எம்.எஸ்.பெருமாள்
வல்லவன் கோட்டை சிவஞானம் முன்னாள் ராணுவ வீரர். தொண்ணூற்றைந்து வயதிலும் கம்பீரமான நிமிர்ந்த நடை. அவர் இல்லத்தின் அடையாளமே 'பட்டாளத்தார் வீடு' என்பதுதான். ஆனால், 'பட்டாளத்தார்' என்று தன்னை ஊரார் அழைப்பதில் அவருக்கு ஒருநாளும் சம்மதம் இல்லை.
'அது ஒரு பொழைப்பு ... அதுக்கு ஒரு பெருமையாங்கேன் ? நெலமெல்லாம் பாளம்பாளமா வெடிச்சுக்கெடக்கு... ஊருக்குள்ள இருக்கப்பட்ட ஒத்தக் கெணறும் தாகத்தால தவிக்கி ... எட்டிப் பாத்தாலும் தண்ணியில்லே... எறங்கிப்பாத்தாலும் ஈரமில்லே... எட்டாப்பு தாண்டாதவனுக்கு கலெக்டர் உத்தியோகமா கெடைக்கும்? அதான் பட்டாளத்துக்கு ஆள் எடுக்காகன்னு தண்டோரா சத்தம் கேட்டாக்கிலே 'ஓடு டவுனுக்கு'ன்னு எடுத்தேன் ஓட்டம் !
செயலா இருந்த காலத்துல ஆச்சியும் அம்மையும் நெய்யும் பாலுமா ஊட்டி ஊட்டி வளத்த ஒடம்புல்ல... இப்பம் நமக்கு சோத்துக்குப் பஞ்சம்... ஆள வந்த வெள்ளைக்காரனுக்கு சோல்ஜருக்கு பஞ்சம் ... அதான் ஒடனே ட்ரக்குல அள்ளிப் போட்டு கூட்டீட்டுப் போய்ட்டான்...! சாக்குத்துணி கணக்கா ரெண்டு கால்சராய் ... பட்டன்வச்ச சட்டை ... தோள்பட்டைக்கு அலுமினிய வில்லை... நெல்லுமூட்டை கனத்துல பூடுசு... எல்லாம் எதுக்கு? ஒருசாண் வயித்துக்குத்தானே.. !
எதிரி யாரு , யாரைக் காப்பாத்த துப்பாக்கியைத் தூக்குதோம்னு தெரியாமலே நாலு வருசத்தை நகர்த்தியாச்சு... அப்பாச்சி நச்சரிப்பு தாங்காம அத்தை மகளுக்கு தாலியும் கட்டியாச்சு... வருசத்துக்கு ஒருவாரம் லீவு... அந்த ஒருவார சொகத்துக்கு ஒரு
கலியாணம்..! அடுத்தவுக உத்தரவுக்கு அடிபணிஞ்சு போறதே பொழைப்பா போச்சு...
பட்டாளத்துல வெள்ளைக்கார ஹவில்தார் 'ஓடு' ன்னா ஓடணும் ... 'சுடு'ன்னா சுட்டுத் தள்ளணும்... எம்டன் குண்டு போடுதான்னு சைரன் சத்தம் கேட்டா பதுங்குகுழியிலே மொதல் ஆளா எறங்கி பம்மணும்... பாஞ்சா புலி , பதுங்குனா பெருச்சாளி ..!
எப்படா ஊருக்கு வருவோம்னு நான் தவிச்ச தவிப்பை சொல்லிமாளாது. ஒரு லீவுக்கு வந்தபொறகுதான் தெரிஞ்சுது , வீரம் வெளைஞ்ச மண்ண விட்டுப்போட்டுப்போய் வெள்ளைக்காரனுக்கு ஊழியம் பண்ணுதமேன்னு! சுப்பிரமணிய பாரதி, செதம்பரம் பிள்ளை அண்ணாச்சி, வாஞ்சி நாதன், வடக்கே காந்தி...நேரு இவுக பேரையும் வீரத்தையும் ஊருல இருக்கப்பட்டவுக பேசுகதைக் கேக்கக் கேக்க 'அட மக்கா ! இவுகள்ளாம் நம்ம மண்ண மீக்கதுக்காகல்லா தடியடி படுதாக... ரத்தஞ் சிந்துதாக' ன்னு புத்தியில ஒறைச்சுது... ' சவத்துமூதி நாலு ரொட்டித்துண்டுக்கும் நாறிப்போன வெண்ணெய்க்குமா துப்பாக்கியெத் தூக்கீட்டு அலையுதே'ன்னு ஊர்க்காரவுக காறித்துப்புகதுக்கு முன்னாலயே முழிப்பு தட்டீட்டு.. !
