கண்டது
(அரவக்குறிச்சிப்பட்டியில் கடை ஒன்றில் எழுதப்பட்டிருந்த வாசகம்)
'சொந்தக்காரனை நம்பினால் தகராறு. சொந்தக்காலை நம்பினால் வரலாறு!''
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
(திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டினம் சாலையில் உள்ள ஒரு ஊரின் பெயர்)
'நீர்முளை.''
-சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
(குன்றத்தூர் பஸ் டெர்மினல் அருகே ஒரு லாரியின் பின்புறம் கண்ட வாசகம்)
'மறைந்த பிறகும் வாட்ஸ் - அப் பார்க்க வேண்டுமா? கண் தானம் செய்யுங்கள்!''
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.
கேட்டது
(திருச்சி கடை வீதியில் இருவர்)
'போனஸ்தான் கொடுத்துட்டாங்களே... அப்புறம் எதுக்குப் பஞ்சப்பாட்டு பாடுறே?''
'போனஸ் வாங்காமலே இருந்திருக்கலாம்னுதான்!''
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
(சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு பால் நிலையத்தின் ஊழியரும் வாடிக்கையாளரும் பேசிக்கொண்டது)
'இந்தக் கடையில சேர்றதுக்கு முன்னே நான் டைலர் கடை வெச்சிருந்தேன்.''
'ஓ, அதுதான் கடைக்கு வர்றவங்களையெல்லாம் கண்ணிலேயே அளந்து அளந்து பார்க்குறீயா?''
-கே.ஜி.எஃப்.பழனிசாமி சின்னையா,
கிழக்குத் தாம்பரம்.
(அண்ணா நகர் பூங்காவில் நண்பர்கள் பேசிக்கொண்டது)
'உனக்கு என்னடா... சாப்பாட்டுக்குக் கஷ்டமில்லை!''
'அட நீ வேற... என் வீட்டுச் சமையலறையில பூனை உறங்குது!''
'அப்ப தினமும் ஆன் லைன்ல புக் பண்ணி வசதியா சாப்பிடுறேன்னு சொல்லு!''
-ஆட்டோ சந்துரு, முகப்பேர்.
யோசிக்கிறாங்கப்பா!
செல்போனை நோண்டினா கண்கள் கெடும்; சீரியல் பார்த்தா கண்ணீர் விடும்.
-மு.மதனகோபால், ஒசூர்.
மைக்ரோ கதை
'என்னங்க! நம்ம பையன் வினோத், மருமகள் சங்கீதா, பேத்தி பூஜிதா மூணு பேரும் விடுமுறைக்கு இந்தியா வர்றாங்களாம். அவங்க ரெண்டு பேரையும் மாமனார் வீட்டுல விட்டுட்டு அவன் மட்டும் ரெண்டு நாளைக்கு இங்க வந்து நம்முடன் தங்குவானாம். பேத்திக்கு பலகாரம் எதுவும் செய்துதர வேண்டாம்னும் சொல்லிட்டான்.'' என்று வள்ளி தன் கணவன் ராமுவிடம் கூறினாள்.
'ஏன்? எதனால் வேண்டாமாம்?''
'போன தடவையே நான் செய்து கொடுத்ததைச் சாப்பிடாமல் யாருக்கோ கொடுத்தாளாம், சங்கீதா.'' என்று சொல்லும்போதே வள்ளிக்கு தொண்டை அடைத்து அழுகை வந்தது.
'முப்பது வருடங்களுக்கு முன் எங்கம்மாவும் உன்போலத்தான் அழுதாள். கர்மாங்கறது பூமாராங் மாதிரிதான்!'' என்றார் ராமு.
-கே.நாகலட்சுமி, உள்ளகரம்.
எஸ்.எம்.எஸ்.
மாற்றத்தை விரும்புகிறவனே முன்னேற்றச் சிகரத்தைத்
தொடுவான்.
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
அப்படீங்களா!
'கூகுள் போட்டோஸ்' செயலியில் செயற்கை நுண்ணறிவைப் புகுத்தி புதிய சேவைகளை கூகுளின் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பொதுவாக கைப்பேசிகளில் எடுக்கப்படும் புகைப்படங்கள், விடியோக்கள் கூகுள் போட்டோஸில் சேமிக்கப்படும். இந்தச் சேமிப்புத் தளத்தில் உள்ள புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நவீனமயமாக்க 10 புதிய சேவைகள் அறிமுகமாகியுள்ளன.
மென்பொருளைப் பயன்படுத்தி நீண்ட நேரம் செலவு செய்து புகைப்படங்களில் செய்யப்படும் மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் கட்டளையிட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.
புகைப்படங்களில் உள்ள ஜன்னல் மற்றும் கண்ணாடி எதிரொளிகளை நீக்கும் வசதி, படத்தில் உள்ளவர்களுக்குப் பின்புறத்தில் உள்ள தேவையற்ற ஒளி போன்றவற்றை நீக்கும் வசதி, குறைந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்கு ஸ்டூடியோ ஒளி அளிக்கும் வசதி, சிறிய புகைப்படங்களைப் பெரிதாக்கும் வசதி, புகைப்படத்தில் உள்ள அறையின் அம்சத்தையே மாற்றும் வசதி, புகைப்படத்தில் கூடுதல் நபர் மற்றும் பொருள்களைச் சேர்க்கும் வசதி, ஜெமினி நேனோ பனானாவைப் பயன்படுத்தி புகைப்படத்தின் தோற்றத்தையே மாற்றும் வசதி, பழங்காலப் புகைப்படங்களைப் புதுமைப்படுத்தும் வசதி, ஒரே புகைப்படத்தில் பலவிதமான மாற்றங்களைச் செய்யும் வசதி, புகைப்படம் எடுக்க படத்தை இடத்தையே மாற்றும் வசதி என 10 புதிய சேவைகள் கூகுள் போட்டோஸில் அறிமுகமாகியுள்ளன.
தற்போது இந்த புதிய சேவை அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ளன. இவை படிப்படியாக பிற நாடுகளுக்கும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.