ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடலில் சிவப்புத் திட்டுகளும், அரிப்பும் தீர வழி என்ன?

சுமார் எட்டு மாதங்களுக்கு முன் நான் எனது நண்பர்களுடன் கோவாவுக்குச் சென்றிருந்தேன்.
சிவப்புத் திட்டுகள்
சிவப்புத் திட்டுகள்
Published on
Updated on
2 min read

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

சுமார் எட்டு மாதங்களுக்கு முன் நான் எனது நண்பர்களுடன் கோவாவுக்குச் சென்றிருந்தேன். நீச்சல் அடித்தவுடன் மதுபானம் அருந்திவிட்டு, சிக்கனும் சாப்பிட்டேன். மறுநாள் காலையில் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டது, சிறுசிறு சிவப்பு திட்டுகள் ஏற்பட்டன. தலையிலும் அரிப்பு ஏற்பட்டது.

தற்சமயம் உடல் முழுவதும் சிவப்புத் திட்டுகள் தோன்றி, கடும் அரிப்பும் எரிச்சலும் தோன்றி மிகவும் வேதனைப்படுகிறேன். தலையில் சொரிந்தால் வெள்ளைப்பொடி போல் முடி உதிருகிறது. என் உடல்நிலை குணமாக ஆயுர்வேத மருத்துவம் உதவுமா?

-குணசீலன், சென்னை.

நிரந்தரமாகத் தக்க வைத்துகொள்ள வேண்டிய ஆரோக்கியத்தை, தற்காலிகச் சுகத்தைத் தரும் நடவடிக்கைகளால் இன்று துன்பமான நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டுவிட்டீர்கள். தண்ணீரிலுள்ள அணுக்கிருமிகள் உங்கள் தோலைப் பாதித்திருக்கலாம்.

சிக்கன், மதுபானம் போன்றவை பித்தத் தோஷத்தைச் சீற்றம் அடையச் செய்து, ரத்தத்தைக் கெடுத்ததன் விளைவாக உங்கள் உடல் முழுவதும் விசிறி அடித்தவிதமாக, திட்டுகள் உருவாகி அரிப்பும் எரிச்சலும் பொடிப் பொடியாக உதிருதலுமாகப் பெரும் உபாதையைத் தோற்றுவித்திருக்கிறது. சுகம் நாடிச் சென்ற நீங்கள் மன உளைச்சல், மனவேதனையுடன் ஊர் திரும்பியிருக்கிறீர்கள்.

கெட்டுப் போன பித்தத்தை, ரத்தத்தில் இருந்து பிரித்து, அதை நீர்க்கச் செய்து பேதி மூலம் வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு ஆயுர்வேதத்தில் சில கசகசப்பான நெய் மருந்துகள் உள்ளன.

குடல் தன்மை, பசியின் தீவிரம், செரிமான கேந்திர நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த மருந்துகளை சில குறிப்பிட்ட நாள்கள் வரை பருகுமாறு பரிந்துரைத்து, அவை தம் குறிகளை உடலில் நன்கு சேர்ந்துவிட்டதை அறிந்ததும், பேதி சிகிச்சை மூலம், உட்புறக் கழிவுகளைத் துப்புரவாக நீக்க வேண்டும். இதைச் செய்வதற்குச் சிறந்த ஆயுர்வேத கஷாய மருந்துகள், லேஹியங்கள், சூரணங்கள் பல உள்ளன.

பேதியால் சுத்தமடைந்த குடல், ரத்தத்தினால் உங்களுடைய உபாதையின் தீவிரமானது குறையும். ஆனாலும் குணமாகாது. அதனால், அதன்பிறகு உடலெங்கும் மூலிகைத் தைலத்தால் தேய்த்து, நன்கு ஊறிய பிறகு சரக்கொன்றைப்பட்டை, வேப்பம்பட்டை, புங்கம்பட்டை, நால்பாமரப்பட்டை, ஏழிலைப்பாலைப்பட்டை போன்றவற்றால் காய்ச்சப்பட்ட மூலிகைத் தண்ணீரால் குளிக்க வேண்டும்.

இதனால் வெளிப்புறம், உட்புறம் சுத்தமானது உறுதியாகிறது. ஆனாலும், தொடர்ந்து ரத்தத்தைச் சுத்தமாக வைத்திருக்கக் கூடிய நன்னாரி வேர்ப்பட்டை, சுக்கு, கடுக்காய் சேர்த்த கஷாயம், வில்வாதி குளிகை, கருங்காலிக்கட்டையினால் காய்ச்சப்பட்ட மூலிகைத் தண்ணீர் அருந்துதல் போன்றவற்றைச் செய்து வர வேண்டும்.

உடல் உட்புற நொதநொதப்பை ஏற்படுத்தும் தயிர், கத்தரிக்காய், நல்லெண்ணெய், கடுகு, உளுந்து, புலால் உணவு ஆகியவற்றை நீங்கள் தவிர்க்க வேண்டும். பகல் தூக்கம் கூடாது.

உணவில் நிறைய கசப்பு, துவர்ப்புச் சுவை கொண்ட கறிகாய்களையே நீங்கள் தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டும். காரம், புளி, உப்புகளை முடிந்தவரையில் தவிர்க்க வேண்டும். இந்தச் சிகிச்சை முறை, பத்திய உணவு போன்றவை நிறைவுற, சுமார் மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம். வெறும் வெளிப்புறக் களிம்புகளால் இந்த நீண்டதொரு விளக்கம் அளிக்கப்படுகிறது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com