'பிரிட்டிஷ்காரன் யுத்தம் பண்ண நாம ஏன் தோட்டாவா பாயணும்'ன்னு யூனிபாரத்தைக் கழத்திவீசிட்டு பொறந்த ஊருக்கே திரும்பி வந்தேன். 'வந்தே மாதரம்' கோஷ்டியில சேர்ந்தேன் ... கொடிபிடிச்சு ஊர்வலம் போனேன்...
'வெள்ளையனே வெளியேறு'ன்னு கோஷம் போட்டேன். தடியடியைத் தாங்குனேன். தலையிலேர்ந்து ரத்தம் ஒழுகி தரையில சிந்தி இந்த மண்ணை மீக்கத்தானே போராட்டம்னு அடையாளம்லா காட்டுது! எரநூறு வருச போராட்டம் நான் திரும்பிவந்த நாலஞ்சு வருசத்துக்குள்ள வெற்றிகரமா முடிஞ்சுது... பாலம்கட்ட ராமருக்கு அணில் உதவுன மாதிரி நாட்டு விடுதலைக்கு நம்மாலான பங்கு! சுதந்திரக்காத்தை சுவாசிக்கதுல உள்ள சொகமே அலாதில்ல...! “
கோயில், கல்யாணவீடு, கடைத்தெரு என எந்த இடத்திலும் யாராவது, 'பட்டாளத்தார் ஐயா... சுகமா இருக்கியளாய?' என்று நலம் விசாரித்தால், 'பட்டாளத்தை விட்டு வந்தபொறகு புத்திதெளிஞ்சு சுகமா இருக்கேன்' என்று தன் பூர்வகதையை வரிசைமாறாமல் சொல்லுவார் !
அதேசமயம் நாட்டின் விடுதலைப் போராட்ட வீரவரலாறு பற்றி யாரும் தம்மிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதில்லையே என்ற ஆதங்கம் அவருக்கு நிறையவே இருந்தது. அந்த மனப்புண்ணுக்கு மருந்திட்டவர் பள்ளி ஆசிரியர் செண்பகராமன்.
ஆகஸ்ட் - 15 அன்று பள்ளியில் கொடியேற்ற சிவஞானத்தை அழைத்து வந்தார் . கொடியை ஏற்றி கம்பீரமாக நின்று சல்யூட் அடித்தவரின் கண்களில் கண்ணீர் அருவி... தேசிய கீதம் நிறைவுற்றவுடன் அவரிடமிருந்து விம்மல் வெடித்தது. செண்பகராமன் பதற்றத்துடன் அவரைத் தோளில் தாங்கிக்கொண்டார் .
'என்ன ஆச்சு ஐயா?'
'கொடியிலே கட்டிவச்ச பூவெல்லாம் சாரல் தூவுறமாதிரி நம்ம தலையிலே விழுந்ததே... அந்தப் பூ அத்தனையும் கொடிகாத்த குமரன் சம்சாரம் கூந்தல்ல இருந்த பூவுல்லா ன்னு அதே திருப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர் கிருஷ்ணன் சொன்னது ஞாபகம் வந்தது... கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியலே...!'
ஆசிரியர் செண்பகராமன் மெய்சிலிர்த்து கைகுவித்து வணங்கினார். அன்றுமுதல் சிவஞானத்தை அடிக்கடி சந்தித்து விடுதலைவேள்வி அனுபவங்களை அவர் சொல்லக்கேட்டு அவற்றை வகுப்பில் மாணவர்களிடம் உணர்ச்சிபொங்கப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். இன்றைய சூழலில் இளைய தலைமுறை நாட்டுப்பற்றுடன் வளர வழிவகுத்தார்.
