கண்டது
(அரூர் பைபாஸ் சாலையில் டெம்போ ஒன்றின் பின்னால் எழுதப்பட்டிருந்த வாசகம்)
'பங்காளி... எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல...''
மு.மதிவாணன், அரூர்.
(கும்பகோணத்துக்குப் பக்கத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
'உள்ளூர்.''
-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
(சென்னை கோயம்பேட்டில் ஆட்டோவில் கண்ட வாசகம்)
'இருப்பவனிடம் எப்போதும் கையேந்தாதே...
இல்லாதவனை ஒருபோதும் கைவிடாதே!''
-சிவா, திருவள்ளூர்.
கேட்டது
(சென்னை மேற்கு மாம்பலம் காய்கறிக்கடையில் பெண்ணும் கடைக்காரரும்)
'வெண்டைக்காய் வாங்கினால் முப்பது ரூபாய்... எடுத்தால் நாற்பது ரூபாயா?''
'காயை உடைத்து எடுத்தால், அதான் விலை!''
-வை.ஆனந்த், கோயம்பேடு.
(திருச்சியில் கூட்டமான பேருந்தில் நடத்துநரும், இளைஞரும்)
'ஏம்ப்பா! மாட்டு ஆஸ்பத்திரி வந்துடுச்சி... இறங்கலையா?''
'அதை ஏன் என்னிடம் சொல்றீங்க?''
'நீதானேப்பா... அடுத்தவங்களை முட்டிக்கிட்டும் இடிச்சிக்கிட்டும் நிக்கிறே... அதான் சொன்னேன்!''
எம்.அசோகராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
(தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் இருவர்)
'சார், இந்த ரோடு எங்கே போகுது?''
'ரோடு எங்கேயும் போகாது. நீங்க எங்கே போகணும், அதைச் சொல்லுங்க!''
-ச.லட்சுமி, செங்கோட்டை.
யோசிக்கிறாங்கப்பா!
'இறைவனுக்குப் படைத்தால் நீ பக்தன்...
இல்லாதவனுக்குப் படைத்தால் நீயே இறைவன்!''
க.அருச்சுனன், செங்கல்பட்டு.
மைக்ரோ கதை
அடைமழை பெய்து அப்போதுதான் ஓய்ந்திருந்தது. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு பைக்கில் கிளம்பினான் மகேஷ்.
சிறிது தூரம் சென்றிருப்பான். அப்போது மூதாட்டி ஒருவர், சாலையில் மழைநீர் நிரம்பிய சிறு பள்ளத்தில் கால் தடுமாறி கீழே விழுத்தார்.
இதைக் கண்ட மகேஷ், 'மழைக் காலத்துல எதுக்கு இந்தக் கிழவி வெளியே வரணும்... சரியான தண்டனைதான் கிடைச்சிருக்கு!' என்று மனதுக்குள் திட்டியவாறு அந்த இடத்தைக் கடந்தவன், தெரு முனையில் பைக்கை திருப்ப முயன்றபோது தடுமாறி கிழே விழுந்தான்.
பின்னால் காரில் வந்த நபர் காரை ஓரமாக நிறுத்திவிட்டு, அவசரஅவசரமாக ஓடிவந்து மகேஷை தூக்கி முதலுதவி செய்ததுடன், 'வாங்க சார்... என்னோட கார்ல ஹாஸ்பிடலுக்குப் போகலாம்'' என்றார் வாஞ்சையுடன்.
'தேங்க்ஸ் சார்... சின்ன சிராய்ப்பு தான்'' என்றான் மகேஷ் .
'நல்லவேளை... பைக்கும் எதுவும் ஆகல'' என்று பைக்கை ஸ்டாட் செய்து கொடுத்த அவர், 'பார்த்துப் போங்க, சார்!'' என்று பணிவாகக் கூறிவிட்டுக் கிளம்பினார்.
அப்போது மூதாட்டிக்கு உதவாமல் வந்தது மகேஷின் நினைவில் நிழலாடியது.
'இனி உயிரோடு இருக்கும் வரை நாமும் பிறருக்கு உதவி செய்யணும்' என்ற முடிவுடன் அங்கிருந்து கிளம்பினான்.
ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
எஸ்.எம்.எஸ்.
'நிஜம் ஒரு நொடி வலி...
நினைவு ஒவ்வொரு நொடியும் வலி!''
-பி. நாகலட்சுமி பழனிசாமி, கிழக்கு தாம்பரம்.
அப்படீங்களா!
நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த சாட் சேவையை எக்ஸ் சமூகவலைதளம் அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ் ஆப்பில் வழங்கப்படும் சாட் சேவைக்கு இணையாக இதில் பைல்களையும் அனுப்பலாம்.
அனுப்பப்பட்ட தகவல்களைத் திருத்தவும், அழிக்கவும், தானாக மறையவும் வைக்க முடியும். இதில், ஆடியோ, விடியோ அழைப்புகளையும் மேற்கொள்ளலாம்.
'என்ட் டூ என்ட்' எனப்படும் பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் எக்ஸ் சாட்டுகளில் அளிக்கப்பட்டுள்ளன. சாட்டுகளை 'ஸ்கிரீன் ஷாட்' எடுக்கப்படுவதைத் தடுக்கவும் இதில் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஐ.ஓ.எஸ். இணைய பக்கத்தில் மட்டும் இந்த எக்ஸ் சாட்
சேவையைப் பயன்படுத்த முடியும். விரைவில் ஆன்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கு இந்தச் சேவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.