சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

வீட்டிலிருந்தபடியே வருமானம்...

சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்கள் பண்பாடு, பாரம்பரியம், உணவு மரபுகள் ஆகியவற்றைப் பேணிக்காத்து வருகின்றனர்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 10:42 pm

பொ.ஜெயச்சந்திரன்

சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்கள் பண்பாடு, பாரம்பரியம், உணவு மரபுகள் ஆகியவற்றைப் பேணிக்காத்து வருகின்றனர். இன்றைய உலகம் எல்லைகளைத் தாண்டி இணைந்து செயல்படும் இணைய தேசமாக மாறியுள்ளது. பொழுதுபோக்குக்காக பலர் சமூகவலைதளங்களைப் பயன்படுத்துகிறார்கள். சிலர் அதை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி பொருளீட்டுகிறார்கள்.

தனிப்பட்ட முயற்சியால் இணையத்தை கருவியாகக் கொண்டு உணவு வகைகள், குரோஷோ கலைகளை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார், மகாலட்சுமி (எ) செல்வி. அண்மையில் தமிழகத்துக்கு வந்த அவரிடம் பேசியதிலிருந்து:

இலங்கை நெடுந்தீவு மேற்கு முதல் வட்டாரம் தான் எனது பூர்வீகம். கிளிநொச்சி மாவட்டத்தில் தையற்கலை, சமையல் கலை எனப் பலவற்றைக் கற்றுக் கொண்டேன். இதன் பின், உள்நாட்டில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக கரூர் மாவட்டத்துக்கு புலம்பெயர்ந்தோம். இங்கே வசிக்கும் போது, தையல் கலை எனக்குக் கைகொடுத்தது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் போர்வை, கிச்சனுக்குத் தேவையான துணிகளை மொத்தமாக வாங்கி, அதற்கு தையல் செய்து கொடுப்போம்.

அதன் பின், பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றுவிட்டேன். அங்கே காலநிலை, மொழி, பண்பாடு ஆகியவற்றை உடனே புரிந்து கொள்ளமுடியவில்லை. ஆனால், நாளடைவில் சரியாகிவிட்டது. பின்னர் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்தேன்.

பிரான்ஸில் இலங்கை உணவு வகைகள் கிடைத்தாலும், நமக்குத் தேவையான சில உணவுகள் கிடைப்பது அரிது. அதனால் நாம் ஏன் இணையத்தில் உணவு வகைகள், கற்றுக் கொண்ட குரோஷே கலையை மக்களுக்குக் கொண்டு சேர்க்கக் கூடாது என்று நினைத்தேன்.

குரோஷே என்ற பெயர் பிரெஞ்சிலிருந்து எடுக்கப்பட்டது. அதற்கு சின்ன கொக்கி என்று பொருள். இக்கலை ஐரோப்பாவில் தான் முதலில் தோன்றியது. இதைக் கொண்டு ஆடைகள் மட்டுமல்லாமல் விதவிதமான பொம்மைகள், பூக்கள், தொப்பிகள், ஸ்வெட்டர்கள், சாக்ஸ், போர்வைகள், பை, பர்ஸ், மேஜை விரிப்புகள், தலையணைகள் என்று நம் கற்பனைக்கு ஏற்றவாறு விதவிதமான பொருள்களை தயார் செய்யலாம்.

கரோனா ஊரடங்கு காலத்தில் இதனை செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால், அதற்கான மூலதனப் பொருள்கள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

தவிர, எதிர்பாராதவிதமாக காலில் ஒரு பிரச்னை ஏற்பட்டது. வேலைக்குச் செல்ல முடியாத சூழல் உருவானது. இதற்கு மாற்று வழியாக 2025ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி ஏபிஜே அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு சீலன் செல்வி கலை இல்லம்' என்ற ஒரு யூடியூப் சேனல் தொடங்கினேன்.

இதில் அப்பம், சொதி, சம்பல், புட்டு, இடியாப்பம், கொத்து பரோட்டா, தக்காளி சாதம், மினி ரோஸ்ட், இலங்கை அச்சுப் பான், ஒடியல் மாவு புட்டு, குழந்தை ரஸ்க், பனங்கிழங்கு ஒடியல் உள்ளிட்ட வகைகள் ஆரோக்கியமான குழந்தைகளுக்கான பிஸ்கட், 15 வகையான சிறு தானிய வகைகள் போன்ற சமையல் சார்ந்த காணொலிகளை வெளியிட்டேன். குரோஷே சார்ந்தும் சில காணொலிகளையும் வெளியிட்டேன். கைப்பேசியில் தொடர்பு கொண்டு சமையல், குரோஷே குறித்து சந்தேகம் கேட்பவர்களுக்கு விளக்கம் சொல்கிறேன்.

யூடியூப் என்னுடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் குறைந்த பார்வையாளர்கள் இருந்தாலும், என்னுடைய எளிய விளக்க முறையும், பாரம்பரிய சுவையைக் காப்பாற்றும் திறனும் பலரை ஈர்த்தது.

இதன் மூலம் இங்குள்ள தமிழ்க் குழந்தைகள் தங்கள் வேர்களை அறியும் வாய்ப்பும் கிடைக்கிறது. வீட்டிலிருந்தபடியே வருமானம் ஈட்ட விரும்பும் பெண்களுக்கு இது ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது. கல்லூரிப் பெண்கள் முதல் குடும்பத் தலைவிகள் வரை யாராக இருந்தாலும் தனக்குள் இருக்கும் திறனை வெளியில் கொண்டு வரவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்' என்கிறார் மகாலட்சுமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.