2025 - ஆம் ஆண்டு சுதந்திரதின விழாவை முன்னிட்டு ஓர் ஊடகம் நடத்தும் சிறப்பு நிகழ்ச்சிக்காக சிவஞானத்தை பேட்டி எடுக்க வந்த பிலிப்ஸ் என்ற இளைஞன் விடுதலைப்போராட்டம் பற்றி ஆங்கிலத்தில் படித்துத் தெரிந்துகொண்ட இன்றைய தலைமுறை ஆசாமி! அவன் வந்ததற்கும் நாட்டுப்பற்று ஒன்றும் காரணமல்ல... அவனுடைய கல்லூரித்தோழன் நெல்லையப்பன் தேர்தலில் நிற்க கட்சித்தலைமையிடம் கெஞ்சிக்கொண்டிருப்பவன்... சிவஞானத்தின் ஊர்க்காரன்.
தேசத்தொண்டு சம்பந்தப்பட்டவரின் பேட்டியை ஒளிபரப்ப ஏற்பாடுசெய்தால் மேலிடத்தை கன்வின்ஸ் செய்ய வசதி என்று கணக்குப்போட்டு தன் சொந்தச் செலவில் பிலிப்ஸ் குழுவினரை வரவழைத்திருக்கிறான்!
'இந்த மகிழ்ச்சியான நாளிலே உங்களைச் சந்திக்கிறது எனக்கு கிடைச்ச வரம்...' என்று பேட்டியைத் தொடங்கினான் பிலிப்ஸ்.
'யாருக்கு மகிழ்ச்சின்னு சொல்லுதிய... பிரிட்டிஷ்காரன்ட்ட போராடி வாங்குன சொதந்திரத்தால ஆட்சி மாற்றம் ஏற்பட்டது உண்மை... அடிமைத்தனம் மாறலையே... பணம், பதவி, அதிகாரம், சாதிப்பெருமை இப்படி எல்லாவிஷயத்திலேயும் பத்துப்பேருக்கு பத்தாயிரம் அடிமைங்கறது மகிழ்ச்சி கொடுக்கற சங்கதியா?' என்றார் சூடாக !
இந்தப் பதில் கண்டிப்பாக ஒளிபரப்பில் இடம்பெறாது என்பது அந்த இளைஞனுக்குத் தெரியும். ஆகவே தொடர்பே இல்லாமல் அடுத்த கேள்விக்குத் தாவினான்.
'உங்களை 'பட்டாளத்தார்'னு அடையாளப்படுத்தினா பிடிக்காதுன்னு பேசிக்கிறாங்க. ஆனா இன்னைக்கும் ஒங்க வீட்டை 'பட்டாளத்தார் வீடு'ன்னு தானே சொல்றாங்க... ஆர்மி பென்ஷன் வருதே ... அதனாலயா?' என்றான் எகத்தாளமாக.
செண்பகராமன் ஆவேசப்பட்டு குறுக்கிட்டார்.
'பேட்டி எடுக்க காமெராவோட வர்றதுக்குமுன்னே அவுகளைப் பத்தி படிச்சு தெரிஞ்சுக்க மாட்டியளா... பட்டாளத்து வேலையே வேணாமின்னு தூக்கி எறிஞ்சிட்டு வந்த பாட்டையா பிச்சைக்காசு பென்ஷனுக்கு கையேந்துவாகன்னு எப்படி நெனைக்கத் துணிஞ்சிய தம்பி ..?' என்று சீறினார்.
சிவஞானம் அவரை அமைதிப்படுத்திவிட்டு நிருபரின் தோளில் சமாதானமாகத் தட்டிக்கொடுத்தார்.
'ஓட்டப்பிடாரம் செதம்பரம் அண்ணாச்சி பத்தி ஒங்க சேனல்ல நிகழ்ச்சி நடத்துனியளே .. 'வேளாளன் செக்கிழுத்தா வீட்டுக்கு வீசம்படி எண்ணெய் கூட வராதே , நாட்டுக்கு சுதந்திரம் மட்டும் எப்படி வரும்'னு கேட்டது நீங்கதானே? பொதுவெளியில அப்படி கேக்க ஒங்களை மாதிரி ஆளுகளுக்கு சுதந்திரம் கெடச்சதே ஒடம்புல வலுவில்லாத செதம்பரம் பிள்ளைவாளாலதான் ..!'
செண்பகராமன் வாத்தியார் பொறுமையிழந்து, 'போதும் பாட்டையா... வரலாறு தெரியாத இளவட்டங்களை மனுசஜென்மமா மதிச்சு விளக்கஞ் சொல்லுதிய...' என்று வருத்தம் தெரிவித்தார்.
