சின்னதாய் ஓர் அரண்மனை

கடைசியாகக் கிளம்பிய கேட்டரிங் ஆள்கள் நால்வரும், 'வரட்டுங்களா ஸார்...' என்று தயங்கி நின்றதில் எனக்கொரு செய்தி இருந்தது.
சின்னதாய் ஓர் அரண்மனை
Updated on
4 min read

கடைசியாகக் கிளம்பிய கேட்டரிங் ஆள்கள் நால்வரும், 'வரட்டுங்களா ஸார்...' என்று தயங்கி நின்றதில் எனக்கொரு செய்தி இருந்தது. புரிந்துகொண்ட நான், பர்ஸை திறந்து எடுத்துக் கொடுத்த இருநூறு ரூபாயைப் பெற்றுக் கொண்டு சிரித்தபடி, கேட்டைத் திறந்து கொண்டு வாசலில் இறங்கினர். கேட்டின் உள்புறம் தாளிட்டுக் கொண்டு உள்ளே வந்தேன்.

'அப்பா, டீவி இல்லாமப் போரடிக்குதுப்பா! இப்பவே கிளம்பி நம்ம வீட்டுக்குப் போகலாம்பா!' என்று மகள்கள் குரல் எழுப்பினார்கள்.

'சும்மா இருங்கடீ, புது வீட்டுக்கு வந்திருக்கோம். இன்னிக்கு நைட்டு நாமெல்லாம் இங்கதான் தூங்கணும்' என்று பெண்கள் சுஷ்மா, ரேஷ்மா இருவரையும் அதட்டினாள் ரேணுகா.

சுஷ்மா ஒன்பது வயசு, ரேஷ்மா ஏழு வயசு. புது வீட்டுக்குப் போகப் போகிறோம் என்கின்ற உற்சாகம் அவர்களிடம் வற்றிவிட்டது. ஃபேன், ஏ.சி., கட்டில் இல்லாமல், டி.வி. பார்க்காமல் இன்றைய தினத்தை ஓட்ட வேண்டும் என்ற திகில் அவர்களை ஆட்கொண்டுவிட்டது.

அன்றாடம் ஹோம் ஒர்க்கை முடித்த கையோடு (ரேணுகாவின் மூடுக்குத் தகுந்தபடி) டிபனோ, சாதமோ இலையில் விழுவதைச் சாப்பிட்டுவிட்டு கார்ட்டூன் பார்த்துக் கொண்டும் ஒருவருக்கொருவர் செல்லமாக வம்புச் சண்டை வளர்த்துக் கொண்டும் இருவரும் தூங்கிவிடுவது வழக்கம்.

'பாருங்க டாடீ, இன்னிக்கு இங்கேதான் தூங்கணுமாம். அப்போ டின்னர்...?' என்று என்னிடம் வந்த பெண்களின் முதுகில் செல்லமாகத் தட்டியபடி, 'குட்டிகளுக்கு இன்னிக்கு நைட் என்ன வேணும், கீ ரோஸ்ட்டா, பாவ் பாஜியா சொல்லுங்கடா... இப்பவே ஸ்விக்கில ஆர்டர் பண்ணிடலாம்' என்று நான் சொல்லவும், பாய்ந்துகொண்டு வந்தாள் ரேணுகா

'இப்ப எதுக்குங்க ஸ்விக்கி அது இதுன்னுட்டு. மதியம் லஞ்சுக்கு கேட்டரிங்காரங்க கொண்டுவந்து வெச்ச பிரிஞ்சு, தயிர் சாதமே நிறைய மீந்திருக்குங்க...'

குழந்தைகளின் முகம் தொங்கிப் போனது.

'அதையெல்லாம் நாம ரெண்டு பேரும் சாப்பிட்டுக்கலாமே, ரேணு. பாவம் குழந்தைங்க வேற ஐட்டம் சாப்பிட ஆசைப்படுது...' என்ற என் சமாதானம் ரேணுகாவை அமைதிப்படுத்தியதாகத் தெரியவில்லை.

'எப்படியோ போங்க. இப்படியே செலவழிச்சுக்கிட்டிருந்தா நீங்க வாங்கின வீட்டு லோனைக் கட்டின மாதிரிதான்...'

'அட என்ன ரேணு, இருநூறு ரூபாய்க்கு ஸ்விக்கியில டிஃபன் வரவழைச்சா ஹவுஸிங் லோன் கட்ட முடியாமப் போயிடுமா?'

'இப்பிடியே இருநூறு இருநூறாப் போய்க்கிட்டே இருந்தா அப்புறமா வீட்டு லோன் கட்டுறதுக்குன்னு தனியா ஒரு லோன் வாங்க வேண்டியதுதான்'

'அம்மா தாயே, ஆளை விடு, நாங்க மீந்து போன பிரிஞ்சு சாதத்தையே சாப்பிடுறோம்...'

