கோலிவுட் ஸ்டூடியோ!

சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் 'சாவா'.
கங்கனா
கங்கனா
Updated on
2 min read

ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்த கங்கனா!

சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் 'சாவா'. லஷ்மன் உடேகர் இயக்கிய இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்திருந்தார். ராஷ்மிகா மந்தனா, சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தன. இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஏ.ஆர். ரஹ்மான் இதுதொடர்பாகப் பேசியிருக்கிறார்.

'ஒரு வரலாற்றுப் படத்துக்கு இசையமைக்கும் போது, அந்தக் காலகட்டத்தின் ஆன்மாவைச் சிதைக்காமல், அதே சமயம் இன்றைய தலைமுறைக்கும் புரியும் வகையில் இசையமைக்க வேண்டும். இந்தப் படத்தின் இசை என்பது வெறும் பாடல்கள் மட்டுமல்ல, அது சம்பாஜி மகாராஜின் வீரத்தையும் தியாகத்தையும் பிரதிபலிக்கும் ஒரு கருவி. அதை உணர்வுபூர்வமாக அணுகியிருந்தேன். விமர்சனங்கள் எப்போதும் வரும். அதுதான் கலைஞனைச் செதுக்கும். ஆனால், ஒரு படைப்பை முழுமையாகப் பார்த்த பிறகு அதன் பின்னணியைப் புரிந்துகொண்டால் அந்த இசையின் நோக்கம் புரியும்.

'சாவா' , பிரிவினையைப் பேசும் படம்தான். அப்படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், 'வீரத்தைக் காட்டுவது'தான் அப்படத்தின் மையக்கருவாக நான் பார்க்கிறேன். திரைப்படங்களால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறீர்களா? மக்களுக்கு உள்

மனசாட்சி என்று ஒன்று இருக்கிறது. அது எது உண்மை, எது சூழ்ச்சி என்பதை அறியும். கடந்த எட்டு ஆண்டுகளில், அதிகார மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். இப்போது படைப்பாற்றல் இல்லாதவர்களின் கைகளில் அதிகாரம் இருக்கலாம். இது ஒரு மத ரீதியான விஷயமாகவும் இருக்கலாம்... ஆனால், அது எதுவும் எனக்கோ, அல்லது என் கண் முன்னேயோ நடப்பதில்லை.

பாலிவுட் சினிமாவில் என்னுடைய ஆரம்பக் கால நாள்கள் அவ்வளவு இனிமையாக இருந்ததில்லை.' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், நடிகையும், எம்.பி.யுமான கங்கனா ரனாவத் தன் சமூகவலைதளப் பக்கத்தில், 'அன்புள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஜி, நான் ஒரு காவி கட்சியை ஆதரிப்பதால் திரையுலகில் கடுமையான பாரபட்சத்தையும் பாகுபாட்டையும் எதிர்கொள்கிறேன். ஆனாலும், உங்களை விட அதிக பாகுபாடு மற்றும் வெறுப்பு கொண்ட ஒரு மனிதரை நான் சந்தித்ததில்லை என்று சொல்ல வேண்டும்.

எனது இயக்கத்தில் உருவான 'எமர்ஜென்சி' படத்தின் கதையை உங்களிடம் சொல்ல நான் விரும்பினேன். கதை சொல்வதை விடுங்கள், நீங்கள் என்னைச் சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள். பிரசாரப் படத்தில் ஒரு பகுதியாக இருக்க நீங்கள் விரும்பவில்லை என்று என்னிடம் கூறப்பட்டது. முரண்பாடாக, 'எமர்ஜென்சி' அனைத்து விமர்சகர்களாலும் ஒரு தலைசிறந்த படைப்பு என்றே கூறப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர்கள்கூட, படத்தின் சமநிலையான அணுகுமுறையைப் பாராட்டி கடிதங்களை அனுப்பினர். ஆனால், நீங்கள் உங்கள் வெறுப்பால் குருடாகிவிட்டீர்கள். உங்களுக்காக நான் வருந்துகிறேன். இடதுசாரிகள் தங்கள் வெறுப்பு மற்றும் பாரபட்சத்தால் குருடாகிவிட்டனர். இளைய தலைமுறை அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜீவா
ஜீவா

ரசிகர்களின் அன்பில் நெகிழும் ஜீவா!

'ராம்', 'கற்றது தமிழ்', 'ஜிப்ஸி', 'ரெளத்திரம்', 'பிளாக்' எனப் பல தரமான படங்கள் கொடுத்தவர் நடிகர் ஜீவா. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூல் செய்து கொண்டிருக்கும் படம்தான் 'தலைவர் தம்பி தலைமையில்'.

முதலில் ஜனவரி 31-ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம், ஜனநாயகன் தள்ளிப்போனதால் பொங்கல் ரேஸில் இறக்கிவிடப்பட்டது. முன்னதாக, இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்துடன் 'வா வாத்தியார்' மற்றும் 'பராசக்தி' என இரு பெரிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகியிருக்கின்றன.

மலையாளத்தில் பேசில் ஜோசப் நடிப்பில் வெளியான 'பேமிலி' என்ற திரைப்படத்தை இயக்கிய நிதிஷ் சஹாதேவ் தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு மக்கள் மத்தில் நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கும் நிலையில், நடிகர் ஜீவா நெகிழ்ந்து தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ' 'தலைவர் தம்பி தலைமையில்' படத்துக்கு நீங்கள் வாரி வழங்கியிருக்கும் அளவற்ற அன்பிலும், அரவணைப்பிலும் நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போயிருக்கிறேன். உங்களது ஒவ்வொரு செய்தியும், ஊக்கமளிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் என் மனதை ஆழமாகத் தொட்டுள்ளது. நிச்சயமாக, என்னைப் பற்றி வரும் அந்த மீம்ஸ்கள் உட்பட!

அவை அனைத்தும் மிகுந்த அன்புடனும் ஆதரவுடனும் உருவாக்கப்பட்டுள்ளன. அவை இந்தப் பயணத்தை இன்னும் சிறப்பானதாக்குகின்றன. படம் பார்த்த, பார்க்கப் போகும் அனைத்துக் கண்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணி தியேட்டரில் மட்டுமே திரைப்படத்தைக் கண்டு மகிழுங்கள்!' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com