ஊடக இளைஞனுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது.
'ஒங்க ஊர்க்காரன் நெல்லையப்பன் 'எங்க ஊரு சிவஞானம் தாத்தாவை பேட்டியெடுத்து உங்க சேனல்ல போடு... மேலிடத்துல எனக்கு கூடுதல் கவனம் கிடைக்கும்' ன்னு என்னை கூப்பிட்டதாலதான் வந்தேன்... 'கேள்வியே கேக்கக்கூடாது'ங்கிற மாதிரி எகிர்றீங்களே?' என்று எகத்தாளமாகப் பேசிவிட்டு ஒளிப்பதிவாளரிடம் 'பேக் அப்' என்று உத்தரவிட்டான்.
சிவஞானம் அப்போதும் பொறுமையாகவே, 'காமெராவ நீங்க ஏறக்கட்டியாச்சில்லா... இப்பம் நீங்க என் ஊருக்கார பேரனுக்கு சிநேகிதரு... நம்ம வீட்டு விருந்தாளி ... உள்ள வாங்கையா... சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்... கை கழுவிட்டு வாங்க...'
ஊடக இளைஞன் பிலிப்ஸ் அவமானத்தால் நெளிந்தான்.
'செண்பகராமன், தம்பிகளை கூட்டீட்டு வாருங்க...'
செண்பகராமன் அந்த இளைஞனிடம் , 'இதாம்யா தெக்கத்தி குணம்... சாப்பிடாமப் போனா ஊரெல்லைய தாண்டமுடியாது. காமெராவ கார்ல வச்சிட்டு மூணுபேரும் வாங்க... 'பட்டாளத்தார் வீடு'ங்கதுக்கான காரணத்தை நீங்க தெரிஞ்சுக்காம போகவிட மாட்டேன்...' என்றார்.
'அப்படீன்னா அதையும் ரெக்கார்ட் பண்ணீட்டே சாப்பிடறோம், சார்!' என்றான்.
'பாட்டையா சொல்லுவாக... அதை ஒங்க மனசில பதிஞ்சுக்கிட்டா போதும்... இதுக்குமேலே அவுக காமெராவிலேல்லாம் பேசமாட்டாக ... கூடத்துல எலை போட்டாச்சு... சாப்பிடுவோம்... பொறவு பேசுவோம்...' என்று கூறி மூன்று இளைஞர்களையும் வீட்டுக்குள் அழைத்துவந்தார்.
கூடத்தின் சுவர்களில் வெவ்வேறு காலங்களைப் பதிவுசெய்த புகைப்படங்கள் பிலிப்ûஸ பிரமிக்கச் செய்தது. சிவஞானத்தின் இளமைத்தோற்றம் ராணுவச் சீருடையில் முறுக்கு மீசையுடன்! அதனையடுத்து அதே போன்ற படங்கள். ஆனால், அது அவரல்ல... அவர் ஜாடையில் வேறொரு இளைஞன்... ராணுவச் சீருடையில் படிப்படியான உயர்நிலைகளுக்கான மாற்றங்கள்... பதவிகளைக் குறிக்கும் சின்னங்கள் தோள்பட்டையில்... சுவரின் எதிர்வரிசையில் ராணுவமுகாம் பின்னணியில் இளம் செவிலியர் ஒருவரின் படம்...போரில் காயமுற்ற வீரர்களுக்கு சிகிச்சை செய்யும் செவிலியின் இளவயதுத் தோற்றம் முதல், நடுத்தர வயது... தொடர்ந்து நரைத்த தலைப் பருவம்.
நெல்லையப்பனின் நச்சரிப்புக்காகவும் மாலையில் அவன் தரப்போகும் விருந்துக்காகவும் தாத்தா சிவஞானத்தைப் பேட்டி எடுக்கவந்த பிலிப்ஸ், ராணுவச்சீருடைப் படங்களைப் பார்த்து பிரமித்து நின்றான்.
தலைவாழை இலையில் லெச்சுமி ஆச்சி பார்த்துப் பார்த்துப் பரிமாறும் உணவுவகைகளில் அவன் கவனம் செல்லவில்லை. வீடே ராணுவவீரர்கள் மயம் ! அவர்கள் போர்முனையில் ஆற்றிய தொண்டுகளின் பதிவுகள்.
