ரஜினி - கமல் இணையும் படம் படப்பிடிப்பு எப்போது?
தமிழ் சினிமாவின் ஜாம்பவான் கலைஞர்களான கமல்ஹாசன் - ரஜினிகாந்த் 47 வருடங்களுக்குப் பிறகு ரீயூனியன் ஆகும் புதிய படத்தின் புரொமோ விடியோ வைரலாகியுள்ளது.
நெல்சன் இயக்கவிருக்கும் இந்தப் படத்துக்கு ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்போது வெளியான கிளிம்ஸ் விடியோ சின்ன சாம்பிள்தான் என்றும், அதன் தொடர்ச்சி விடியோவை சில வார இடைவேளைக்குப் பின் வெளியிடவுள்ளனர் என்றும் தகவல்கள் வருகின்றன.
பிரமிக்க வைக்கவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது இருக்கும் என்பது குறித்த தகவல்கள் இல்லை. கமல் - ரஜினி இருவருக்குமே இப்போது கைவசம் பட ஒப்பந்தங்கள் இருக்கின்றன.
சட்டப் பேரவை தேர்தல் வருவதால் கமல் பிரசாரத்துக்குச் செல்லவிருக்கிறார். அதன் பின் 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பிலும், அதனை தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கும் செல்கிறார்.
ரஜினி 'ஜெயிலர்2'வை முடித்துக் கொடுத்துள்ளார். இப்போது அதன் பேட்ச் ஒர்க் வேலைகள் ஒரு பக்கம் நடந்துகொண்டு இருக்கின்றன. பேட்ச் ஒர்க்கில் அவரது பகுதிகள் எப்போது தேவைப்பட்டாலும் நடித்துக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்.
அவரைப் பொருத்தவரையில் ஒரு படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கும்போது அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகளையும், எதிர்பார்ப்புகளைத் தூண்டுவதையும் பாணியாக வைத்துள்ளார். 'வேட்டையன்' சமயத்தில்தான் 'கூலி'யின் அப்டேட் வெளியானது. அதைப்போல 'ஜெயிலர் 2'வில் இப்போது போல நெல்சன், அனிருத்தின் புரொமோ விடியோவும் வெளியானது.
ஏப்ரலில் 'டான்' சிபிசக்கரவர்த்தி இயக்கும் படத்துக்குச் செல்கிறார் ரஜினி. இப்படியாக, இந்தாண்டின் கடைசியிலோ அல்லது அடுத்தாண்டின் துவக்கத்திலோதான் கமல்ஹாசன் - ரஜினிகாந்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்துள்ள 'மை லார்ட்' படத்துக்கு ரசிகர்களிடம் பரவலான வரவேற்பு எழுந்துள்ளது.
இந்தப் படத்தின் வெற்றி குறித்து இயக்குநர் ராஜு முருகன் நன்றி தெரிவித்துப் பேசும் போது, 'இந்தப் படத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு, ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. இந்தப் படத்தில் வேலை பார்த்த அத்தனை பேருக்கும் என் மனப்பூர்வமான நன்றி. நான் சினிமாவுக்கு வந்ததிலிருந்து இன்று வரை, இந்த உலகம் ரொம்ப மாறியிருக்கிறது.
ஒரு படத்தை எழுதத் தொடங்கும் இடத்தில் ஒரு எழுத்தாளரின் வேலை ஆரம்பிக்கிறது. ஷூட்டிங் நேரத்தில் இயக்குநரின் வேலை வருகிறது. அதற்குப் பிறகு ரிலீஸ், போஸ்ட்-புரொடக்ஷன்ஸ் என்று தொடர்கிறது. ஆனால், இன்றைக்கு, படம் ரிலீஸான பிறகும் 'ப்ரமோஷன் வரைக்கும்' நிறைய விஷயங்களை நாமே கவனிக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகியிருக்கிறது.
ஒரு எழுத்துக்கு எவ்வளவு உழைப்போ, ஒரு படத்தை உருவாக்க எவ்வளவு உழைப்போ, அதே அளவு உழைப்பை இன்றைக்கு அந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கவும் கொடுக்க வேண்டியிருக்கிறது. நான் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளராக இருந்ததால், முன்பெல்லாம் ப்ரமோஷன், இன்டர்வியூஸ் இதிலெல்லாம் அதிக ஆர்வம் காட்டியதே இல்லை. ஆனால், இப்போது அது ஒரு பெரிய சவாலாக மாறியிருக்கிறது.
ஒரு படத்துக்கு எப்படி முழு மனசோடு வேலை செய்கிறோம்; அதே தீவிரத்தோடு ப்ரமோஷனுக்கும் வேலை பண்ண வேண்டிய ஒரு சூழல் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இது நல்லதா, கெட்டதா என்ற விவாதத்தைத் தாண்டி இந்த உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது என்பதையும், அதுக்கேற்ற மாதிரி நாமும் மாற வேண்டியிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.' என்றார்.
திருமண அறிவிப்பை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா!
நடிகர்கள் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா காதல் பற்றி அவர்கள் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை என்றாலும், அது ஊரறிந்த ரகசியம். கடந்த அக்டோபர் மாதம் சத்தமே இல்லாமல், ஹைதராபாத்தில் விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் இருவரின் நிச்சயதார்த்தமும் நடந்தது. கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி, இருவருக்கும் திருமணம் என்கிற செய்திகள் கசிந்தாலும், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தனர்.
இந்த நிலையில் தான், அண்மையில் இருவரும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவு செய்திருக்கிறார்கள். அதில், 'நாங்கள் எந்தத் திட்டம் செய்வதற்கு முன்பும்... நாங்கள் எங்களுக்காக எதைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பும் நீங்கள் எங்களுடன் இருந்திருக்கிறீர்கள்.
அதீத அன்புடன், நீங்கள் எங்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளீர்கள். நல்ல பெயரைத் தந்தீர்கள். அதனால், இன்று நிறைந்த மனதுடன், உங்கள் முன்னிலையில் நாங்கள் இணைகிறோம். உங்களுடைய அதீத அன்பால் எங்களைப் பற்றியிருப்பதற்கு நன்றி. எப்போதுமே நீங்கள் எங்களில் பாதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களது திருமணம் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் நடக்க உள்ளதாம். அதன் பின், திருமண வரவேற்பு மார்ச் 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணாவில் நடைபெறுகிறது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை



