அசத்தும் ஆசிரியர்...

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஆ.மணிகண்டன், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனராகவும் இருந்து வருகிறார்.
அசத்தும் ஆசிரியர்...
Published on
Updated on
3 min read

பொ.ஜெயச்சந்திரன்

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஆ.மணிகண்டன், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனராகவும் இருந்து வருகிறார். தொல்லியல் ஆய்வு, கள ஆய்வுகளில் பல்வேறு கண்டுபிடிப்புகளில் சாதித்து வரும் அவரிடம் பேசியபோது:

'நான் 2004-இல் நீலகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட கூடலூர் ஒவேலியில் உள்ள நியூஹோப் நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன்.

2005-இல் பணியிட மாறுதலில் கந்தர்வகோட்டை வேம்பன்பட்டி பள்ளிக்கு வந்தேன். அறிவியல் சோதனைகள், கணினி பயன்பாட்டை இணைத்து பாடங்களைக் கற்பித்தேன். அப்போது, இந்திய தொழில்நுட்பத் துறையால் , நாகலாந்து மாநிலம் திமாப்பூரில் நடத்தப்பட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், சிறந்த ஆய்வுக் கட்டுரையாக எனது மாணவர் குழுவினர் அளித்த கட்டுரை தேர்வானது.

2010-இல் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியராகப் பணியிட மாறுதல் செய்யப்பட்டேன். அப்போது கந்தர்வகோட்டை- வாண்டையான்பட்டி சாலையில் பழமையான கல்வட்டம் தாழிகள் இருப்பதை அடையாளப்படுத்தி, மாணவர்களுக்கும் பயிற்சியை அளித்தேன்.

அங்கு கிடைக்கப் பெற்ற கருப்பு-சிவப்பு பானை ஓடுகள், கருமை நிற ரெளலட் பானை ஓடுகள், கிண்ணங்கள், ராட்டை, விளக்கு உள்ளிட்ட பொருள்களை வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தோம். அங்கு சேகரிக்கப்பட்ட இரும்பு உருக்குக் குழாய்கள், கழிவுகள் உள்ளிட்டவற்றை பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றத்தால் பராமரித்து வருகிறோம்.

அறந்தாங்கியிலுள்ள வில்லுனி (வில்லன்னி) ஆற்றங்கரையில் அமைந்துள்ள தொன்மையான புதையிடத்தில் கற்காலத்தைச் சேர்ந்த கற்கோடரியை கண்டறிந்தோம். இது 5,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இவ்விடத்தில் புதையிடத்தை மையமாக வைத்து மண் சுண்ணாம்பு கலவையிலான புதிர் நிலை அமைப்பையும், பல்வேறு பானைக் குறியீடுகளையும் கள ஆய்வின் மூலம் அடையாளப்படுத்தியுள்ளோம்.

திருமயம் வட்டம் ராங்கியம் வனப் பகுதியில் மென்கிர் எனப்படும் நெடுங்கற்கள், கற்குவை, கல்வட்டங்களை அடையாளப்படுத்தினோம்.

பூலாங்குறிச்சி அருகே மலையடிப்பட்டி வனப்பகுதியில், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட 19 கல் பதுகைகளுடன் கல்வட்டங்களையும் கண்டறிந்தோம்.

தேவர் மலை, மலையக் கோவில் ஆகிய இடங்களில் செஞ்சாந்தால் வரையப்பட்ட பாறை ஓவியங்களை அடையாளப்படுத்தினோம். இதன் காலம் சுமார் 3,500ஆண்டுகளுக்கு முற்பட்டது. தேவர் மலையில் காணப்படும் ஓவியம் மலையின் பின்புறத்தில் ஓடும் வெள்ளாற்றைக் குறிக்கும் வகையில் வரையப்பட்டுள்ளது.

இங்கே காணப்படும் உருவங்கள் கனசதுர வடிவத்திலும் சிறு,சிறு மனித உருவங்களிலும் வரையப்பட்டுள்ளது. மலையக் கோவிலில் வரையப்பட்டுள்ள ஓவியம் கருமையான, சிவப்பு சான்றுகளால் பட்டையாக வரையப்பட்டுள்ளன. இதனை 2013-இல் கண்டறிந்தோம்.

சோழர்களின் நீர்ப்பாசன அமைப்பை வெளிப்படுத்தும் நொடியூர் மருதன் ஏரியில் அமைந்துள்ள இரணசிங்க முத்தரையன் என்பவர் முதலாம் ஆதித்தன் காலத்தில் செய்து கொடுத்த குமிழி கல்வெட்டையும், நக்கீரர் வயல் அருகே உள்ள மேலூர் கண்மாயில் கண்டறிந்தோம்.

பெருங்களூரில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தகச் சோழரின் கல்வெட்டுகள், இரண்டு சிற்பங்கள், இதனுடன் தொடர்புடைய மாந்தாங்குடி எடுத்தடி மேடு எனும் இடத்தில் பராந்தகச் சோழரின் அறிவீசுவரர் சிற்பம், நந்திகள், முருகன், துர்கை, பிரம்மா, 3 துண்டு சிற்பங்கள், 11-ஆம் நூற்றாண்டு தொடங்கி பொறிக்கப்பட்டுள்ள செல்லுகுடி ராஜேந்திரச் சோழர் வணிகக் குழு கல்வெட்டு, கொன்னைப்பட்டி கொன்னைக் கண்மாயில் கண்டுபிடிக்கப்பட்ட 11 சோழர் கால நினைவுத்தூண் கல்வெட்டுகள், வாழமங்கலத்தில் குலோத்துங்கச் சோழரின் கல்வெட்டுகளைக் கண்டறிந்தோம்.

இடைக்காலத்தைச் சேர்ந்த நிர்வாக முறையை வெளிப்படுத்தும் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆசிரியம் கல்வெட்டுகளை வாழமங்கலம், கூகூர், பனையூர், தேவர் மலை, மலையடிப்பட்டி உள்ளிட்ட ஊர்களிலும், கந்தர்வகோட்டை வரலாற்றை வெளிக்கொணரும் பிசானத்தூர் கல்வெட்டையும் வெளிப்படுத்தி இருக்கிறோம்.

அக்னி ஆற்றங்கரையில் கீழவாண்டான் விடுதி 4.5அடி மகாவீர், கையடக்க பத்மபிரபர் ஆகிய சிற்பங்களையும், வைத்திக் கோயில் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலின் வடபுற மதில்சுவரின் மேற்குப் பகுதியில் 5அடி உயரத்தில் சமண தீர்த்தங்கரர் சிற்பத்தையும் கண்டறிந்தோம்.

அசோகமரம், சிற்பத்தில் முக்குடை அமைப்பு, பிரபா வளையம், சாமரதாரிகள் தெளிவற்றுக் காட்டப்பட்டுள்ளன. மங்களா கோயில் தீர்த்தங்கரர், இறையூர் மகாவீர், நம்பன்பட்டி தீர்த்தங்கரர் சிற்பங்களும், வெள்ளாற்றங்கரையில் வெள்ளாளக் கோட்டையூர், வெள்ளாளவயல், சிறுகனூர் ஆகிய இடங்களில் அடையாளப்படுத்தி இருக்கிறோம்.

ஆவுடையார் கோயில் பகுதியில் தலையில்லா புத்தர் சிற்பத்தைக் கண்டறிந்துள்ளோம்.

பொற்பனைக் கோட்டை இரும்பு உருக்கு ஆலை அம்பலத்திடலில் புதிய கற்கோடரி, புதிர் திட்டை என ஏராளமான வரலாற்றுக்கு முந்தைய கண்டுபிடிப்புகளும் உண்டு.

தமிழ் எண் மைல் கற்கள் புதுக்கோட்டை பகுதியில் கூழையான்விடுதி, ஆதனக் கோட்டை, அன்னவாசல் தலா ஒன்று, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் மூன்று, மாப்பிள்ளை நாயக்கன்பட்டியில் ஒன்று, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஒன்று என்ற எண்ணிக்கையில் கண்டறிந்துள்ளேன்.

தானக் கல்வெட்டுகளைப் பொருத்தவரைக்கும் பூவுகந்தருளிய நாயனார் என்ற பெயருடன் மல்லாங்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு, ஆதனப்பட்டி கிராமத்தில் உள்ள நிலதான கல்வெட்டு, ஆயிப்பட்டியில் விஜயரெகுநாத தொண்டைமான் அமைத்த சத்திரம் தானக் கல்வெட்டு, புதுக்கோட்டை நயினார் தண்டாயுபாணி கோயில் தானக் கல்வெட்டு என தானக் கல்வெட்டுகளைக் கண்டறிந்துள்ளோம்.

பராந்தகச் சோழனின் காலத்தைய தட்டான் திறமன் என்பார் பெருமடைக்கால் அமைத்த மேலூர் குமிழி கல்வெட்டு, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பூதலூர் ஒன்றியத்தில் உள்ள நண்டம்பட்டி பராந்தகச் சோழரின் கற்றளி, சிற்பங்களுடன் கிடைத்த மீயானளுரளாகிய மல்ல முத்தரையன் என்பார் வெட்டிய கல்வெட்டு, குடுமியான்மலை அருகே விசலூர் கற்றளி சிற்பங்கள், 23 கல்வெட்டுகள் உள்ளிட்ட புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

எனது பணிகளுக்கு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவர் மேலப்பனையூர் கரு.இராஜேந்திரன், பொறுப்பாளர்கள் எஸ்.கஸ்தூரிரங்கன், பீர்முகமது, மு.முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும்,

சு.இராஜகோபால், சொ.சாந்தலிங்கம், பா.ஜம்புலிங்கம், பா.வேதாசலம், சு.ராஜவேலு, வே.ராஜகுரு உள்ளிட்ட தொல்லியல் அறிஞர்களும் உறுதுணையாக இருக்கின்றனர்'' என்கிறார் ஆ.மணிகண்டன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com