தமிழ்முறைத் திருமணம்...

தமிழ் முறைப்படி திருமணங்களையும், குடமுழுக்குகளையும் நடத்திவரும் ஆறு.மெ.மெய்யாண்டவர், ஆசிரியராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தமிழ்முறைத் திருமணம்...
Updated on
1 min read

பொ.ஜெயச்சந்திரன்

தமிழ் முறைப்படி திருமணங்களையும், குடமுழுக்குகளையும் நடத்திவரும் ஆறு.மெ.மெய்யாண்டவர், ஆசிரியராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சொற்பொழிவாளர், நூலாசிரியர், கவிஞர் எனப் பன்முகத் தன்மையோடு செயல்பட்டு வரும் இவர், பாரதியார் தமிழ்க் கழகத் தலைவர் எனப் பல்வேறு அமைப்புகளில் தமிழ்ச் சேவையாற்றி வருகிறார்.

சிவகங்கை மாவட்டம், வேப்பங்குளம் கிராமத்தில் பிறந்து, தற்போது காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் வசித்துவரும் அவரிடம் பேசியபோது:

'காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் பல போட்டிகளையும், நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்கு சன்மார்க்க அன்பர்கள் உதவிகளைச் செய்கின்றனர்.

சமரச சன்மார்க்க வள்ளலார் கொள்கைகளான கொல்லாமையையும், பசியாற்றுவித்தலையும் (அன்னதானம்) சாதி, சமய வேறுபாடுகளை நீக்கும் வகையில் நடத்துகிறோம். நாள்தோறும் காலை 8 மணிக்கு சத்துணவுக் கஞ்சி வழங்குகிறோம். மாதம்தோறும் பூசத்தன்று அகவல் பாராயணம், அன்னதானத்தை விடாமல் நடத்தி வருகிறோம். விழா நாள்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாதம்தோறும் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புச் சொற்பொழிவு நடத்தி வருகிறோம்.

வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5-இல் மாணவர்களுக்கு திருவருட்பா இசை, ஒப்புவித்தல், பேச்சு, கட்டுரைப் போட்டிகளை தமிழ்ஆர்வலர்கள் முத்துராமலிங்கம், சண்முகவேல், ஜெயேந்திரன் ஆகியோர் ஒத்துழைப்புடன் நடத்தி வருகிறோம்.

தமிழ் முறைத் திருமணத்தையும், தமிழ்வழிக் குடமுழுக்குகளையும் பல ஆண்டுகளாக நான் நடத்தி வருவதற்கு ஒதுவார்கள் வே.முத்தையா, தமிழ்ப் புலவர் திருப்பதி வாசன், வினோத் குமார், முத்துக்குமார் உள்ளிட்டோர் உறுதுணையாக இருக்கின்றனர்.

ஐந்து நூல்களை எழுதியிருக்கிறேன்.

இளங்கோவடிகள், டாக்டர் அ.சிதம்பரநாதன், திருச்சிற்றம்பலக் கவிராயர் ஆகிய தலைப்புகளில் எழுதிய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 1986 முதல் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

திருக்கயிலாயப் பரம்பரைத் திருவாவடுதுறை ஆதினம் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மையத்தின் 'சித்தாந்த ரத்தினம்', 'சிவநெறிச் செல்வர்' உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ளேன்.

1919-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் நாளன்று காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்துக்கு மகாகவி பாரதியார் வருகை தந்ததை நினைவுகூரும் வகையில், 2012-ஆம் ஆண்டில் காரைக்குடி வீரகண்ட விநாயகர் கோயிலில் பொற்கிழிக் கவிஞர் கா.நாகப்பன் தலைமையில் பாரதி தமிழ்க் கழகம் தொடங்கப்பட்டது. இதன் தலைவராக 2017-ஆம் ஆண்டில் பொறுப்பேற்றுள்ளேன்.

இந்த அமைப்பின் சார்பில் மொழியுணர்வையும், நாட்டுப்பற்றையும் மாணவர்களிடம் உருவாக்கத் தொடர் நிகழ்ச்சிகளை நடத்திவருவதற்கு நல்லாசிரியர்

மெ.செயம்கொண்டான், திருப்பத்தூர் வாசகர் வட்டத் தலைவர் லி.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் உறுதுணையாக இருக்கின்றனர்' என்கிறார் ஆறு.மெ.மெய்யாண்டவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com