'நமது வாழ்க்கையின் உண்மைகளை ஒளிவுமறைவின்றி தரிசித்து, அதை அழகுணர்ச்சியுடன் சித்தரித்து அதையே உணர்வுபூர்வமாகவும் சொல்லி விட்டால் அது நல்ல சினிமா. டெக்னாலஜி, ஒளிப்பதிவுக்கு நிறைய சுதந்திரங்களையும், வசதியையும் கொடுத்திருக்கிறது. கமல் சார் படங்களில் இருக்கும் லைட்டிங் இப்போதும் ஆச்சரியம்! ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு கலர், ஒரு வெளிச்சம். அது அவரிடம் நான் பார்த்து வியக்கும் விஷயம்.
'தேவர் மகன்' ஒரு லைட்டிங். 'ஹேராம்' படத்துக்கு ஒரு லைட்டிங், 'நாயகன்' வேறு மாதிரி, 'தேவர் மகன்' களம் வேறு. அதற்குள் ஊடுருவிப் பார்த்தால், முழு சினிமாவையே கற்றுக் கொள்ளலாம். இதுவெல்லாம் அவரிடம் நான் பார்த்து வியக்கும் விஷயங்கள்.' சினிமாவின் நவீனத்துவம் உணர்ந்து பேசுகிறார் இயக்குநர் சூர்யபிரதாப். குறும்பட உலகில் இருந்து 'ரூட்' சினிமாவின் மூலம் அறிமுகமாகிறார்.
'எல்லோரைப் போலவே, நானும் சினிமாவின் ரசிகன். பார்த்த படங்களை மறுநாள் பள்ளி வளாகங்களில் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதோடு சரி. அந்த நேரங்களில் நான் பார்த்த 'தேவர் மகன்', 'ஹேராம்' போன்ற படங்கள் உள்ளுக்குள் சினிமா ஓட்டத்தைக் கொண்டு வந்து போட்டன. கதையாகவும், காட்சியாகவும் அந்த கதைகள் உள்ளுக்குள் விரிந்துகொண்டே இருந்தன. அப்போதுதான் குறும்படங்களுக்கான கதவுகள் தமிழ் சினிமாவில் திறந்தன.
கார்த்திக் சுப்புராஜ் மாதிரியான இயக்குநர்களோடு கலைஞர் டி.வி.யின் 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் வாய்ப்பு. நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பின்னர் சௌந்தர்யா ரஜினியிடம் 'கோச்சடையான்' படத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பு. எல்லாமே கேள்வி ஞானம் என்பார்களே... அதுதான் இது.
அந்தப் படத்திலும் ஒளியின் வித்தியாசமான அடுக்குகளை நேரில் இருந்து பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து எளிமையாக எப்படிப் படம் செய்வது என்பதை நோக்கியே நகர்ந்து வந்திருக்கிறேன். வாழ்க்கையை எளிமையாக வாழ்வதும், ஒரு படத்தை எளிமையாக எடுப்பதும் கஷ்டம். உணரக்கூடிய, புரியக்கூடிய, எல்லோருக்கும் புத்துணர்வு தரக்கூடியதுதான் சினிமா.
'ரூட்' வழி என்பது பொருள். இன்றைய வியாபார உலகம் வேறு மாதிரி இருக்கிறது. அதுவும் ஓ.டி.டி தளங்கள் உருவான பிறகு தமிழ் சமூகம் என்றில்லாமல் எல்லோருக்குமான தலைப்பை உருவாக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். அதனால்தான் ஆங்கிலத்தில் தலைப்பு. இது சினிமா வியாபாரத்தில் இப்போது தவிர்க்க முடியாதது. எல்லோரும் பொறுத்தருள வேண்டும். அதே நேரத்தில் கதையின் மனசாட்சியை இந்த தலைப்பு பிரதிபலிக்கும்.
காந்தியும் ஹிட்லரும் ஒரே தெருவில் இருந்தால் எப்படியிருக்கும்? அப்படி எழுகிற ஒரு சூழலை கடக்கிற சில மனிதர்களின் கதைதான் இது. சந்தோஷத்தை எதிர் கொள்கிற அதே நேரத்தில், உண்மையைப் பார்த்தால் மனுஷனுக்கு அவ்வளவு பயம். இதுதான் வாழ்வின் பெரும் சவால். சந்தோஷத்தை அடைவதற்காக ஒரு பொய் சொல்கிறோம்.