ஒருவழியாய் அமைதியான ரேணுகா, கேட்டரிங் காரர்கள் வைத்துவிட்டுச் சென்ற பாத்திரங்களை சபீனா போட்டுக் கழுவ ஆரம்பித்தாள்.

'ஏம்மா, நம்ம வேலைக்காரி புஷ்பாவை வரச் சொல்லியிருக்கலாமே?'

'காலையிலேயே ஃபங்ஷனுக்கு ஒரு நடை வந்துட்டுப் போயிட்டா. இப்போ பாத்திரம் கழுவ வரச் சொன்னா எக்ஸ்ட்ராவா நூறு ரூபாயும் ஆட்டோ சார்ஜும் கேட்பாள். அப்புறம் இ.எம்.ஐ. கட்ட காசில்லாமல் திண்டாட வேண்டியதுதான்.'

'எதுக்கெடுத்தாலும் இ.எம்.ஐ.லதான் போய் நிக்கறே ரேணு. உன்னைத் திருத்தவே முடியாது. சரி சரி. சீக்கிரமா வந்து சாப்பிடு...' என்று சொல்லிவிட்டு ஆறிப்போன பிரிஞ்சு சாதத்தை இலையில் போட்டுக் கொண்டு தின்ன முடியாமல் தின்னத் தொடங்கினேன். மீந்து போயிருந்த நாலைந்து அப்பளங்கள் நனைந்த கர்ச்சீப்புகள் போல வளைந்து நெளிந்து வளர்ந்திருந்தன.

உலக வாழ்க்கையே வெறுத்துப் போனவனாக தொட்டுக் கொள்ள எதுவுமில்லாமல் அந்த ஆறிப் போன பிரிஞ்சு சாதத்தை ஒருமாதிரி சாப்பிட்டு முடித்தேன்.

குழந்தைகள் ரேஷ்மா, சுஷ்மா இரண்டும் 'போங்க டாடி...' என்று சொல்லி ஆளுக்கொரு வாழைப்பழத்தைத் தின்றுவிட்டு ஜமக்காளத்தில் படுத்துக்கொண்டன.

ஒரே கோட்டிங் அடித்துள்ள டிஸ்டம்பரின் நெடி, பரிச்சயமற்ற இரவு நேர சப்தங்கள், வழக்கத்தைவிடக் கூடுதலான கொசுக்கள் எல்லாம் சேர்ந்து கொள்ள, குழந்தைகள் இரண்டும் தூக்கம் வராமல் தவித்தன.

எதற்கும் இருக்கட்டும் என்று கையோடு கொண்டு வந்த பழைய டேபிள் ஃபேன் தனக்குத் தானே விசிறிக் கொண்டிருக்கிறது. இன்றைய இரவு யாரும் நிம்மதியாகத் தூங்க முடியாது என்று தெரிந்து போனது.

கிருகப்பிரவேசத்தன்று இரவு குடும்பத்துடன் புது வீட்டில்தான் தூங்க வேண்டும் என்ற சாங்கியத்தைக் கண்டுபிடித்த பிரகஸ்பதியை மனசுக்குள் நொந்து கொண்டேன்.

எல்லா நடுத்தர குடும்பத் தலைவர்களுக்கும் நாற்பது வயதுக்குள் வருகிற ஆசை என்னையும் விடவில்லை. சொந்தமாக ஒரு வீடு.

ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அரை கிரவுண்டுக்கும் குறைவாக முன் எப்போதோ வாங்கிப் போட்ட இடத்தில், ஒரு வீடு கட்டினால் என்ன என்ற குருட்டு யோசனை என்னை விடாமல் தொந்தரவு செய்ய, அலுவலகத்தில் வீடு கட்டும் லோனுக்கு விண்ணப்பித்தேன். அடுக்குமாடி வீடுகள், வில்லாக்கள் இவையெல்லாம் அதிகமாகப் புழக்கத்துக்கு வராத எங்களின் பேரூராட்சியின் எல்லையில் ஒரு சிற்றடக்கமான காம்பவுண்டுச் சுவருக்குள் ஸ்கூட்டர் நிறுத்த இடம் விட்டு (நானெல்லாம் கார் வாங்குவதாவது) ஒரு ஹால், இரண்டு பெட்ரூம், ரேணுகாவின் உயரத்துக்கு ஏற்றபடி குறைந்த உயரத்தில் சமையல் மேடையுடன் கூடிய கச்சிதமானதொரு கிட்சன், டைனிங் டேபிள் போடுவதற்கும் கொஞ்சம் இடம், இரண்டு பாத்ரூம், மொட்டை மாடி. அவ்வளவே நான் கட்ட விரும்பிய எனது அரண்மனை.

