பேராசிரியர் முத்தொழிலன் இராதாகிருஷ்ணன்
தேர்தல் நடத்துவதில் இவ்வுலகுக்கே முதன்மையானவர்கள் என்பதை உத்தரமேரூர் கல்வெட்டிலிருந்து அறிந்து கொள்ள முடியும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, சோழர்கள் தேர்தல் விதிமுறைகளைக் கொண்டு தேர்தல் நடத்திய பெருமை நமக்கு உண்டு என்றால் மிகையாகாது.
அந்தக் காலத்தில் தேர்தலில் நிற்க ஒருவர் தனது வரியை கிராமத்துக்கு முறையாகச் செலுத்தியவராகவும், வேதம் அறிந்த வித்தகராகவும், சுமார் 35 வயது முதல் 70 வயது வரை உள்ளவராகவும் இருக்க வேண்டும். மிக முக்கியமாக, நன்னடத்தை மற்றும் நேர்மையானவராக இருந்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதிமுறைகளை வகுத்து, குடவோலை முறையில் தலைவரைத் தேர்ந்தெடுத்து கிராமங்கள்தோறும் பல குழுக்களை அமைத்து நிர்வாகம் செய்தோம். ஆனால், இன்று பணம் படைத்தவரும், மத, ஜாதிய கட்டமைப்பின் தலைவர்களும், திரைப்படங்களின் மூலம் கிடைத்த புகழை அரசியலுக்குப் பயன்படுத்துவோரின் தாக்கங்கள் நமது தேர்தலில் எதிரொலிக்கின்றன. ஆனால், ஒவ்வொரு தேர்தலுக்கும் அனைத்துக் கட்சிகளும் வெளியிடும் தேர்தல் அறிக்கை என்பது மிக முக்கியமானது.
இந்த தேர்தல் அறிக்கைகள் பெரும்பாலும் இலவச அறிவிப்புகளை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படத் தொடங்கிவிட்டன. உலகில் முதல்முறையாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேர்தல் அறிக்கையானது காரல் மார்க்ஸ் மற்றும் ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் ஆகியோரால் 1848-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை விளக்கியதுடன் தொழிலாளர் நலன், சமத்துவம், தரமான கல்வி போன்றவற்றை எடுத்துரைத்தது.
சொல்லப்போனால், இந்தத் தேர்தல் அறிக்கை 20-ஆம் நூற்றாண்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் 1951, 1952-இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை ஜவாஹர்லால் நேரு வெளியிட்டார். நமது நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் துறை வளர்ச்சி, விவசாய மேம்பாடு, வேலைவாய்ப்பை உருவாக்குதல், ஏழ்மையை அகற்றுதல், இலவச மருத்துவம் மற்றும் கல்விக்கான உத்தரவாதம், தேசிய ஒருமைப்பாட்டுக்கான முக்கியத்துவம் குறித்து அது பெரிதும் பேசியது.
இதை பிற்காலத்தில் தனது ஐந்தாண்டு திட்டங்களின் மூலம் ஜவாஹர்லால் நேரு செயல்படுத்தத் தொடங்கினார். ஆனால், இன்றுவரை நாம் அதை முழுமையாக அடையவில்லை என்பதே உண்மை. தமிழ்நாட்டில் 1957-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் தேர்தல் அறிக்கை வெளியானது. இந்த தேர்தல் அறிக்கைதான் மாநில சுயாட்சி, தமிழ் மொழிக்கான முக்கியத்துவம், சமூக நீதி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கான கல்வி உள்ளிட்டவை குறித்துப் பேசியது. பிறகு, அறிஞர் அண்ணா கொண்டுவந்த 1967-ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கை மக்களிடம் நேரடியாகச் சென்றது.
அதாவது, அந்தத் தேர்தல் அறிக்கையில்தான் 'ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி' என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் அறிவித்தார். இது அன்றைய காலகட்டத்தில் ஏழை மக்களை நேரடியாக கவர்ந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்தியது. 1982-இல் எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத் திட்டம் இன்றளவும் பேசப்படுவதோடு மட்டுமல்லாமல், அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்துடன் விரிவுபடுத்தி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
2006-ஆம் ஆண்டு தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம் பேசுபொருளானது. தொடர்ந்து வந்த தேர்தலில் ஜெயலலிதா இலவச மடிக் கணினி, மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் என வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்தார். பிறகு வெற்றி பெற்று அதைச் செயல்படுத்தவும் தொடங்கினார்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பேருந்து பயணச்சீட்டு, பள்ளிக்குச் செல்ல சைக்கிள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் போன்றவை பெரும் வரவேற்பு பெற்று இன்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது என்றால் மிகையாகாது.
தமிழ்நாட்டில் இத்தகைய இலவச திட்டங்களை குறைகூறும் தேசிய கட்சிகள், தாங்கள் வெற்றி பெறும் சூழ்நிலையில் இருக்கும் மாநிலங்களில் இதைச் செயல்படுத்த தொடங்கி விட்டன. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களும் மக்களுக்கு நேரடியாகப் பணத்தைச் செலுத்தி தங்களுக்கான வாக்குகளை அறுவடை செய்ய ஆட்சியில் உள்ள கட்சிகள் செயல்படுகின்றன; தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் பண வாக்குறுதியை அளிக்கத் தவறுவது இல்லை.
தனியாரிடம் கல்வியையும் மருத்துவத்தையும் அளித்துவிட்டு மாதம் ஏதாவது ஒரு வகையில் பணத்தை வழங்கியும், தேர்தல் வரும் ஆண்டில் பொங்கலுக்கு பணத்தை வழங்குவதும் சரியா என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும். மக்கள்தொகை அதிகம் கொண்ட நமது நாட்டில் பின்தங்கியவர்களை இலவசமோ, சலுகையோ வழங்கி அவர்களை சமத்துவப்படுத்துவது நமது அரசுகளின் தலையாய கடமை. அதை பணத்தை மட்டுமே வழங்கி செயல்படுத்த முடியுமா அல்லது சிறந்த கல்வி, மருத்துவத்தை இலவசமாக வழங்கி விவசாயம், தொழில் வளர்ச்சிக்கான சிறந்த கட்டமைப்பை உருவாக்கி நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமா எனச் சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

200 யூனிட் இலவச மின்சாரம், மீனவா்களுக்கு வீடு, அனைத்துக் குடும்பங்களுக்கும் மருத்துவக் காப்பீடு: தவெக தோ்தல் அறிக்கை வெளியீடு

திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல... காமெடியன்: அன்புமணி
கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 நிறைவேற்றம்: கனிமொழி
தேர்தல்கால கோரிக்கைகள்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


