ஆங்கிலேயர்களை எதிர்த்து நடைபெற்ற காளையார்கோவில் போரில், சிவகங்கையின் இரண்டாவது மன்னர் முத்துவடுகநாதத் தேவர் களப்பலியானதும், கணவனை இழந்தும் அவருடைய லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் ராணி வேலு நாச்சியார் வாளேந்திப் போராடி சிவகங்கை சீமையை மீட்டதும், மாவீரர்கள் மருது சகோதரர்களால் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்ததும் சுதந்திர இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வுகளாகும். இத்தகைய பெருமைவாய்ந்த சிவகங்கைச் சீமையின் புகழுக்குத் திலகமிட்டது போன்று அமைந்துள்ளது மன்னர்கள் நிறுவிய பள்ளிகள். 169 ஆண்டுகளாக ஏழைகளின் இல்லக் குழந்தைகள் கல்விப் பயில மன்னர்களது கல்வித் தொண்டும், ஆன்மிக, விளையாட்டு, கலைப் பணிகளில் அவர்களது பங்களிப்பும் வரலாற்றில் மறக்க முடியாதவையாகும்.
இதுகுறித்து மன்னர் கல்வி நிறுவனங்களின் செயலர் வி.எஸ். குமரகுரு கூறியதாவது:
''1856-ஆம் ஆண்டில் சிவகங்கை சீமையை ஆண்ட மன்னர் ஸ்ரீமத் முத்து விஜய ரகுநாத போத குருசாமி ராஜாவால், தெப்பக்குளம் தென்கரையில் அமைந்திருந்த கட்டடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. மன்னர் ஸ்ரீமத் முத்து விஜய ரகுநாத கெளரி வல்லப உடையண ராஜா ஆட்சியில், 1888-இல் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு, நிரந்தரக் கட்டடம் கட்டப்பட்டது. 1891-இல் இருந்து அரண்மனை போன்று தோற்றமளிக்கும் இந்தக் கட்டடத்தில் பள்ளி நடைபெற்றுவந்தது. உயர்நிலைப் பள்ளியின் முதல் தலைமையாசிரியராகப் பணியாற்றிய எம். எஸ். சங்கரய்யர் இந்தக் கட்டடம் செயல் வடிவம் பெறவும் பாடுபாட்டார்.
1898-இல் சிவகங்கையின் மன்னராக இரண்டாம் துரைசிங்க ராஜா பதவிக்கு வந்தார். அவருக்கு சிறுவயது என்பதால், ஆட்சிப் பொறுப்பு அன்றைய அரசிடம் இருந்து எஸ்டேட் கலெக்டர் ஜமீன் நிர்வாகத் தலைவராகச் செயல்பட்டார். உரிய வயது வந்ததும் மன்னர் துரைசிங்க ராஜா பொறுப்பேற்றார். கருணை உள்ளமும், வள்ளல் தன்மையும் இயல்பாகப் பெற்றிருந்த மன்னர் துரைசிங்க ராஜா கல்வித் தொண்டுகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். 1914-இல் பள்ளியின் பெரிய கட்டடத்துக்குத் தெற்கே 'அறிவியல் ஆய்வுக்கூடம்' கட்டப்பட்டது. அவர் நிறுவிய ஏழை மாணவர் இலவச விடுதியில் பயின்ற மாணவர்களில் பலர் அவரவர் வாழ்க்கையில் உயர்பதவிகளில் பணியாற்றி, சிறப்பும் பெற்றனர். அன்றைய சென்னை மாநிலத்தில் மன்னர் உயர்
நிலைப் பள்ளி சாரணியர் இயக்கத்திலும், விளையாட்டுப் போட்டிகளிலும் சிறப்பிடத்தில் இருந்தது. மன்னரும் பள்ளிக்கு வருகை தந்து, மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும் ஹாக்கி விளையாடுவதுண்டு.
