கண்டது
(சென்னை சூளைமேட்டில் லாரி ஒன்றில் கண்ட வாசகம்...)
'நமக்காக எங்குச் சென்றாலும் 250 கிராம் எடையுள்ள கைப்பேசியைச் சுமந்து செல்கிறோம்.... இந்த மண்ணுக்காக 30 கிராம் எடையுள்ள துணிப்பையைச் சுமந்து செல்லலாமே!'
-செல்.பச்சமுத்து, சென்னை-30.
(கோவை, பீளமேடு மேம்பாலத்தின் கீழ் உள்ள உணவகத்தின் பெயர்...)
'நமக்கு சோறுதாங்க முக்கியம்!'
-ம.தேவகி, கோவை.
(மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகேயுள்ள கிராமத்தின் பெயர்...)
'நட்சத்திரமாலை.'
-ம.ஸ்ரீகிருஷ்ணா, மேலமங்கைநல்லூர்.
கேட்டது
(விழுப்புரம் அரசு நூலகம் ஒன்றில் இருவர் பேசியது...)
'பத்துநாளைக்கு என் மனைவி ஊருக்குப் போறா...'
'சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தானே... அதை ஏன் சோகமா சொல்றே?'
'போகும்போது எனக்கு பத்து நாள்களுக்குத் தேவையான சாப்பாட்டை பிரிட்ஜில் எடுத்து வச்சுட்டுப் போறாளாம்!'
-கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.
(ஒரு வீட்டில் கணவனும் மனைவியும்...)
'நம்ம பையனுக்குப் பார்த்திருக்கிற பொண்ணப் பத்தி நாலு இடத்துல விசாரிக்க வேண்டாமா?'
'எதுக்கு அலைச்சல்... அவங்க வீட்டு வேலைக்காரியை விசாரிச்சாப் போதும்... முழு விவரமும் கிடைச்சிடும்!'
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
(திருச்சி கடைவீதியில் இரு பெண்கள்...)
'இப்பெல்லாம் அடிக்கடி கடை
வீதிப் பக்கம் வர்றீயே?'
'தங்கம் விக்கிற விலையில வாங்கத்தான் முடியாது... அந்தக் கடைகளில் நகைகளைப் பார்த்துட்டாவது போகலாமில்லே...!'
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
யோசிக்கிறாங்கப்பா!
முன்னேற்றத்தின் இரு எதிரிகள்
சோர்ந்து போவதும் சார்ந்து இருப்பதும்!
-சிவம், திருவள்ளூர்.
மைக்ரோ கதை
தினமும் மகன் நவீனை பள்ளிக்கூடம் கொண்டு போய் விடுவது தாமோதரனின் வேலை. அதன் பின் அவர் அலுவலகம் செல்வார்.
அந்த வேலையைச் செய்வதால் ஓர் இடையூறு, அவர் அலுவலகம் போகத் தாமதமாகிவிடுகிறது.
அதே சமயம், அதில் ஒரு மகிழ்ச்சியும் இருந்தது. காரணம், அங்கே பணிபுரியும் டீச்சரிடம் பேசிவிட்டுத்தான் போவார்.
அன்று மகன் நவீனை பைக்கில் ஏறச் சொன்னபோது, மனைவி அமுதா தடுத்து, 'இனி நீங்க பையனை பள்ளிக்கூடத்துல விட வேண்டாம். நானே விட்டுக்கறேன்' என்றாள்.
அவரும் மறுப்பேதும் சொல்லாமல், அலுவலகத்துக்கு வண்டியைத் திருப்பினார்.
'நவீனை நீதான் பள்ளிக்கூடத்தில விடேன்' என்று நாம சொல்லியிருந்தால், கேட்க மாட்டாள். 'டீச்சரோட பல்லிளித்தபடி உன் கணவர் பேசுகிறார்' என்ற செய்தி அவள் காதில் விழுந்திருக்கிறது.
'எப்படியோ ... இனி அலுவலகத்துக்குச் சரியான நேரத்தில் சென்றுவிடலாம்' என நினைத்தபடி பைக்கை பறக்கவிட்டார்.
-வசீகரன், தேனாம்பேட்டை.
எஸ்எம்எஸ்
கடல் என்றால் அலையிருக்கவேண்டும்.
மனம் என்றால் அலைபாயாமல் இருக்கவேண்டும்.
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
அப்படீங்களா!
புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உதவியுடன் மாற்றி, சித்திரங்களாக (கேரிகாட்சர்) சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். முன்பு சிறிய 3டி பொம்மை வடிவில் புகைப்படங்களைப் பதிவிடும் 'நானோ பனானா' முறை இணைய பயன்பாட்டாளர்கள் மத்தியில் வேகமாக பரவியது. தற்போது, நாம் செய்யும் பணி, அதற்கு ஏற்பச் சூழலையும், உடனுள்ள பொருள்களையும் தேவைக்கேற்ப கார்ட்டூன் வடிவில் உருவாக்கும் கேரிகாட்சர் பயன்பாடு பெருமளவில் உபயோகப்படுத்தப்படுகிறது.
இது வழக்கமான கார்ட்டூன் புகைப்படங்களாக இல்லாமல் ஒருவரின் பணிச்சூழலை பழக்க வழக்கங்களுடன் சேர்த்து முகபாவங்களுடன் வித்தியாசமாக இருப்பதால் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
சாட் ஜிபிடியில் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்துவிட்டு, அந்தப் படத்தின் சூழல் எப்படி இருக்க வேண்டும் என்றோ, படத்துக்குள் என்னென்ன பொருள்கள் இருக்க வேண்டும் என்றோ தகவல்களை கட்டளையாக இட வேண்டும். இந்தக் கட்டளைகளை ஏற்று செயற்கை நுண்ணறிவு புகைப்படத்தில் உள்ளவரின் முகபாவங்கள், உணர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கார்ட்டூன் வடிவில் புகைப்படங்களை சில நிமிஷங்களில் வெளியிடுகிறது. இதற்கான புகைப்படங்களை வரையவோ, எடிட் செய்யவோ வேண்டாம்.
இந்த கேரிகாட்சர் புகைப்படத்தை சாட்ஜிபிடி, ஜெமினி இணையதளம் அல்லது ஆப்பிலும் உருவாக்க முடியும். இதற்காக நேர்த் திசையில் பார்க்கும் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம். அந்தப் படம் சிறந்த வெளிச்சத்துடனும், முகபாவம், பின்னுட்டம் தெளிவாகவும் இருக்க வேண்டும்.
சித்திரமாக மாற்றப்படும் இந்தப் புகைப்படத்தில் இருக்க வேண்டிய அம்சங்களைக் குறிப்பிட்டு அனுப்பினால் கேரிகாட்சர் படம் ஓரிரு நிமிஷங்களில் வெளியாகும். அந்தப் புகைப்படங்களை பலர் சமூக வலைதளங்களில் காட்சிப் படமாக (டிபி) வைப்பது வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.