அது அந்த நேரத்தில் அழகாக இருக்கும். கீரிடமாக ஜொலிக்கும். ஆனால், உண்மை அம்மணமாக நிற்கும். அதனால்தான் உண்மையை கண்டு ஓடி ஒளிகிறோம். சந்தோஷம் மட்டுமே கண்ணுக்குத் தெரிய, பொய் துரத்த... உண்மை நெருக்க... பலர் சாமியாராகத் திரிகிறார்கள். சிலர் பைத்தியமாகிறார்கள். என்னைக் கேட்டால் உண்மையை நேருக்கு நேர் சந்திக்கிற தைரியம்தான் வாழ்க்கை. அது வலிக்கும். உயிரை எடுக்கும். ஆனால், அதுதான் சரி. இப்படியோர் அனுபவம் இங்கே சிலருக்குக் கைகூடி வருகிறது.
பெயர், கதையோடு தொடர்புடையது. இப்போதைக்கு இதை மட்டும்தான் சொல்ல முடியும். கதைக்கான புள்ளி ஆங்காங்கே செல்லும் சிறு சிறு பயணங்கள்தான். பொதுவாக சராசரி மனிதர்களுக்கு அனுபவம் குறைவுதான். மிஞ்சிப் போனால் தினமும் ஏழெட்டுப் பேரை புதிதாக சந்தித்துப் பேசினாலே அதிகம். ஆனால், போலீஸ் வாழ்க்கை அப்படியில்லை. ஒரு வழக்கோடு ஆறு மாதம் கூட பயணிக்க வேண்டியிருக்கும்.
அப்படிப் பார்த்தால் அவர்கள் சந்திக்கிற மனிதர்கள், அவர்களின் சூழ்நிலை எல்லாமே வித்தியாசமாக இருக்கும். சில வழக்குகள் ரொம்பவும் விசித்திரமாக, சிக்கலாக, அவிழ்க்க முடியாத புதிராக இருக்கும். அதற்கேற்ற மாதிரி இயங்குவதே சிரமமானது. இது சில சாமானிய போலீஸ் அதிகாரியின் கதை. இதற்காக நிறைய தரவுகள் தேவைப்பட்டன. அதையெல்லாம் ஆராய்ந்து கதை செய்திருக்கிறேன். நான் பார்த்த, கேட்ட, படித்த நிறைய விஷயங்களின் தொகுப்பு. இது த்ரில்லர் கதை.
ஹீரோ கௌதம் ராம் கார்த்திக். போலீஸ் வேடத்துக்கு ஏற்ற நடிகர். தனி ரசிகர் வட்டம் இங்கே உண்டு. அதைவிட அவரிடம் எந்த பிரச்னையும் இல்லை. கதையைக் கேட்டதும் சம்மதம் சொல்லி விட்டார். கதை கூடவே பயணிக்கிற மாதிரி ஓர் இடம் அவருக்கு. காதல், அன்பு, நேசம், பாசம் எல்லாம் வேலை செய்கிற இடத்தில் கிடைத்தால் எப்படியிருக்கும்?அப்படி ஒரு விதமாக கதை இருக்கும். படத்தில் அவருக்கு அருமையான ரோல். முதன் முறையாக போலீஸ் ரோல்.
நடித்துக் கொண்டு இருக்கும் போதே அவர் அதை உணர்ந்ததுதான் விசேஷம். சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர். எல்லாவற்றையும் உணர்ந்து பயணித்தார். அது எனக்கு பணியின் அருமையை புரிய வைத்தது. அது இல்லாமல் திருமணத்துக்குப் பின் அவர் நடிக்கும் படம் இது. நிச்சயம் ஏக எதிர்பார்ப்பு இருக்கும். தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகும் அபர்ஷக்தி குரானா அறிமுகமாகிறார். எந்த பந்தாவும் இல்லாமல் ஒரே போன்காலில் கதையை கேட்டு படத்துக்குள் வந்தது எனக்கு பெரும் ஆச்சரியம்!' என நிறைவாக முடிக்கிறார் சூர்யபிரதாப்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நவீன கல்வியும், பாரம்பரிய அறிவும்...
நல்ல சினிமாக்கள் பற்றி நிறைய கனவு உண்டு!
விவசாயிதான் நாட்டின் கதாநாயகன்!
பசித்தவனுக்கு ரொட்டியே கடவுள்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