1932-ல் ஒன்று முதல் ஐந்து முடிய வகுப்புகள் பிரிக்கப்பட்டு 'மன்னர் இலவச ஆரம்பப் பள்ளி' தனியாகச் செயல்பட தொடங்கியது. பின்னர், நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப் பெற்றது. 1940-இல் அன்றைய திவான் எம். பி. பை ஆணையின்பேரில், பள்ளியின் பெரிய கட்டடத்தின் முதல் தளத்தில் வடக்கிலும், தெற்கிலும் இரு அறைகள் கட்டப் பெற்றன. ஒன்றில் நூல் நிலையமும், மற்றொன்றில் அருங்காட்சியகமும் செயல்பட்டன. பள்ளி வளர்ச்சி பெற்ற அந்தக் காலத்தில் பணியாற்றிய தலைமையாசிரியர்கள் எஸ். எம். நாராயணஸ்வாமி அய்யர், (ஈரோடு) எஸ். மீனாட்சிசுந்தர முதலியார், ஓ.கே. ஸ்ரீநிவாச முதலியார், ஆர். நாராயணன் சேர்வை உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மன்னர் துரைசிங்க ராஜாவைத் தொடர்ந்து அவரது மகன் மன்னர் சண்முக ராஜா காலத்தில் பள்ளிக்கு கலையரங்கம், நூற்றாண்டு விழா நினைவுக் கட்டடங்கள், பொறியியல் கூடம், பத்து வகுப்பறைகள் உள்ளிட்டவை கட்டப் பெற்று, பள்ளி நுழைவாயிலும் அகலப்படுத்தப்பட்டது. பொறியியல் பாடம், தட்டச்சு, செயலகப் பயிற்சி, ஆங்கில வழி வகுப்புகள் போன்றவை புதிதாக ஏற்படுத்தப்பட்டன.
மன்னர் சண்முக ராஜாவின் காலத்தில் நாடு சுதந்திரம் அடைந்து, ஜமீன் ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால் சிவகங்கை சமஸ்தானத்துக்குப் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டபோதிலும், கல்விப் பணிக்குச் செலவிடுவதில் எந்தத் தொய்வும் ஏற்படாமல் மன்னர் பார்த்துகொண்டார். 1947-இல் தமது தந்தை மன்னர் துரைசிங்கம் நினைவாக ஒரு கல்லூரியையும் நிறுவினார். அந்தக் கல்லூரியால் ஏழை மாணவர்கள் கல்லூரிக் கல்வி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
கல்விப் பணியில் யார் ஈடுபட்டாலும், உதவியும் அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மன்னர் சண்முக ராஜா. காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் அமைந்துள்ள பரந்த நிலம் சிவகங்கை மன்னருக்குப் பாத்தியப்பட்டது. கல்லூரி ஆரம்பிக்க இந்த நிலப் பரப்பை வள்ளல் அழகப்ப செட்டியார் விலைக்குக் கேட்டபோது, மன்னர் சண்முக ராஜா மிகச் சிறிய தொகையை மட்டும் பெற்றுகொண்டு வழங்கினார். இளையாங்குடி முஸ்லிம் கல்விச் சங்கம் சார்பில் பள்ளி தொடங்க இடத்தைத் தானமாகவே மன்னர் சண்முக ராஜா வழங்கினார்.
சாரணர் இயக்கம் 1921-ஆம் ஆண்டிலே தமிழ்நாட்டிலேயே முதன்முதலில் இப்பள்ளியில் தான் தொடங்கப்பட்டது. தேசிய மாணவர் படை 1954-ஆம் ஆண்டில் இருந்தும், ஆங்கில வழி கல்வி 1961-ஆம் ஆண்டில் இருந்தும் செயல்படுகிறது. கல்வி, ஒழுக்கம், விளையாட்டு ஆகியவற்றுக்கு சம அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இந்தப் பள்ளியில், தேசிய அளவில் பள்ளி மாணவர்கள் சாதனைகளைப் படைத்துள்ளனர்.
