்தார் என்னை நேராக்க, பெங்களூரு அனுப்ப, அங்கு நான் பல வேலைகளைப் பார்த்து பிழைப்பை நடத்தினேன். அத்துடன் செஸ் ஆட்டத்தையும் கற்றேன். அது என்னுள் மாற்றத்தைக் கொண்டு வந்தது.

எனது முப்பதாவது வயதில் மரோட்டிச்சால் திரும்பினேன். மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள கிராமம் அது. பெரும்பாலான ஆண்கள் பகலிலும் சூது விளையாடுவார்கள். கூடவே சாராயமும் பெருகி வழிந்தது. மரங்கள் நிறைந்த மலைப்பகுதி என்பதால் சாராயம் காய்ச்சுவதற்கு பாதுகாப்பான சூழல்.

வீடுகளில் பெண்களை குடிகார, சூதாட்ட கணவர்கள் பெண்களைத் துன்புறுத்தி வந்தார்கள். வறுமை அழைக்காமலேயே வீடுகளில் குடி வந்தது. இதை பார்த்த நான் நொந்தேன்.

என்னைப் போலவே சிந்திக்கும் இளைஞர்களை இணைத்துகொண்டு, சாராயம் காய்ச்சும் இடங்களை அடித்து நொறுக்கினோம். ஆனாலும் சாராய விநியோகம் நிற்கவில்லை. சூதாட்டமும் தொடர்ந்தது.

முடிவாக, 'செஸ் ஆட்டத்தை கிராமத்தினருக்குக் கொடுத்தால் என்ன' என்று எண்ணம் தோன்றியது. வாடிக்கையாளர்களுக்கு செஸ் பயிற்றுவிக்க, எனது தேநீர் கடை செஸ் பயிற்சி நிலையமாக மாறியது. கிராம மக்களின் கவனம் செஸ் மீது திரும்பியது. மர நிழலில் , வீட்டுத் திண்ணையில், கடை ஓரங்களில், பேருந்து நிறுத்தங்களில், ஏன் இரவில் தெரு விளக்குகளின் அடியில் அமர்ந்துகூட கிராம மக்கள் விளையாட ஆரம்பித்தனர்.

சில ஆண்டுகளில், ஆட்ட சுவாரசியத்தில் சூதாட்டம் ஆடுவதும், சாராயம் குடிப்பதும் மறந்து போனது. ஒரு சிறிய நகர்வு முழு சமூகத்தையும் மாற்றியது. தவறான பழக்கங்களுக்கு செஸ் ஆட்டம் 'செக்' வைத்தது பெரிய அதிசயம்தான்.

கிராமத்தில் உள்ள சுமார் 6 ஆயிரம் பேரில் 80 சதவீதம் பேருக்கு செஸ் ஆடத்தெரியும். நூறு சதவீத நிலையை அடைவதற்கு இங்கு செயல்படும் பள்ளிகளில் வகுப்புகள் முடிந்தவுடன் எல்லா மாணவ, மாணவிகளுக்கும் செஸ் ஆடச் சொல்லித் தருகிறோம். அதற்காக முறையான அனுமதி பெற்றுள்ளோம்.

கிராமத்து இளைஞர் ஜெயராஜ் கண்ணை துணி கட்டி மறைத்து செஸ் ஆடுவார். அகில இந்திய அளவில் செஸ் ஆடும் திறமையுள்ள சிலர் இந்த கிராமத்தில் உள்ளனர்.

ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சதுரங்கம் விளையாடியதற்காக இந்த கிராமம் ஆசிய சாதனை அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. ஒன்றரை கி. மீ. நீள மேஜை, நாற்காலிகள் போட்டு செஸ் ஆடியுள்ளோம்.

பசிபிக் சமுத்திரத்தில் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு அருகில் இருக்கும் தீவு நாடான 'சாலமோன் தீவுகள்' செஸ் ஆட்டத்தைப் பிரபலப்படுத்தியதற்காக எனது படத்தையும், சக தோழர்கள் செஸ் ஆடும் படங்களைப் போட்டு தபால் தலைகளை வெளியிட்டு கௌரவித்தனர்.

'உலகிலேயே ஒரே சமயத்தில் அதிகம் பேர் கலந்துகொள்ளும் மெகா செஸ் விளையாட்டை கின்னஸ் சாதனைக்காக நடத்த உள்ளோம்.

'சதுரங்கம் மூளைக்கு வேலை தரும் விளையாட்டு. செஸ் ஆட்டத்தில் சிறிய சிப்பாய் கூட சக்தி வாய்ந்த ராணியாக ராஜாவாக மாற முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவனமாகச் சிந்திக்கவும், பொறுமையாக இருக்கவும், முன்கூட்டியே திட்டமிடவும் செஸ் பயிற்றுவிக்கிறது.

உடல்நலத்துக்கு மியூசிக் தெரப்பி எப்படி பயன்படுகிறதோ அப்படி மன நலத்துக்கு செஸ் தெரபி வேலை செய்கிறது' என்று மேலை நாடுகளில்ன் ஆய்வு உறுதிப்படுத்துகிறது' என்கிறார் உன்னிகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com