எங்கள் ஹெட் ஆபீஸிலிருந்து வந்த தகவலோ, 'உனக்கு ஸாங்ஷன் ஆகக் கூடிய தொகைக்கு உன்னால் கடைக்கால் போட்டு காம்பவுண்டு சுவர் கூடக் கட்ட முடியாது' என்று சொல்லிச் சிரித்தது.

ஆபீஸில் லோன் வாங்கும் ஆசையைக் கைவிட்டுத் தனியார் பாங்க் ஒன்றில் விண்ணப்பித்துக் கூடுதலாகக் கிடைத்த சில லட்சங்கள் கொடுத்த தெம்பில் வீடு கட்டத் தொடங்கி இதோ கிருகப்பிரவேசம் வரையில் வந்தாயிற்று.

இடைப்பட்ட காலத்தில் கட்டுமானப் பொருள்களின் விலைகளும், ஆண்களுக்கான கூலியும் தாறுமாறாக உயர்ந்ததில் புது வீட்டுக்கு டைல்ஸ் இணையாகப் போடாமல் சிமெண்டுத் தரையே போடுவதென்று முடிவெடுக்க வேண்டியதாயிற்று. பெயிண்டிங் வேலை அடுத்த வருஷத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

மிச்சம் மீதி இருக்கின்ற எலக்ட்ரிகல் வேலைகளை மட்டும் ஒரு மாதத்துக்குள் முடித்துக் கொண்டு வாடகை வீட்டை காலி செய்து கொண்டு இங்கே குடியேற வேண்டும்.

கிருகப்பிரவேசப் பத்திரிகையைப் பார்த்த கையோடு அந்த ஹவுஸ் ஓனர் வேறொரு பார்ட்டியைப் பேசி முடித்து அட்வான்ஸூம் வாங்கிவிட்டிருக்கிறார். வாடகையும் இரண்டாயிரம் அதிகமாம்.

என்னைப் போன்றவர்களுக்கு இ.எம்.ஐ. கட்ட வேண்டும் என்ற கவலை. ஹவுஸ் ஓனர்களுக்கோ நிற்காமல் வாடகை வரவேண்டும் என்ற கவலை.

இதுதான் உலகம்.

சொல்ல மறந்துவிட்டேனே.

இந்தப் புது வீட்டின் தச்சு வேலைக்கான கூலியையும் கிருகப்பிரவேசச் செலவுகளையும் ஈடுகட்ட ரேணுகாவின் செயினும் தோடுகளும்தான் கைகொடுத்திருக்கின்றன. அவற்றை எப்படி மீட்பது என்பதை நினைக்க நினைக்க ஒருபக்கம் மலைப்பாக இருக்கிறது.

வீடு கட்ட வேண்டும் என்ற எனது ஐடியாவைக் கேட்டுக் கொஞ்சமாகச் சந்தோஷப்பட்ட ரேணுகா, அடுத்த சில நாட்களில் 'ஏங்க, மாதாமாதம் வீட்டுக் கடன் தவணை கட்டிக்கிட்டிருந்தா பொண்ணுங்க படிப்புக்கும் கல்யாணத்துக்கும் என்ன பண்றதுங்க?'என்று அவ்வப்போது கேட்டு எனக்கு டென்ஷனை ஏற்ற ஆரம்பித்தாள். சென்ற மாதம் ஒருமுறை அதே பாடலை அவள் பாடியதுக்கு நான் ரொம்பவும் டென்ஷனாகி, 'என்ன செய்யறது ரேணுகா. படிச்சு வேலைக்குப் போய் சம்பாதிக்கிற ஒரு பொண்ணைக் கல்யாணம் செஞ்சிருந்தால், எவ்வளவோ பெரிய செலவென்றாலும் கவலைப்படாமல் இருக்கலாம். எங்கப்பாதான் எனக்குத் தன்னோட தங்கச்சி மகளைத்தான் கட்டிவெப்பேன்னு அடம் பிடிச்சார்' என்று சொல்லவும் ஒரே ரகளையாகிவிட்டது. ரேணுகா சமாதானமாகிப் பழையபடி என்னிடம் பேசுவதற்கு நாலைந்து நாளானது.

இன்றைய தினம் கிருகப்பிரவேசம் செய்து ஏராளமான உறவுக்காரர்களும் தெரிந்தவர்களும் வந்திருந்து 'வீடு சூப்பரா இருக்கு' என்று சொல்லிச் சென்றதில் மனநிறைவு கண்டது போல் தெரிந்த ரேணுகா மாலையில் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டாள்.