மகாத்மா காந்தி நினைவு அறக்கட்டளையை மன்னர் சண்முக ராஜா நிறுவி தனது பூங்காவை தானமாக வழங்கியதும், அனைத்துத் தரப்பு மக்களும் தமது சமஸ்தானக் கோயில்களுக்குள் சென்று வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியதும் அவரது சாதனைகளாகும். 'காளீஸ்வரா கிளப்' என்ற அமைப்பின் வாயிலாக, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு அவர் ஊக்கம் அளித்ததோடு, நவராத்திரி நாள்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவும் செய்தார்.
தமிழிசை விழா, நாடகங்களை நடத்தியதோடு சிவாஸ்திரம் நாடகத்தில் தானே நடித்தார். பள்ளி ஆசிரியர்களிடமும், பெரியோர்களிடமும் மிகவும் அன்பும், மரியாதையும் காட்டிய மன்னர் மனிதநேயப் பண்பின் உறைவிடமாகவே விளங்கினார்.இதனால், அவர் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து வருகிறார்.
மன்னர் சண்முகராஜாவின் புதல்வர் து.ச. கார்த்திகேயராஜா காலத்தில் பள்ளி மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அப்போது தலைமையாசிரியராகப் பணியாற்றிய ஆர். வேங்கடகிருஷ்ணனின் நிர்வாகத்தில் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதால், நிர்வாகத்தில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மன்னர் கார்த்திகேய ராஜாவின் மறைவுக்குப் பிறகு அவருடைய மூத்த சகோதரி இராஜலட்சுமி நாச்சியாரின் மகள் ராணி மதுராந்தகி, 'நாச்சியாரின் காப்பாளர்' என்ற முறையில் சிவகங்கை சமஸ்தானத்தையும் பள்ளிகளையும் நிர்வாகம் செய்து வந்தார். இவரது காலத்திலும் பள்ளியில் பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்பொழுது மன்னர் மேல்நிலைப் பள்ளி, மன்னர் நடுநிலைப் பள்ளி, அலிஸ் மில்லர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, அலிஸ் மில்லர் பெண்கள் தொடக்கப் பள்ளி, கார்த்திக ராஜா நர்சரி பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்கள் ராணி டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியார் தலைமையிலான கல்வி முகவாண்மையாலும், ராஜ்குமார் ஆர்.மகேஸ்துரை தலைமையிலான பள்ளிக் குழுக்களாலும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
முன்னாள் அரசவை கவிஞர் முத்துலிங்கம், செய்தி மக்கள் தொடர்புத்துறை முன்னாள் இயக்குநர் இரா. கற்பூரசுந்தரபாண்டியன், பி.எம். சுப்பிரமணியன் ஐசிஎஸ்., மத்திய உள்துறை செயலர் ஜெ. கல்யாணகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் கே.எஸ். ராமகிருஷ்ணன், வி. கோவிந்தராஜா, ஏ. ஷியாமளாதேவி, நீதியரசர் பிரதாப் சிங், ஐபிஎஸ் அலுவலர் எம். சுப்பையா, ஐஆர்பிஎஸ் அலுவலர் வி. கணேசன், இஸ்ரோ அலுவலர் ஸ்ரீதர், சென்னை பல்கலை. துணைவேந்தர் எஸ். கெளரி உள்ளிட்டோர் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களில் குறிபிடத்தக்கவர்கள்.
2012 -இல் 100 கணினிகள் கொண்ட கணினி ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை, கூட்ட அரங்கம் ஆகியவற்றை பள்ளியின் முன்னாள் மாணவர் பத்மஸ்ரீ சிவன் நாடாரும், பெண்களுக்கான சுகாதார வளாகத்தை முன்னாள் மாணவர் பட்டய கணக்காளர் ஜித்தேந்திரனும் கட்டிக் கொடுத்தனர்'' என்கிறார் வி.எஸ். குமரகுரு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.