விருந்து முடிந்தபிறகு திண்ணையில் வந்தமர்ந்த சிவஞானம் புன்சிரிப்புடன் பேசத் தொடங்கினார்.
'நான் பட்டாளத்துல நாப்பதுகளில சேர்ந்தது தேச சேவைக்காக இல்லே தம்பி... பஞ்சம்பொழைக்க பட்டணத்துக்கு போறவுகமாதிரி நான் பட்டாளத்துக்குப் போனேன்... நாலுவருஷம் நாயா சீரழிஞ்சுதான் புத்தி தெளிஞ்சு திரும்பி வந்தேன்... அதனாலதான் பட்டாளத்தான் பட்டத்தோட என்னை அடையாளப்படுத்திக்க மனசுகேக்கலே... நாப்பத்தியேழுக்குப் பொறகு என் சம்சாரம் லெச்சுமி உண்டாகியிருந்த சமயம் பொறக்கப்போற தலைச்சன் புள்ள பையனா இருந்தா படிக்கவச்சு ராணுவ சேவைக்குதான் அனுப்பணும்னு தீர்மானம்... பொண்ணாப் பொறந்திட்டாலும் நர்சிங் படிக்கவச்சு ராணுவமுகாம்ல சேவை பண்ண வைக்கணும்னு முடிவு செஞ்சேன்...
மகராசி ரெட்டைப்புள்ளைகளா பெத்துக்கொடுத்தா... நெனச்சபடியே புள்ளைக வளர்ந்ததும் மகனை ராணுவ வீரனாக்குனேன்... மகளை ராணுவமுகாம் நர்சா மனசார அனுப்பிவச்சேன்.
வெள்ளைக்காரன் வீசி எறிஞ்ச ரொட்டித்துண்டுக்காக நான் பாத்த வேலையிலதான் வெறுப்பு. ஆனா சுதந்திரம் - தியாகிகளோட ரத்தத்தில வெளைஞ்ச பயிரு... மறுபடியும் அண்டைநாட்டுக்காரவுக கைகள்ல நாடு சிக்கிரப்படாதேங்கிற எச்சரிக்கைதான் என் ரெண்டு பிள்ளைகளையுமே நாட்டுக்காக அர்ப்பணிச்சிட்டேன்...'
ஊடக இளைஞர்கள் சிவஞானத்தைக் கைகுவித்து வணங்கினார்கள். ஒளிப்பதிவு செய்ய வந்த இளைஞன் தயக்கத்துடன், 'அவங்க ரெண்டுபேரோட போர்முனை அனுபவங்களை ரெக்கார்ட் பண்ணிக்கலாமா... அவங்க இந்த வீட்டுலதான் இருக்காங்களா...?' என்று கேட்டான்.
'இந்த ஒலகத்திலேயே இல்லே ராசா... கார்கில் வார்ல மகன் வீரமரணம்... ராணுவமுகாமில சேவை செஞ்ச மகளும் நோய்த் தொற்றுனால செத்துப்போனா... அவுக ஒண்ணா ஓடிவெளையாடுன இந்த வீட்டுக்குள்ளே அந்த நெனைப்பை நெஞ்சுல சுமந்துகிட்டு நானும் ஆச்சியும்
நடமாடிக்கிட்டிருக்கோம்... எம் பிள்ளைக ரெண்டு பேரும் நாட்டைக் காப்பாத்துத எல்லைச்சாமிக வரிசையிலே சேந்திட்டாகங்க பெருமையாலதான் 'பட்டாளத்தார் வீடு'ங்க அடையாளத்தைக் கம்பீரமா ஏத்துக்கிட்டிருக்கேன்யா' என்றார் கண்களில் மின்னலுடன்..!
நெல்லையப்பன் தரும் மாலை நேரத்து விருந்துக்காக சிவஞானத்தை பேட்டி எடுக்க வந்த பிலிப்ஸ், புத்தொளிபெற்ற மனநிறைவுடன் நண்பனிடம் சொல்லிக்கொள்ளாமலே சென்னையை நோக்கிப் புறப்பட்டான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிளன் பிலிப்ஸ் மிகவும் அற்புதமான வீரர்; ஜோஸ் பட்லர் புகழாரம்!

சட்டமல்ல, புரிதல்தான் வேண்டும்!
கழுத்தில் விழாத மாலை!

விமானம் ஓட்டி அசத்திய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் க்ளென் பிலிப்ஸ்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