எதற்கெடுத்தாலும் 'இ.எம்.ஐ. எப்படிக் கட்டுறது?' என்று கேட்கும் ரேணுகாவைச் சமாளிப்பதற்காகவேனும் இந்த பேங்க் லோன் சீக்கிரம் முடிய வேண்டும்.

அதெல்லாம் ஒன்றும் 'சூ மந்திரக் காளி' வித்தை இல்லை என்று இவள் புரிந்து கொண்டால், அதுவே எனக்கு நிம்மதி. அடுத்த மாதத்திலிருந்து மாதா

மாதம் சுளையாக நாற்பதாயிரம் ரூபாய் இ. எம். ஐ. கட்ட வேண்டும்.

என் சம்பளத்தில் இ. எம். ஐ. போக மீதி என்ன நிற்கும் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இருக்கிறது. டிரான்ஸ்ஃபர் என்று என்னை வெளியூருக்கு அனுப்பாத வரையில் ஓரளவு சமாளிக்கலாம்.

சே... இந்த ரேணுகாவுடன் பேசிப் பேசி என் மனசு எப்பொழுதும் இந்த இ. எம். ஐ. பற்றியே நினைக்க ஆரம்பித்துவிட்டது. எது எப்படியானால் என்ன? என் ரேணுகா மிகவும் கெட்டிக்காரி. எல்லாம் அவள் பார்த்துக்கொள்ளுவாள். எப்பொழுதும் போல் குழந்தைகள் காஸ்ட்லியான விஷயங்களை இனிக் கேட்டால் நான் ஒருவழி ஆகிவிடுவேன். அதெல்லாம் ரேணுகா அவர்களை வழிக்குக் கொண்டு வந்து விடுவாள்.

அடடா... முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டேனே... இரவு மணி பத்தாகப் போகிறது. ரேணுகா இன்னும் சாப்பிடவில்லையே...

சட்டென்று எழுந்து இன்னும் முழுவதுமாகப் பரிச்சயமாகாத புதுச் சமையலறையில் நுழைந்தேன்.

மிச்சம் மீதிக் கரண்டிகளைக் கழுவிக்கொண்டிருந்தவளைப் பார்த்து, 'நீ இன்னும் சாப்பிடலையே ரேணு' என்றேன் நிஜமான அக்கறையுடன்.

'யப்பாடி, இப்பவாச்சும் ஐயாவுக்கு என்னோட நினைப்பு வந்ததே...' என்று கையைக் கழுவிக் கொண்டு சாப்பிட வந்தாள் ரேணு.

பிரிஞ்சியும் தயிர் சாதமும் ஆறிப்போய் ஏறக்குறைய ஐஸ் கட்டிகளாகவே மாறியிருந்தன. அதிலும் தயிர் சாதம் புளிப்பின் உச்சம். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுபவளல்ல என் ரேணு.

இரண்டு கவளம் வயிற்றுக்குள் போனபின்பு கொஞ்சம் நிதானத்திற்கு வந்தாள் ரேணுகா.

ஏ.சி., ஃபேன், கட்டில், மெத்தை, கொசுவலை எதுவுமில்லாம ரெண்டும் தூங்குறதைப் பார்க்கவே பாவமா இருக்குதுங்க.

கிருகப்பிரவேசத்துக்குத் தனது பிறந்த வீட்டின் சீர்வரிசையாக வந்த பட்டுப் புடவையைத் தயக்கம் ஏதுமின்றி விரித்துக் குழந்தைகள் இருவருக்கும் போர்த்தி விட்டாள்.

'கவலைப்படாதே ரேணு. இன்னும் ரெண்டு வருஷத்துக்குள்ளே எனக்கு சூப்பர்வைசர் புரோமோஷன் கிடைச்சுடும். சம்பளமும் கொஞ்சம் ஜாஸ்தியாகும். எப்படியும் சமாளிச்சுடுவோம்' என்றேன்.

'அட என்னங்க, எப்பவும் வீட்டு லோன் கவலைதானா? சொந்தமா புது வீடு கட்டி வந்திருக்கோம். எதைப் பத்தியும் யோசிக்காமல் நிம்மதியாய்த்தான் தூங்குவோமே...' என்று சொல்லி, குழந்தைகளுக்கு அந்தப் பக்கம் என் கை படாத தூரத்தில் ஒரு பழைய டவலை விரித்துப் படுத்துக் கொண்டு மறு விநாடி தூங்கிப் போனாள்.

ரேணுகா இருக்கிறாள். எதையும் சமாளித்து விடலாம்.

நைட் லாம்ப் வெளிச்சத்தில் தனது கழுத்திலும் கைகளிலும் பளிச்சிட்ட கவரிங் நகைகளுடன் ரேணுகாவின் அழகு இன்னமும் கூடிவிட்டது என்று நினைத்தபடியே தூங்கிப் போனேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com