இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

திருமண நாளில் பள்ளிக்கு பரிசு...

'என் திருமணத்தையொட்டி எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2026, 4:08 am IST

தமிழானவன்

'என் திருமணத்தையொட்டி எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு சில குழந்தைகள் பள்ளிக்கு அழுதுகொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு சறுக்கு மரம், ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை அமைத்துத் தந்தால், அவர்கள் பள்ளிக்கு மகிழ்ச்சியாகச் செல்வார்கள் என்று நினைத்தேன்.

அதற்கு எங்கள் ஊர் மதர் தெரசா அரசு தொடக்கப் பள்ளியைத் தேர்ந்தெடுத்தேன். நான் திருமணத்தை மிக எளிய முறையில் செய்து கொண்டு அன்றைய தினமே ரூ.1.30 லட்சம் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்களை அந்தப் பள்ளிக்கு அமைத்துக் கொடுத்துள்ளேன்' என்கிறார் புதுச்சேரி பத்துக்கண்ணு அருகில் உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாற்பது வயதான இலவச ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஆம்புலன்ஸ் மணி (எ) என்.மணிகண்டன்.

பொதுமக்களுக்கு அவசர ஊர்தியை இலவசமாக அனுப்பி வைத்துச் சேவையாற்றி வரும் அவர், காலதாமதமாகவே திருமணம் செய்திருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து:

'என்னுடைய தம்பி ஹரிராமன் 2007- ஆம் ஆண்டு நேரிட்ட விபத்தில் சிக்கி இறந்தார். அப்போது நான் என்ன பாடுபட்டேன் என்பதைச் சொல்லி மாளாது. அதனால் இலவசமாக அவசர ஊர்தியை அனுப்பி வைக்கும் எண்ணம் அப்போதே தோன்றிவிட்டது. உடனடியாக இந்தச் சேவையைத் தொடங்க முடியாவிட்டாலும், கடந்த 11 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் சேவை வழங்கி வருகிறேன்.

இப்போது என் வாழ்க்கையில் புதிய வரவாக ஒரு புதிய பெண் வந்திருக்கிறார். எங்கள் ஊருக்கு அருகில் உள்ள பக்கிரிப்பாளையம் திரெளபதியம்மன் குலதெய்வம் கோயிலில் எளிமையான முறையில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

தம்பி இறந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்கினேன். குட்டி யானை உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் வாங்கி விற்கும் வியாபாரமும் செய்து வருகிறேன். அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டு இலவசமாக பொதுமக்களுக்கு என் தம்பியின் நினைவாக ஆம்புலன்ஸ் சேவை அளித்து வருகிறேன்.

புதுச்சேரி இந்திரா காந்தி சிலை, பத்துக்கண்ணு, வில்லியனூர் ஆகிய பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மூன்று இடங்களில் எங்கள் ஆம்புலன்ஸ் நின்று கொண்டிருக்கும். அவசரத்துக்கு அழைக்கும் பொதுமக்களுக்கு எங்கள் சேவை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இதுவரை 6 ஆயிரம் உயிரைக் காப்பாற்றி இருக்கிறோம். 540 பிரசவங்களுக்கு உதவி செய்து இருக்கிறோம். இதற்காக 3 ஓட்டுநர்கள் எப்போதும் பணியில் இருப்பார்கள். இவர்களுக்கான ஊதியம், டீசல், பராமரிப்புச் செலவாக மாதம் ரூ.80 ஆயிரம் செலவாகிறது. எதையும் எதிர்பார்க்காமல் என் சொந்த செலவில் இருந்து செலவழிக்கிறேன்.

பிறப்பையும் இறப்பையும் ஒரு மனிதன் முடிவு செய்ய முடியாது. ஆனால், எப்படி வாழவேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும். இது போன்ற விளையாட்டுப் பொருள்களை சிறுவர்கள் புதுச்சேரி நகரத்தில்தான் பார்க்க முடியும். விளையாட முடியும். இனிமேல் கிராமப்புறத்தைச் சேர்ந்த இந்தப் பள்ளிக்கு வரும் சிறுவர்கள் நாள்தோறும் மகிழ்ச்சியோடு இதில் விளையாட முடியும். அவர்களின் உடல் வளர்ச்சிக்கு இந்த உபகரணங்கள் உதவியாக இருக்கும்' என்கிறார் ஆம்புலன்ஸ் மணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.