கண்டது
(செங்கல்பட்டில் ஓடிய ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்தது...)
'எதிர்பார்ப்பு இல்லையென்றால் ஏமாற்றம் இல்லை.
வெளிச்சம் இல்லையேல் நிழல் கூட துணைக்கு வராது.'
-ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு.
(திருவள்ளூர் அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)
'சேலை'
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.
(தூத்துக்குடியில் உள்ள ஒரு துணிக்கடையில் எழுதியிருந்தது...)
'வேகத்தால் எடுத்த முடிவுக்கு இன்று மட்டுமே வெற்றி!
விவேகத்தால் எடுத்த முடிவுக்கு என்றுமே வெற்றி!'
-கி.ரவிக்குமார், தூத்துக்குடி.
கேட்டது
(சென்னை தி.நகர் ஜவுளிக் கடை முன்பு இருவர் பேசியது...)
'என்னப்பா செக்யூரிட்டி... கஸ்டமர் வந்தா எழுந்து கதவைத் திறந்துவிட மாட்டியா?'
'ஏய்யா? செக்யூரிட்டி சேரில் உட்கார்ந்தா செக்யூரிட்டின்னு கூப்பிடுவியா? நீயும்தான் டிரைவர் சீட்டில் இருக்கே? அந்த அம்மாவோட கார் டிரைவருன்னு கூப்பிடவா?'
-எம்.ரவீந்திரன், திருமருகல்.
(சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள தேநீர்க் கடையில் பலகாரம் சுடுபவரும், வாடிக்கையாளரும்...)
'என்ன மாஸ்டர்... வடை சைஸ் ரொம்ப சின்னதாயிடுச்சு...'
'எல்லாம் உங்கள் வசதிக்காகத்தான்... வடை ஈசியா வாயில் போக வேண்டாமா?'
-கே.ஜி.எஃப். விசாகன், கிழக்கு தாம்பரம்.
(திருச்சி பூங்கா ஒன்றில் இருவர் பேசியது...)
'எங்க வீட்டில் மாமியார்- மருமகள் சண்டையே கிடையாது.'
'எப்படி?'
'ரெண்டு பேருமே போட்டி போட்டுக்கிட்டு மவுன விரதம் இருக்கிறவங்க!'
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
யோசிக்கிறாங்கப்பா!
எதுவும் நிரந்தரமில்லை. இதுவும்!
-மஞ்சுதேவன், பெங்களூரு.
மைக்ரோ கதை
குமாரும், ரம்யாவும் தங்களது மகன் சுரேஷுடன் பெண் பார்க்கச் சென்றனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுரேஷுக்கு பல ஆண்டுகளாகத் திருமணம் தள்ளிப்போனது. 'இந்தப் பெண்ணாவது கைகூட வேண்டுமே!' என்று வேண்டிக் கொண்டே சென்றான் சுரேஷ் .
பெண் வீட்டாரோ, 'மாப்பிள்ளையை எங்களுக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் வீட்டோட மாப்பிள்ளையாக வர வேண்டும்' என்று கண்டிஷன் போட்டனர். இதற்கு குமார் தம்பதியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஆனால் சுரேஷ் தீர்க்கமான முடிவெடுத்து, 'அப்பா... நீங்களும் அம்மாவும் போங்க... நான் இங்கேயே இருந்துடறேன்' என்று ஒரேயடியாகச் சொல்லிவிட்டான். 'அடாடா! இப்படியொரு பிள்ளையா?' என்று குமாரும், ரம்யாவும் மனம் நொந்தபடியே வெளியேறினர்.
-கீதா சீனிவாசன், பெருங்களத்தூர்.
எஸ்எம்எஸ்
ஏக்கத்தில் வாழ்வதும் தூக்கத்தில் கனவு காண்பதும் ஒன்றுதான்.
-த.சீ.பாலு, அத்திப்பட்டு.
அப்படீங்களா!
இணைய வழி தேடலில் கூகுள் செர்ச்சுக்கு இணையாக மொழிபெயர்ப்பில், கூகுள் டிரான்ஸ்லேட் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொழி பெயர்ப்பின் வார்த்தைகள் துல்லியமாக இல்லை என்றாலும் ஓரளவுக்கு மாற்றம் செய்து தருகிறது. மாதம்தோறும் கூகுள் டிரான்ஸ்லேட்டில் சுமார் 1 டிரில்லியன் வார்த்தைகள் மொழி பெயர்க்கப்படுகின்றன.
தற்போது செயற்கை நுண்ணறிவை (ஏ.ஐ.) கூகுள் டிரான்ஸ்லேட் இணைத்துள்ளது. இதனால் பிற மொழியினரின் பேச்சை உங்களுக்கு தெரிந்த மொழியில் கேட்கலாம். கூகுள் டிரான்ஸ்லேட் அதை அப்போதே மொழி பெயர்த்து தந்துவிடும். அதுமட்டுமில்லாமல் புதிய மொழிகளைக் கற்கவும், பயிற்சிப் பெறவும் இந்தப் புதிய சேவை உதவும்.
'டோலிங்கோ' செயலியுடன் இணைந்து 40 மொழிகளில் பயிற்சித் திட்டத்தை கூகுள் வழங்குகிறது. இந்த சேவையைப் பெற கூகுள் டிரான்லேட் செயலியில் 'லைவ் டிரான்ஸ்லேஷன்' என்பதை தேர்வு செய்து மொழிபெயர்க்க வேண்டிய மொழியை தேர்வு செய்யலாம். தேர்வு செய்த மொழியிலும், மொழிபெயர்க்க வேண்டிய மொழியிலும் ஒலி வடிவில் உங்கள் பேச்சு மொழி பெயர்க்கப்பட்டு உடனடியாக அளிக்கப்படும்.
அமெரிக்கா, மெக்ஸிகோ, இந்தியாவில் இந்தச் சேவை அறிமுகமாகி உள்ளது. முதலில் ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சு, ஸ்பானிஸ் பேசுபவர்களுக்கும், ஸ்பானிஸ், பிரான்சு, போர்சுகீஸிலிருந்து ஆங்கிலம் பேசுபவர்களுக்கும் இது உதவும்.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.